அனைவருக்குமே தங்களது எதிர்காலம் வளமாக, நலமாக, மகிழ்ச்சியாக அமையவேண்டும் என்கிற ஆசை இருக்கும், ஆனால் அதே சமயம் எதிர்காலம் குறித்த அச்சங்களும், எதிர்மறை கண்ணோட்டங்களும் இருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய நேர்மறை எதிர்பார்ப்பும் கண்ணோட்டமும் ஒருவரின் மகிழ்ச்சியை எவ்வாறு அதிகரிக்கும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
எதிர்மறை எதிர்பார்ப்புகள் ஏன்?
எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும்போது எதிர்மறையாக யோசித்து இப்போது உள்ள மகிழ்ச்சியான மனநிலை மற்றும் நிம்மதி இரண்டையும் தொலைத்து விடக்கூடாது. அதற்குப் பதிலாக நேர்மறையான எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக விடுமுறையில் குடும்பத்தினருடன் ஒரு டூர் செல்ல திட்டமிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அந்தப் பயணத்தைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டமும் எதிர்பார்ப்பும் மிக அவசியம். பயணத்தின்போது ஏதாவது இடையூறுகள் நேர்ந்துவிடுமா? பயணிக்கும் ரயில் அல்லது கார் போன்ற வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுமா? அங்கே கடற்கரையைப் பார்வையிடும்போது சுனாமி வந்து விடுமா என்பது போன்ற தேவையில்லாத கற்பனைகளும் எதிர்மறை சிந்தனைகளும் பயணத்தை எதிர்கொள்ள அச்சத்தை உருவாக்கிவிடும். மேலும் தற்போதைய மகிழ்ச்சியையும் நிம்மதியையும் பலி கொடுக்க நேரிடும்.
நேர்மறையான எதிர்பார்ப்புகள்;
ரயில், பஸ் அல்லது கார் போன்றவற்றில் பயணிக்கும் போது சுகமான இனிமையான அனுபவங்கள் அமையப் போகின்றன என்கிற நேர்மறையான எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். கடற்கரையில் கடல் அலைகளில் கால் நனைத்து விளையாடுவது, சிப்பிகளை சேகரிப்பது மற்றும் கடற்கரைப் பின்னணியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை புகைப்படம் எடுப்பது என்பது போன்ற இனிய நினைவுகளை நேர்மறையாக எண்ணுவதன் மூலம் அந்த பயண இனிமையாக அமைவது மட்டுமல்லாமல் தற்போதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.
வளமான எதிர்காலத்திற்கு வித்திடும் நேர்மறையான எதிர்பார்ப்புகள்;
இதேபோன்று இலக்குகளை அடைவதற்கும் நேர்மறையான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டால் வளமான எதிர்காலம் அமைவது உறுதி. அதற்குத் தேவையான படங்கள் மற்றும் வார்த்தைகளை சேகரிக்க வேண்டும். தான் எந்தத் துறையில் பிரகாசிக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறாரோ அந்தத் துறையில் சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும், பிரபலங்களின் வெற்றி பெற்ற மனிதர்களின் புகைப்படங்களை, கத்தரித்து நோட்டில் ஒட்டிக் கொள்ளலாம்.
தனக்கு உற்சாக மூட்டக்கூடிய. ஊக்கமளிக்கக்கூடிய வாக்கியங்களை கரும்பலகையில் அல்லது ஒயிட் போட்டில் எழுதி வைக்கலாம். நோட்டுப் புத்தகங்களில் அல்லது சிறிய ஒட்டக்கூடிய (sticky notes) காகிதங்களில் எழுதி கண்ணில்படும் இடங்களில் ஒட்டி வைக்கலாம்.
நேர்மறையான விளைவுகளை காட்சிப்படுத்தி அதில் சந்தோஷம் அடையலாம். தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இலக்குகளை காட்சிப்படுத்துவதும், கற்பனை செய்வதும் உத்வேகம் அளிக்கக்கூடிய சொற்றொடர்களை வாசிப்பதும் கண்ணால் காண்பதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இவற்றை தினமும் பழக்கப்படுத்தும்போது மூளை தன்னிச்சையாக இந்த யோசனைகளை செய்யத் தொடங்கும். சிந்தனைகள் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்ககளையும் அமைத்துத் தரும்.
எனவே எப்போதும் நேர்மறையான சிந்தனைகளும் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் கொண்டிருக்கும்போது அது தன்னிச்சையாக, மட்டற்ற மகிழ்ச்சி கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் மூலம் ஒரு மனிதன் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். அதேபோல எதிர்காலத்தில் கனவுகள் நிஜமாகி, அப்போதும் ஒருவரால் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும் என்பது உறுதி.
kalkionline
Tags:
படித்ததில் பிடித்தது