
(ஏக்கம்)
அன்பாக நான் ஈன்ற
"அல்மனார் செல்வங்களை"
அன்புத்தாய் அழைக்கின்றேன்...!
அறிவுப் பாலூட்டி
அழகு பார்த்த உன் தாய்க்கு
ஆதரவு தர அழைக்கின்றேன்...!
அகரங்கள் கற்றுத் தந்து
சிகரங்கள் நீ தொட
அத்திவாரமிட்ட- உன்
அறிவுத் தாய் அழைக்கின்றேன்...!
மழலைகளாய் அன்று - என்
மடியில் தவழ்ந்து
விளையாடி மகிழ்ந்து
மலைகளாய் இன்று
உயர்ந்து நிற்கும்
அன்புப் பிள்ளைகளின் முகம் காண
ஆவலாய் அழைக்கின்றேன்...!
தொண்ணூறுகள்
தொட்டு நிற்கும்
அன்பு அன்னை அல்மனாரை
ஆசையுடன் தொட்டுப் பேச
பாசமாய் அழைக்கின்றேன்...!
ஒருமுறை...
ஒரேஒருமுறையேனும்...
உன் அன்னையின்
முகம் காண வாராயோ...?
(தேற்றம்)
என் கல்விக்கு
முதல் முகவரி தந்த
ஆருயிர் அன்னையே!
தயவுடன் என்னை
மன்னிக்க வேண்டுகிறேன்!
இத்தனை காலங்களாய்
மறந்தேன் என் கடமை!
இதுவல்லவோ பெரும் மடைமை!
அல்மனார் அன்னையே! - நீ
என்றும் எமது உடைமை!
தாயின் நலனதில்
"அக்கறை" இல்லாது
"அக்கரை"யில் இருந்து விட்டேன்!
நோயில் உன்னைத்
தத்தளிக்க விட்டுவிட்டேன்!
கவலை கொள்ளாதே தாயே!
துவளாது உன்னைத்
தோளில் சுமந்திடவும்
தொலைந்து போன எம் உறவுகள்
உறுதி பெறவும்
உடனே உன்னிடம்
ஓடோடி வருகின்றேன்!
கல்ஹின்னை ஹில்மி ஹலீம்தீன்
(அல்மனார் பழைய மாணவர் - O/L 1991)
Tags:
கவிதை