ஐக்கிய கல்ஹின்னைக்கான முதற்கட்ட நகர்வை ஆரம்பிப்பது எப்படி?

ஐக்கிய கல்ஹின்னைக்கான முதற்கட்ட நகர்வை ஆரம்பிப்பது எப்படி?


அண்மைக் காலத்து "வீடியோச்சமர்" காரணமாக, சர்வதேசத்தின் மத்தியில் கல்ஹின்னைக் கிராமம் கூனிக் குறுக வேண்டிய நிலைமை  ஏற்பட்டு விட்டமையினால் இக்கிராமம், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய நிலைக்கு ஆளாகிவிட்டது!

காரணங்களை மீண்டும் மீண்டும் நாம் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றோம்! 

எட்டு வருட காலமாக, கல்ஹின்னை மக்களின் ஊடகமாக, சிறப்பாகப் பணி செய்துகொண்டு வரும் "வேட்டை" ஊர் மக்களின் நல்லது, கெட்டதுகளின் போது  நல்ல பல கருத்துக்களைப் பதிவிட்டும், ஆலோசனைகள் கூறியும் வந்துள்ளது.  குறிப்பாக, பாடசாலை, பள்ளிவாசல், மத்ரஸா விவகாரங்களில் ஏற்பட்ட வேறுபட்ட பல சிக்கல்களின் போதெல்லாம், ஊர் ஊடகம் என்றவகையில் நடுநிலையாக இருந்து, கருத்துக்களைப் பதிவிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளதையும் யாவரும் அறிவர். 

கல்ஹின்னையிலிருந்து போதைபொருள் பாவனையைத் துடைத்தெறிவதில் "வேட்டை"யின் பங்கு மகத்தானது! இதன் மூலம் "வேட்டை" சிலரது விமரிசனத்துக்கு உள்ளானபோதிலும், ஊருக்கான தனது ஊடகப் பங்களிப்பை மிகவும் பொறுப்புடன் செய்து வந்ததில் "வேட்டை" புலங்காகிதம் அடைகின்றது! 

அந்தவகையில், இப்போது ஊருக்குள் ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சினைக்கு "வேட்டை" தனது கருத்துக்களை  அவ்வப்போது பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றது! 

பணமாக அல்லது பொருளாகக் கொடுத்தால் நான்காக மடிந்து காலாகாலத்துக்கு வாலை ஆட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல கருத்துக்களைக் கொடுக்கின்றபோது, அதனை மெச்சுகின்ற பண்பு இல்லாதது வேதனைக்குரிய விடயமாகும்! 

இனி விடயத்துக்கு வருவோம்! 

முஸ்லிம் மக்களின் சமய, சமூக, மற்றும் வாழ்வியல் சம்பந்தமான அனைத்து விவகாரங்களும் பள்ளிவாசலை அடியொட்டியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், கல்ஹின்னை ஜும்ஆப்பள்ளிவாசலும் ஊர் மக்களின் வணக்க வழிபாடுகளுக்கும், சமூக நடவடிக்கைகளுக்குமான மத்திய நிலையமாக  ஒரு காலத்தில் இருந்து வந்தமையினால், மக்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை, இறைபக்தி என்பன மேலோங்கி இருந்ததை எவரும் மறுக்க முடியாது! 

ஊரில் நடக்கின்ற அண்மைக்கால சம்பவங்களைப் பார்க்கின்றபோது, அவை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதைக் காண முடிகின்றது! 

ஊரின் குடிப்பரம்பல் அதிகரித்த நிலையில், குடியிருப்புகளின் எல்லைகள் விஸ்தரித்துச் செல்ல, விஸ்தரிப்பின் கடைசி எல்லையிலிருந்து மக்களின் நாளாந்த வணக்க வழிபாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பள்ளிவாசல் தூரப்பட்டுப் போய்விட்டமை உணரப்பட்டபோது,  ஊருக்குள்  'தைக்கியாக்கள்'  பல தோன்றலாயின! 

வாராந்த ஜும்ஆ ஒன்றுகூடல்  வழமைபோல் அனைவரும் பெரிய பள்ளிவாசலில் திரண்டு வருகின்றமையானது,  கிராமத்தின் தொன்மையான பள்ளிவாசல் ஒன்றுக்கு, ஒழுக்க விழுமியங்களிலும், இறைபக்தியிலும் சிறந்து விளங்கும் கண்ணியமிக்க மக்கள் கூட்டத்தினரால் வழங்கப்பட்ட தனித்துவம் நிரம்பிய கௌரவமாகக் கருதப்படுகின்ற நிலையிலும் கூட, பிரச்சினைகளுக்கெல்லாம்  அடிப்படையாகிவிட்ட, ஊரைக்  கொண்டு நடாத்துவதற்காக நிர்வாகக் குழுவொன்றைத் தேர்ந்தெடுப்பதில், கல்ஹின்னை மக்கள் ததிக்கனத்துவம் ஆடிக் கொண்டிருப்பதுதான்  வருந்துதற்குரிய விடயமாகும்! 

ஊருக்குள்  நிகழ்ந்துவரும் பிரச்சினைகள் பற்றியும்,'வீடியோச்சமர்" பற்றியும் ஊரவர் பேசுவதைக் கேட்கின்றபோது, எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும், எதிர்பார்க்கின்ற பலனை அடைந்துகொள்ளவும் வாய்ப்பில்லாத  'மதில் மேல் பூனை'யின்  நிலைக்கு  கல்ஹின்னை ஆகிவிட்டதோ என்றுகூட, எண்ணத் தோன்றுகின்றது! 

பரந்த கண்ணோட்டத்தில் பிரச்சினைகள் நோக்கப்பட்டு,  அவற்றின் ஆணிவேர் கண்டறியப்பட்டு, ஊர் மக்களால் அவை நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டியுள்ளது! 

ஊர் மக்கள்  ஒவ்வொருவரும் தங்களது சக்திக்கும், தகுதிக்கும் உட்பட்ட வகையில் பங்களிப்புக்களை வழங்கி இப்பிரச்சினைக்கு என்ன செய்யலாம் என்று கலந்தாலோசிக்க வேண்டியது, காலத்தின் தேவையாகும். 

இப்பணியை ஆரம்பிக்க,  குழுவொன்று தெரிவு செய்யப்பட்டு, செயற்படுத்தப்பட வேண்டியுள்ளது! குழுவுக்கான பொறுத்தமானவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது, எவ்வாறு ஒன்று கூட்டுவது, அதனை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பன  சிந்திக்கப்பட  வேண்டிய விடயமாகும். முக்கியமாகக் குழு அங்கத்தவர்களுக்கான தகுதி என்ன என்பதை வரையறுக்க வேண்டியுள்ளது! 

கல்வித் தகைமையுள்ள, இஸ்லாமிய அடிப்படைகளை எடுத்து நடக்கக்கூடிய, சமூகத்தில் ஓரளவு நல்ல பெயரோடு வாழ்ந்துவரும், எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கத்துவப் பொறுப்பில்லாத, சமூகப் பணியில் ஆர்வமுள்ள, அல்லாஹ்வுக்காக தூய்மையாக செயற்படும் பக்குவம் கொண்ட, சமூக விவகாரங்கள் பற்றிய தெளிவுள்ள, சமூகத்திலிருந்து வரும் எந்த விமர்சனங்களையும் அறிவார்ந்த ரீதியிலும், நிதானமாகவும் கையாளும் பக்குவம் கொண்டவர்கள், எத்தனை பேர்களைத்   தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற முதற்கட்ட நகர்வைப் பூர்த்தி செய்துவிட்டு, அடுத்த கட்ட நகர்வாக, அவர்களுள் எந்த நால்வரை போஷகர்களாக்க வேண்டும் என்று தீர்மானித்த பின், ஒரு தலைவரையும், தேவைக்கேற்றவாறு பல காரியதரிகளையும்  தெரிவு செய்து கொள்ளலாம்! 

இவ்வாறு தெரிவு செய்யப்படும் தலைவரே பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் தலைவராக, 'வக்ப்' சபைக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டுமென்ற இணக்கப்பாட்டிற்கு வருவதே இன்றைய ஊர்ப் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கான உன்னத வழி என்று நாம் கருதுகின்றோம்! 



 


 


Post a Comment

Previous Post Next Post