சாரா சாச்சியை சந்தித்தாயா... ?

சாரா சாச்சியை சந்தித்தாயா... ?


மகளே..... அமல்... 
நீ சாரா சாச்சியை சந்தித்து விட்டாயா? 

தரஜாக்கள் உயர்த்தப்பட்ட நிலையில்
நீ வரும் தகவல் அறிந்து சுவன வாசலிலேயே காத்திருந்திருப்பாள் சாரா சாச்சி, உன்னை அன்புடன் அழைத்து செல்ல, இருபது வருட கதைகள் பேசி மகிழ.... 

எனக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்க வில்லை. மூன்று மாதமாய் ஹாஸ்பிடல் வாசலிலேயே காத்திருந்தேன் என்றாவது ஒருநாள் உன் வாப்பா என்னை அழைப்பான், "இதோ உன் மருமகள்" என்று என் கைகளில் தருவான் என்று ஏங்கி நின்றேன். உன் பிஞ்சு கைகளினால் என் விரல் கோரிப்பிடித்து மாமாவின் முகம் பார்த்து சிரிப்பது போல் பலமுறை கனவுகள் கூட கண்டேன், ஆனால் அந்த நாள் கனவாகவே போய்விட்டது. 

உம்மாவின் வயிற்றில் இருக்கும் போது இந்த மாமாவின் குறும்புச் சண்டை மற்றும் கடினமான குரல் கேட்டு மாமா முரடன் என்று நினைத்து விட்டாயா? அதனால்தான் மாமாவிடம் வர மறுத்து விட்டாயா? 

மாமா உன் மேல் வைத்துள்ள அளவுகடந்த பாசத்தை நீ நன்றாக அறிவாய் என்று எனக்குத் தெரியும். அல்லாஹ் அவனுக்கு பிடித்தவர்களை அவனடி சேர்த்துக் கொள்வான் என்பதும் எனக்குத் தெரியும்.

உன் உம்மாவும் வாப்பாவும் நற்குணங்களுக்கு முன்மாதிரியாய் இருந்து, நல்அமல்களிலேயே காலத்தை கடத்தி உன்னை பெற்றெடுத்ததனால் நீ ஒரு சொர்க்கக் கனியாகவே பிறந்து விட்டாய், 

உன்னைப் பார்த்த ஒவ்வொருவரின் வாய் சொல்லுமே இதற்கு சாட்சி. ஆதலால்தான் அல்லாஹ் உன் அந்தஸ்திற்கு உலகை விட சொர்க்கம்தான் பொருத்தமான இடம் என்று நிர்ணயித்து விட்டான்.  உன்னை ஒரு சொர்க்கத்துச் சிட்டாகவே ஏற்றுக்கொண்டான். 

உன் சாரா சாச்சியிடம் சொல். இருபது வருடங்களுக்கு முன் அவள் சொர்க்கப் பயணம் சென்றபோது சிறுபிள்ளையாக இருந்த என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை விட, இன்று உன் வருகைக்காக பல கனவுகளுடன் காத்திருந்ததால் நீ ஏற்படுத்திய தாக்கம் பல மடங்கு அதிகம் என்று. அவளும் சற்று பொறாமை கொள்ளட்டும், அமலின் மாமாவின் அன்பை பார்த்து..... 

சாரா சாச்சியையும் நான் விசாரித்ததாக  சேதி சொல். 

என் ம(ரு/று)மகளே.....அன்பின் அமலே.....
காலத்தால் ஆற்ற முடியாத தாக்கத்தை விதைத்து சென்றுவிட்டாய் என்னுள்...

எனக்கும் ஒரு மகள் பிறக்க வேண்டும், அவளும் உன்னை போலவே இருக்க வேண்டும். 

இப்படிக்கு,
உன் உருவம் கண்களில் மங்காமல் இன்னும் கலங்கிய கண்களுடன் உன் அன்பு மாமா,
அம்ஹர்அமீன்


Post a Comment

Previous Post Next Post