பொறாமை தவிர்ப்போம்!

பொறாமை தவிர்ப்போம்!

Jealousy is a disease..get well soon சரியான பழமொழி.

ஒருவர் மற்றவரின் அறிவு அழகு திறமை சாதனை ஆகியவற்றைப் பார்த்து தன்னிடம் இல்லையே என்று நினைப்பதுதான் பொறாமை..

பொறாமை குணம் கொண்டவர்களுக்கு இயற்கை தரும் பரிசு தோல்வி. போட்டி போட்டு ஜெயிப்பதை விட்டு விட்டு பொறாமை கொண்டு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டுமா?

குடிசையில் வாழ்பவன் அண்ணாந்து அடுக்குமாடி பங்களாவில் வாழ்பவனைப் பார்த்து பொறாமை கொண்டால் நஷ்டம் பொறாமை கொள்பவருக்குத்தான். பலமுறை தோல்வி கண்டவர் எப்படி ஒரு முறை வெற்றி பெற்றார் என்பதை ஆராய்ந்து அதைப் பின்பற்றுவது புத்திசாலித்தனமான ஒன்று.

இதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையாக நம் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.

நாம் மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்கிறோமா என்று நாமே சுய அலசல் செய்து கொள்ள  வேண்டும். பொறாமை இல்லை என்று சொன்னால் நல்லது. இருந்தால் திருத்திக் கொள்ளலாம். 

அது தான் நம் மனம் உடல் இரண்டிற்கும் நல்லது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் நன்றாக படித்தாலும் எதையும் கற்பூரமாக பிடித்துக் கொண்டு படிக்கும் சக மாணவர்கள் கண்டு பொறாமை வருவது உண்மை. நமக்கு ஏன் அந்த திறமை இல்லை என்ற ஏக்கம் வருவது சகஜம்.

அது பொறாமை என்றால் அப்படியே வைத்துக் கொள்ளலாம். அதற்காக அந்த மாணவர்களை பிடிக்காமல் போகக் கூடாது. வியந்து பார்த்து அவர்கள் எப்படி அந்த திறமையை பெற்றார்கள் என்று அந்த யுக்தியை கையாள்வது சரியே.

தோழி ஒருத்தி தன்னுடன் படிக்கும்போதே பாங்க் எக்ஸாம் எழுதி தேர்ச்சி பெற்று பாங்க் வேலை கிடைத்தபோது தன் திறமை மேல் சந்தேகம் வந்ததாக கூறினாள். தான் மக்கு தானோ என்று முடிவு செய்து அவர்களை பார்த்து ஏங்கியது பொறாமை என்றால் யெஸ் பொறாமைதான்‌ என்றும் கூறினாள். அந்த பொறாமை எனும் நோயிலிருந்து விடுதலை பெற நிறைய சுய அலசல் செய்து மீண்டு வந்தார்.

இந்த விடாமுயற்சி என்ற அஸ்திரத்தைதான் பயன்படுத்தாது தான் பெரிய தவறே என்பதை உணர்ந்தார். ஒரு முறை எழுதியதும் எல்லோரும் வெற்றி பெற்று விடுவதில்லையே. ஏக்கம் பொறாமை தவிர்த்து முட்டி மோதி முயற்சி செய்திருக்க வேண்டும். வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ விடாமுயற்சி என்ற எண்ணம் தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கும்.

இப்படி வாழ்க்கையில் பல கட்டங்களில் பலர் அதுவும்  வேலைக்குச் சென்று கொண்டு வீட்டையும் கவனித்து ஆளுமை குணத்துடன் ஓடி உழைக்கும் பெண்களைக் கண்டால் பொறாமை வரும். அது கண்டிப்பாக ஏக்கத்தின் வெளிப்பாடே தவிர பொறாமை அல்ல. நம்மால் ஏன் முடியவில்லை என்ற ஏக்கம் மட்டுமே. நம்மில் எத்தனை பெண்கள் வேலைக்குச் சென்று கொண்டு மற்ற பணிகளை திறம்படச் செய்து வருகிறார்கள். வேலைக்கு செல்லாதவர்களும் இங்கு தங்கள் வீட்டு வேலைகளுக்கு நடுவே ஆர்வத்துடன் கை வேலைகள் பல செய்து அசத்துகிறார்கள்.

பொறாமை வரலாம். அது மற்றவர்கள் ஏற்றத்தை  தடுப்பதாக இருக்கவே கூடாது. அவர்கள் போல நாமும் உயர முயற்சி செய்ய வேண்டும். அதுதான் பொறாமை நோய்க்கு மருந்து.

kalkionline


 


 


Post a Comment

Previous Post Next Post