இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும்!

இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும்!


தெளிவான கண்ணோட்டங்களைக் கொண்டும், நன்னம்பிக்கைகளைக் கொண்டுமே உள்ளங்கள் அமைதியடையும். தெளிவற்ற கண்ணோட்டங்கள் உள்ளத்து நிம்மதியைக் கெடுத்து விடும்.

அந்த வகையில், இறைநம்பிக்கையாளர்கள்,  உலகியல்வாதிகள் என இரு சாரார் உலகில் வாழ்கின்றனர். மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் குறித்து இவ்விரு சாராரும் வெவ்வேறான கண்ணோட்டங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இறைநம்பிக்கையாளர்கள் ஒரு விசயத்தை அணுகும் விதத்திற்கும், உலகியல்வாதிகள் அந்த விசயத்தை அணுகும் விதத்திற்கும் மிகப் பெரிய அளவிலான வேறுபாடு இருக்கிறது.

நம்பிக்கையாளர்கள் மனித அறிவு, ஆற்றலின் எல்லையை அறிந்தவர்கள். எல்லாவற்றிலும் இறைவனின் நாட்டமே முழுமையாகச் செயல்படுகிறது என்பதையும், அவனுடைய அனுமதியின்றி எதுவும் நிகழ்ந்துவிட முடியாது என்பதையும், அவனுடைய நாட்டத்திற்கு குறுக்காக எந்தவொன்றும் வந்துவிட முடியாது என்பதையும், அவனால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதையும் அறிந்துவர்கள்; அதனையே உறுதியாக நம்புகின்றவர்களும் கூட.  உலகியல்வாதிகளின் நம்பிக்கை வேறு விதமானது. மனித அறிவாலும், முயற்சியாலும் எதனையும் சாதித்துவிட முடியும் என்று நம்புபவர்கள்! தங்களின் இயலாமை வெளிப்படும் இடங்களில், தமது சக்தியால் எதையும் சாதித்து விடலாம் என்று நினைப்பவர்கள். இறைவன்  குறித்து அவர்கள் கண்ணோட்டத்தில் தெளிவிருக்காது. அவர்களின் செயற்பாட்டிலும் பெரியளவில் அது தாக்கம் செலுத்தாது.

இறைவனின் நாட்டம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்; ஒரு புறம் மனித அறிவை,ஆற்றலை முழுமையாக நம்புவார்கள். இன்னொரு புறம் புரியாமையின் பக்கம் அடைக்கலம் ஆகிவிடுவார்கள்.
 
நம்பிக்கையாளர்கள் இக்கட்டான சூழலிலும் கூட  இறைவனின் உதவியை எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருப்பார்கள்; அது இறைவனைக் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டத்திலிருந்து வெளிப்படக்கூடியது. ஆகவே அவர்கள் நிராசையடைவதில்லை. இழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக்கொள்கின்றார்கள். அவற்றில் ஏதோ வகையில் நன்மை இருக்கலாம் என்று கருதுவார்கள். 

உலகியல்வாதிகளால் அப்படி இருக்க முடியாது. சிலசமயங்களில் மட்டுமீறிய தன்னம்பிக்கையினாலும், விரக்தியினாலும் பாதிக்கப்பட்டு விடுவார்கள்!

செம்மைத்துளியான்


 


 


Post a Comment

Previous Post Next Post