அதிகாலைத் தொழுகையை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று கூட்டாகத் தொழுவதை வழமையாக் கொண்ட
சஹாபாக்களில் அபூதுஜானா (ரலி) அவர்களும் ஒருவர்.
ஆயினும் அதில் சின்ன குறையென்னவென்றால்,
தொழுகை முடிந்த உடனேயே பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறிவிடுவார்.
இதனை நபி (ஸல்) அவர்களும் கவனித்தார்கள்.
ஒருநாள் அவ்வாறு வெளியேறும்போது அபூதுஜானாவை நிறுத்தி நபிகளார் கேட்டார்கள்.
"அபூதுஜானா…உமக்கு அல்லாஹ்விடம் கேட்பதற்கு எதுவுமே இல்லையா?”
அபூதுஜானா (ரலி):
"ஏன் இல்லை, அவனிடம் கேட்பதற்கு நிறைய இருக்கிறது அல்லாஹ்வின் தூதரே... ஒரு கண நேரம்கூட அவனுடைய உதவியின்றி என்னால் வாழ முடியாது" என்றார்.
அதற்கு நபிகளார் :
"அவ்வாறெனில் தொழுகை முடித்து நாங்கள் வெளியேறும்போது எங்களுடன் ஒன்றாக வெளியேறலாமே... அல்லாஹ்விடம் உமது தேவைகளையும் கேட்கலாமே" என்றார்.
அதற்கோ அபூதுஜானா (ரலி)
"அல்லாஹ்வின் தூதரே..காரணம் என்ன தெரியுமா? என்னுடைய அண்டை வீட்டுக்காரர் ஒரு யூதர். அவர் வீட்டு பேரீத்த மரத்தின் சில கிளைகள் என் வீட்டு முற்றத்தில் உள்ளது.இரவில் காற்றடித்து அம்மரத்தின் பழங்கள் என் வீட்டு முற்றத்தில் விழுகின்றது.
தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலைவிட்டு நான் ஏன் வேகமாக வெளியேறுகிறேன் தெரியுமா? என் குழந்தைகள் தூக்கத்திலிருந்து எழுவதற்குள் அந்தப் பழங்களை எல்லாம் பொறுக்கி ஒன்று சேர்த்து அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காகத்தான். இல்லையென்றால்,பசியுடன் இருக்கும் என் குழந்தைகள் நான் செல்வதற்குள் எழுந்து அவற்றைப் பொறுக்கி சாப்பிட்டுவிடுவார்கள். இறைத் தூதரே..அல்லாஹ்வின் மீது ஆணையாக... ஒருநாள் என் பிள்ளைகளில் ஒருவர் நான் செல்வதற்குள் ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து சாப்பிடத் துவங்கிவிட்டது.அதன் வாயில் விரலை விட்டு அதனை வெளியே எடுத்து தூர வீசினேன்.அவன் அழுதான்.அதற்கு நான் கூறினேன்..அன்பு மகனே மறுமையில் நம்மை படைத்த அல்லாஹூவுக்கு முன்னால் உனது தந்தை திருடன் என்ற பட்டத்துடன் நிற்பது குறித்து உனக்கு வெட்கமாக இல்லையா என்றேன்..?”இதைக் கேட்டதும் அவனும் அமைதியடைந்தான்."
இதை கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலங்கினார்கள்...
அபூதுஜானா (ரலி) கூறிய இந்தச் செய்தியை அறிந்த அபூபக்கர் (ரலி), நேராக அந்த யூதனிடம் சென்று, அந்தப் பேரீத்த மரத்தை விலைக்கு வாங்கி அதனை அபூதுஜானா (ரலி) மற்றும் அவருடைய குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அபூபக்கர் (ரலி) அந்த மரத்தை விலைக்கு வாங்கியதன் உண்மையான காரணத்தை அறிந்த அந்த யூதர் என்ன செய்தார் தெரியுமா…?
தமது குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வேகமாக நபிகளாரைச் சந்திக்க விரைந்தார். தானும் தமது குடும்பமும் இஸ்லாத்தில் நுழைவதாக அறிவித்தார்.(அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்)
"பிறருடைய பேரீத்தம் பழங்களை அவர்களுக்கு தெரியாமல் தமது பிள்ளைகள் சாப்பிட்டுவிடக் கூடாதே…அது ஹராம் அல்லவா.." என்று அபூதுஜானா (ரலி) அஞ்சினார்... குழந்தையின் வாயில் விரலைவிட்டு சாப்பிட்ட பழத்தை வெளியே எடுத்து தூர வீசினார்...
அது அன்று...
ஆனால் இன்று…
அடுத்தவர் பொருளை அபகரித்து உண்பதற்கோ அநியாயமாகப் பிடுங்குவதற்கோ ஒருசிலர் துளியும் வெட்கப்படுவதில்லை... அது ஹராம் என்ற எண்ணம்கூட அவர்களுக்கு இருப்பதில்லை...
நபித்தோழர்கள் கொண்டிருந்த ஆழமான இறைநம்பிக்கையின் காரணத்தால் அவர்களது நடத்தையும் செயல்பாடுகளுமே அழைப்புப் பணியின் ஆதாரமாகத் திகழ்ந்தது.
இன்றுபோல் மணிக்கணக்கில் அழைப்புப் பணி குறித்து
அவர்கள் பயான் பண்ணிக்கொண்டிருக்கவில்லை.
வாழ்ந்து காட்டினார்கள்...
ஆம்....
எனதன்பு நண்பர்களே...
உபதேசம் என்பது சொல் அல்ல செயல்...
உபதேசம் என்பது வெறும் வார்த்தையல்ல,வாழ்ந்து காட்டுவது....அறிவுரையென்பது...நாமும் பின்பற்றுவது....
Tags:
படித்ததில் பிடித்தது