லண்டன் நகரிலிருந்து உலகளாவிய, தஃவா அழைப்புப் பணியில் அல்ஹாஜ் அமானுல்லாஹ் கமாலுத்தீன்!

லண்டன் நகரிலிருந்து உலகளாவிய, தஃவா அழைப்புப் பணியில் அல்ஹாஜ் அமானுல்லாஹ் கமாலுத்தீன்!



லண்டன் குளோபல் தஃவா சேவையின் ஸ்தாபகர் அல்ஹாஜ் அமானுல்லாஹ் கமாலுத்தீன் அவர்கள் சுமார்  கால் நூற்றாண்டுகளாக  ஜக்கிய இராச்சியத்திலிருந்து உலகளாவிய ரீதியில் தஃவா சேவையும், சமூக சேவையும் செய்து வருகின்றார். இவரது தஃவா சேவையின் மூலம் உலகின் பல் வேறு நாட்டு மக்கள் பிரயோசனம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல எழுத்தாளரும் சமூக சேவையாளருமான இவர், தனது ‘அமானத்ஸ்’ என்ற பேனாவின் மூலமும் எழுத்துலகில் சமூக சேவை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நாடறிந்த எழுத்தாளரும் பன்னூலாசிரியருமாகிய இவர், ஜக்கிய இராச்சிய குளோபல் தஃவா சேவையின் ஸ்தாபகராகவும், ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலைய 'அல் பலாஹ்' கல்வி நிலையத்தின்   (Al Falah Education Centre-UK) தலைவராகவும், ஜக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்தின் (Sri Lankan Muslim Cultural Center- UK)  உப தலைவராகவும், ஜக்கிய இராச்சிய கல்ஹின்னை நலன்புரிச் சங்கத்தின் (GWA - UK) துணைச் செயலாளராகவும், 'தாருத் தக்வா' மகளிர் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகராகவும், அதன்  தலைவராகவும், ஐக்கிய இராச்சியத்திலும், இலங்கையிலும், இந்தியாவிலும் பல சமூக சேவை நிறுவனங்களுடன் இணைந்து,  சமூகத்துக்குச் சேவை செய்து வருவதுடன், ஹஜ் உம்ரா செய்பவர்களுக்கு வழிகாட்டுவதை சுமார்  40 வருடங்களாக, சேவையாகச் செய்து வருகின்றார்.

அத்தோடு RJ Travels & Tours Ltd UK     என்ற பிரயாண நிறுவனத்தின் மூலம் லண்டனிலுள்ள ஹாஜிகளுக்கு வழிகாட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.

சுமார்  அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு எனது பள்ளித்தோழனாகவிருந்த அமானுல்லாஹ் கமாலுத்தீன் அவர்களை, நேரில் சந்திக்க கிடைக்காத போதிலும் அண்மையில் இணைய வழித்தொலைத் தொடர்பால் மீண்டும் இணையக் கிடைத்தது!

'ஊடகவியலாளர்' என்ற அடிப்படையில் அவரைப் பற்றியும் அவரது உலகளாவிய சேவைகள் பற்றியும் எனக்கு எழுதத் தோன்றியது. அவரது பேட்டிகள் பலவற்றிலிருந்து அவரது சேவைகள் பற்றிய விவரங்களை அறிந்துகொண்ட நான்,  அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு அமானுல்லாஹ் கமாலுத்தீன் அவர்களும்  நானும் கீழைத் தேசங்களின் சுவர்க்கபுரியாக  வர்ணிக்கப்பட்டுவந்த, இலங்கைத்திரு நாட்டின் மத்திய பிரதேசத்திலுள்ள  மலையகத்தின் 'தமிழகம்' என்று போற்றப்படும் பசுமைக் கிராமமாகிய கல்ஹின்னையில் அமைந்திருக்கும் அல்-மனார்  தேசியக் கல்லூரியில்  ஆரம்பக் கல்வியை கற்றோம். எழுத்துத்துறையிலும், கலைத்துறையிலும் சிறு வயதிலிருந்தே ஆர்வம் கொண்ட நண்பர்  அமானுல்லாஹ் அவர்கள் கல்லூரியில் கற்கின்ற காலத்திலிருந்தே கதை, கட்டுரை, கவிதை எழுதுவது, கை எழுத்து நூல்கள் வெளியிடுவது மட்டுமல்லாமல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலைஞனாகவும் இருந்துள்ள அவர், தமது ஓய்வு நேரங்களை  தஃவா பணிகளிலும், தேசிய நாளிதழ்கள், சஞ்சிகைகளுக்கு சன்மார்க்க விடயங்களை எழுதுவதிலும், நூல்களை எழுதுவதிலும்  செலவழித்து வந்தார்.

அத்துடன்  ‘மாணவர்  பயிற்சி மன்றம்' மூலம், கலை நிகழ்ச்சிகள் செய்து வந்தது மட்டுமல்லாமல், அக்காலத்தில் ‘இஸ்லாமிய பயிற்சி மன்றம்’ என்ற மார்க்க வழிகாட்டல் நிகழ்வுகளில் இணைந்து செயல்பட்டதிலிருந்து அவருடைய தஃவா பணி ஆரம்பமானது எனக் கூறலாம்!

1957ம் ஆண்டு அல்ஹாஜ் கமாலுத்தீன்- ரஹ்மா உம்மா தம்பதியின் மூத்த மகனான அமானுல்லாஹ் கமாலுத்தீன் அவர்கள்,  3 ஆண் சகோதரர்களையும் 11 பெண் சகோதரிகளையும் உடன் பிறந்தவர்களாக பெற்றிருப்பதுடன்,  அவரது தாயின் சகோதரர் காலம் சென்ற மர்ஹூம் கலாநிதி டாக்டர்  மவ்லவி ஸலாஹுத்தீன் அவர்களின் மூத்த புதல்வியும், பிரபல கொடை வள்ளலும், தனவந்தருமான டாக்டர்  அல்ஹாஜ் முஸ்லிம் ஸலாஹுத்தீன் அவர்களின் மூத்த சகோதரியுமான கல்எலிய முஸ்லிம் அரபுக் கல்லூரியில் 'மௌலவியா'ப் பட்டம் பெற்ற  உம்மு சிபா என்ற தனது சொந்த மதினியை தனது வாழ்க்கைத் துணைவியாகவும், சந்ததிகளாக ஜன்னத், ரஹ்மத் என்ற இரு பெண் மக்களையும், 8 பேரக் குழந்தைகளையும் பெற்றிருப்பதுடன் மத்திய பிரதேச 'தஃவத் தப்லிக்' அமீராக சேவையாற்றிய மர்ஹூம் உபைதுல்லாஹ் ஹாஜி மற்றும் ரஹ்மதுல்லாஹ் ஹாபிஸ் ஆகியோர்  இவரது சகோதரர்களும், 'அல்ஹாஷிமியா'  அறபுக் கல்லூரியின்  விரிவுரையாளரான காமில் முப்தி அவர்கள் இவரது மருமகனுமாவார்.

தற்போது சுமார்  கால் நூற்றாண்டுகளாக ஐக்கிய இராச்சியத்தில்  குடும்பத்துடன் புலம் பெயர்ந்து, சொந்த வர்த்தக முயற்சிகளுடன், தஃவா சேவையிலும், பொதுப்பணிகளிலும் அங்கு ஈடுபட்டு வருகின்றார்.

கல்ஹின்னையின் மூத்த மார்க்க மேதை மர்ஹூம் கலாநிதி டாக்டர்
மவ்லவி ஸலாஹுத்தீன் அவர்கள் உம்மு சிபா என்ற தனது மூத்த புதல்வியின் பெயரில் ‘சிபா பதிப்பக'த்தை நிறுவி, சுமார் 250 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு 'தஃவா'ப் பணியில்  ஈடுபட்ட, கலாநிதி டாக்டர்  மவ்லவி ஸலாஹுத்தீன்    அவர்கள் தன்னைப் போலவே  எழுத்து துறையிலும், பேச்சுத் திறனிலும், தஃவாவிலும் ஈடுபடக்கூடிய ஒரு நல்ல மருமகனைத் தன் காலடியிலிருந்தே சுவீகரித்துக் கொண்டார்.

இவர் தற்போது லண்டனினிலிருந்து உலகளாவிய ரீதியில் செய்யும் 'தஃவா' பணிகளைக் கேள்விப்படும் போது, மாமாவை மிகைத்த மருமகனாக இருப்பாரோ என்று என் உள் மனம் கூறியது.

எனது சிறு பிராயத்திலே நான் பத்திரிகைகளில் எழுதியபோது என்னைப் பாராட்டி, ஆசீர்வாதித்தவர்களில் முக்கியமான  ஒருவர் மர்ஹூம் மவ்லவி ஸலாஹுத்தீன் அவர்கள் என்றால் அது மிகையாகாது.

அமானுல்லாஹ் கமால்தீன் அவர்கள் கல்ஹின்னை அல்மனார்  தேசியக் கல்லூரி, 'அல் பத்தாஹ்' அரபுக் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப கல்வியைப் பெற்று, கம்பளை, Zahira College   கண்டி, Trinity College ஆகியவற்றில் உயர் கல்வியை தொடர்ந்தவராவார். அதனைத் தொடர்ந்து கணக்கியல், கணணியல், அரபு மொழி, இஸ்லாமிய சரீஆ,Business Studies. Travel & Tourism போன்ற  கலைகளில் தேர்ச்சி பெற்று விட்டு, வர்த்தக உலகில் நுழைந்தார்.

இவர்  இலங்கையில் சில்லறை- மொத்த வியாபரம், ஏற்றுமதி- இறக்குமதி, பண்ணை வளர்ப்பு போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், இலங்கையில் முன்னணி மாணிக்கக் கல் வியாபார  நிறுவனமான, அவரது மைத்துனர் முஸ்லிம் ஸலாஹுத்தீன் அவர்களின் Mushan International     நிறுவனத்தில் மாணிக்கக் கல் வியாபார அணுபவத்தையும் பெற்றுக் கொண்டதுடன், Mushan Combine - Aqua paradise Export Ltd, Textile Paradise Ltd, Travel Paradise Ltd போன்ற நிறுவனங்களின்  Managing Director ஆகவும் கடமையாற்றினார். அத்துடன் F & F Travels Hajj & Umrah
நிறுவனத்துடன்  இணைந்து யாத்ரீகர்களை ஹஜ் - உம்ரா செய்வதற்காக இலங்கை யிலிருந்து அழைத்துச் சென்றார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

லண்டனிலிருந்து உலகளாவிய ரீதியில் செயல்படும் அவரது 'தஃவா' அழைப்புப் பணியான  'குளோபல் தஃவா' சேவையை பற்றி விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொண்ட போது அவர் பின்வருமாறு கூறினார்:








“குர்ஆனும் நபி வழியும் மனித சமுதாயத்துக்கு வழிகாட்ட அருளப்பட்ட நல்லுபதேசங்களாகும். இவை  அவர்கள் அறியாத மொழியில் இருப்பதால் இவற்றை  எளிய நடையில் சாதாரன மக்களுக்கு கிடைக்கச் செய்ய 'குளோபல் தஃவா' சேவையை ஆரம்பித்தேன். மனிதர்கள் சுறு சுறுப்பாக இயங்கும் இந்தக் கணணி யுகத்தில் மிகவும் குறுகிய நேரத்தில், சுமார்  4-5 நிமிடங்களில் பெரிய கருத்துக்களை  மிக உறுக்கமான முறையில் கைவிரல் நுனிக்கு அனுப்பும் நிலையில், கேட்டுப் பயனடைவதற்கு ஏற்றவாறு எமது ஆக்கங்கள் அமைந்திருக்கும்.

முழு உலக உம்மத்துகளுக்காகவும் எனது “நாள் ஒரு நபி மொழி” என்ற நபிகளாரின் வாழ்வையும் வாக்கையும் பிரதிபலிக்கும் நிகழ்ச்சியையும், உலகப் புகழ் பெற்ற திருக் குர்ஆன் விரிவுரையாளரான இமாம் இப்னு கஸீர்  அவர்களின்,  “குர்ஆன் விளக்கவுரை” மற்றும் இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்களில் பிரகாசிக்கும், “வரலாற்றில் ஓர் ஏடு” நிகழ்ச்சி “துஆ பிராரத்தனைகள்“; “குத்பாப் பேருரைகள்”, “பயான்கள்”; “ஹஜ் உம்ரா வழிகாட்டல்கள்”, “ரமழான் நிகழ்சிகள்”, “புனித லைதுல் கத்ர் துஆ”, “அறபா துஆ” உட்பட அன்றாட வாழ்வில் பயன்பெறும்  பல் வேறு மார்க்க விடயங்களின் தொகுப்புகளையும்,  தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் தயாரித்து வழங்கி வருகின்றேன். எமது  நேரலை நிகழ்ச்சிகளால் உலகலாவிய ரீதியில் பல நாடுகளிலுள்ள எமது நேயர்கள்  கேட்டுப் பிரயோசனமடைந்து வருகின்றனர். எமது அபிமானிகளும், நேயர்களும், குறிப்பாக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற  ஐரோப்பிய நாடுகள், இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற தூர கிழக்கு நாடுகள், சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகள்; அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற மேற்கத்திய நாடுகளில் பிரயோசனமடைந்து வருகின்றனர்.

எமது நிகழ்சிகள் சமூக வலைத்தளங்களின் Social Media மூலம் அஞ்சல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை ஆயிரக்கணக்கானோர் Share செய்து கொண்டுமிருக்கின்றனர். WhatsApp ல் மட்டும் ஆங்கில எழுத்துக்கள் A- to Z 26Global Dhawa Service Group உண்டு. எமது அபிமானிகள் பலர் பத்வாக்களுக்காகவும் மார்க்க விடயங்களின் தெளிவை பெற்றுக் கொள்வதற்காகவும் எம்மை தொடர்பு கொண்டு பிரயோசனமடைகின்றனர்" என்று  அவர் குறிப்பிட்டார்.

“ஐக்கிய இராச்சிய Sri Lankan Muslim Cultural Center UK இன் அல்-பலாஹ் கல்வி நிலையத்தின் தலைவராகவும், ஜக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்தின் உப தலைவராகவும் இருக்கிறீர்கள்; ஐரோப்பாவிலே முதன் முதலில் "மஸ்ஜிதுன் நூர்"என்ற பெயரில் இலங்கையர்களால் ஒரு பள்ளிவாயலை அமைத்த பணியில் பங்களிப்பு  செய்துள்ளீர்கள்; அது பற்றி எமது நேயர்களுக்கு ஒரு விளக்கத்தை தரலாமா?” என்று  வினவியதற்கு, அவர் தந்த விளக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து  கொள்கிறேன்:

“அல்ஹம்துலில்லாஹ்! இந்நிலையத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவனான நான், அதன்  முன்னணி உறுப்பினர்களுடன் சேர்ந்து அதன் சேவைகளில் ஆரம்ப காலத்திலிருந்து பங்களிப்பு செய்து வருகின்றேன். இந்நிலையத்தில் "மஸ்ஜிதுன் நூர்"என்ற பெயரில் பள்ளிவாயலின் சேவைகளும் "மத்ரஸதுல் பலாஹ் கல்வி நிலையம்" என்ற பெயரில் குர்ஆன் இஸ்லாமியக் கல்விப் போதனைகளும், 'SLMCC' என்ற பெயரில் இலங்கை முஸ்லிம் கலாசாரச் சேவைகளும் நடைபெறுகின்றன. சுமார் 25 நாடுகளுக்கும் மேற்பட்ட  மக்கள் எமது நிலையத்திலிருந்து சேவைகளைப் பெற்று வருகின்றனர். அத்துடன் அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் மிகச் சிறப்பான பள்ளி வாயலுக்கான   British Best Run Beacon Masjid Award Winner பரிசு நான்'அல் பலாஹ் -' கல்வி நிலையத்தின் தலைவராக சேவை செய்து வரும் காலத்தில் கிடைத்தமை கொண்டு மகிழ்ச்சியடைகின்றேன். நாகரிகம் நிறைந்த இந்த லண்டன் மாநகரிலே, எமது அல்-பலாஹ் மத்ரஸாவில் சுமார் 3000 த்துக்கும் அதிகமான மாணவர்கள் மார்க்கக் கல்வியையும், குர்ஆனையும் கற்று வெளியாகி இருப்பதுடன், 50 மாணவர்கள் பகுதி நேர வகுப்பில் ஹாபிழ்களாகவும் பட்டம் பெற்றிருக்கின்றனர்.  தற்போது சுமார்  800 க்கும் மேற்பட்ட மாணவர்கள்  குர்ஆனையும், இஸ்லாமியக் கல்வியையும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். எமது ஹிப்ழ் மாணவர்கள் பல வருடங்களாக  புனித மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று உலகின் பல நாடுகளிலிருந்து வந்து, குர்ஆனை மனனமிடும் வகுப்புக்களில் பங்குபற்றி வருகின்றனர். சில மாணவர்கள் மதீனா "ஷேய்க்"களிடம் 'இஜாஸா' பட்டம் பெற்றுள்ளதுடன், எமது மத்ரஸாவில் பட்டம் பெற்ற மாணவர்கள், லண்டன் பல்கலைக் கழகங்களில் சிரேஷ்ட சித்திபெற்று சூழவுள்ள பள்ளிவாயில்களில் ஹாபிஸ்களாகத் தொழுகை நடாத்துகின்றனர். 

எதிர்காலத்திலே இங்கிலாந்திலிருந்து முழு உகிற்கும் தீனை ஏந்திச் செல்லும் மார்க்க அறிஞர்களை உருவாக்கும் நோக்குடன்,  இஸ்லாமிய மேற்படிப்புக்கான கலாபீடம் ஒன்றை  நிறுவத்திட்டமிட்டு, இரண்டு  மில்லியன் பவுண்கள் பெறுமதியான கட்டடத்தை விலைக்கு வாங்கி, ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

எமது கல்ஹின்னை  ஊரில் முதன் முதலாக "தாருத் தக்வா" இஸ்லாமிய மகளிர்கல்லூரி என்ற பெயரில் பெண்கள் அரபுக் கல்லூரியை அமைத்து அதன் தலைவராக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இருக்கிறீர்கள்; அதுபற்றிக் கூறலாமா என்று கேட்டதற்கு  அவர் பின் வருமாறு பதிலளித்தார்:


"உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் பெண்களாவார்கள். பெண்கள் சமூகத்தின் முதுகெலும்பைப் போன்றவர்கள். ஒரு நல்ல குடும்ப வாழ்க்கையை அமைப்பதற்கு அவர்களுக்கு மார்க்க அறிவு இன்றியமையாததாகும். இலங்கையில் ஆண்களுக்கு மார்க்க அறிவைப் போதிப்பதற்கு பல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால்  பெண்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதிப்பதற்கு ஒரு சில கல்லூரிகள் மட்டுமே இருக்கின்றன. சமூகத்தின் இக்குறையை உணர்ந்து, எமது கிராமத்தில் ஒரு முஸ்லிம் பெண்கள் சன்மார்க்கக் கல்லூரியை நிறுவக் கனவு கண்டு கொண்டிருந்தேன்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அந்தக் கனவு நனவாகி, கல்ஹின்னை வரலாற்றில் முதலாவது பெண்கள் அரபுக் கல்லூரியான  “தாருத் தக்வா"வை  நிறுவி,  பல தசாப்தங்களாக அதன் தலைவராக இருந்து  பணி செய்யப் பாக்கியம் தந்த,  அல்லாஹ்வைப் புகழ்கின்றேன்.

இக்கல்லூரி 1967ம்  ஆண்டு எனது இளமைப் பிராயத்தில், திண்ணை பள்ளிக்கூட வடிவில், குர்ஆன் வகுப்பாக ஆரம்பிக்கப்பட்டது. 1993ம்  தற்போதைய  கட்டிடம் அமைக்கப்பட்ட பின்பு, முஸ்லிம் பெண்கள் அரபுக் கல்லூரியாக Department of Muslim Religious and Cultural Affairs/Federation of Sri Lanka Arabic Colleges/Pradesiya Saba Islamic Schools ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, ஹிப்ழ்,  ஷரீஆ வகுப்புகள் நடாத்தப்படுகிறது. இது வரை சுமார்  200 ஆலிமாக்களும், ஹாபிழாக்களும், முபல்லிகாக்களும் பட்டம் பெற்று வெளியாகி சமூகத்துக்கு மார்க்க சேவை செய்து வருகின்றனர்"என்று குறிப்பிட்டார்.

சுமார் 40 வருட காலமாக பல்லாயிரக் கணக்கான ஹாஜிகளுக்கு ஹஜ்- உம்ரா வழிகாட்டல் சேவை செய்து வருகிறீர்கள்; அது பற்றி  விளக்கமொன்றைக் கேட்டமைக்கு, அவர் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்:


"அல்ஹம்துலில்லாஹ்! எனது 40 வருட சேவையில் பல ஆயிரக் கணக்கான ஹாஜிகளுக்கு கஃபாவை முதன் முதலில் காட்டும் பாக்கியத்தை  அல்லாஹ் எனக்கு தந்தான். ஒரு சில வருடங்களைத் தவிர மற்ற எல்லா வருடங்களிலும், தொடர்ந்து  ஹஜ் செய்திருக்கிறேன். சில வருடங்களில் 7-8 முறையும் மக்காவுக்கு சென்றிருக்கிறேன். இது வரை சுமார்   ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹாஜிகள் என்னுடைய சேவையைப் பெற்றிருப்பார்கள். அல்லாஹ் கபூலியத்தை தருவானாக! என் வாழ் நாளில் பல முறை ஹஜ்-உம்ரா செய்யவும், மக்களுக்கு வழிகாட்டவும் உதவி செய்ததற்கும் பாக்கியமளித்த  அல்லாஹ்வைப் புகழ்கின்றேன்.
என்னுடைய வழிகாட்டல் Unique ஆன 'தனித்துவம்' வாய்ந்தது.

இரு தசாப்தங்களாக இலங்கையிலிருந்தும் தற்போது இரு தசாப்தங்களாக RJ Travels & Tours Ltd உடன் இணைந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் ஹாஜிகளுக்கு வழிகாட்டல் செய்து வருகின்றேன். அதுமட்டுமல்லாமல் அல் அக்ஸா, ஜோர்தான், துருக்கி, மற்றும் இது போன்ற  இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  நாடுகளுக்கு Islamic Tour களையும் வழி நடாத்தி வருகின்றேன்."

நீங்கள் நாடறிந்த எழுத்தாளரும் பன்னூலாசிரியரகவும் இருக்கிறீர்கள் உங்கள் எழுத்துப் பணி பற்றி விவரிக்கலாமா, என்று கேட்டதற்கு அவர்  பின் வருமாறு பதிலளித்தார்:  

இலங்கை இந்திய முன்னணி  தேசிய நாளிதழ்கள், சஞ்சிகைகள் மூலம் எழுத்தலுலகில் புகுந்த, எனது ‘வாழ்க்கையில் நிம்மதி’ என்ற கண்ணிப் படைப்புக்கு இலங்கை, இந்தியா, சிங்கப்பூர்  போன்ற நாடுகளில் அதிக வரவேற்புக் கிடைத்தது. அதை  தொடர்ந்து ‘அழகிய முன் மாதிரி’, ‘கஸ்ரு ஜம்உ தொழுகை’, ‘வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டும் நல்லுபதேசங்கள், ‘ஹஜ்-உம்ரா வழிகாட்டல்', ‘துஆக்களின் தொகுப்புகள்'  போன்ற நூல்கள் எனது  எழுத்தாக்கங்களாகும். மற்றும் பல தலைப்புகளில் நூற்றுக்கணக்கான சிறு சிறு கணணித் தொகுப்புகளை ‘அமானத்ஸ்’என்ற எது பேனா மூலம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அத்துடன் பல நினைவு மலர்களின் ஆசிரியராக இருந்து, பல சஞ்சிகைளைத் தொகுத்திருக்கிறேன். குறிப்பாக ஜக்கிய இராச்சிய ‘அந் நூர்', ‘உம்மத்’ போன்ற மலர்களைத் தொகுத்ததுடன், தற்போது பத்திரிகைகளிலும் Online Websiteகளிலும் மார்க்க விடயங்களை எழுதி வருகின்றேன். அவ்வப்போது ‘வேட்டை’ மின்னிதழுக்கும் எனது  ஆக்கங்களை அனுப்பி வருகின்றேன்.  அத்தோடு எனது நெருங்கிய உலமாக்களின் உபதேசங்களை நூல்களாகத் தொகுத்தும் வருகிறேன்."
 
உங்கள் நூல்களில் எதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

"‘வாழ்க்கையில் நிம்மதி’ என்ற நூலில் எப்படி ஒரு குடும்பத்திலிருந்து சமூகம் வழியாக எவ்வாறு உலகத்தில் நிம்மதி பெறலாம் என்பதையும், ‘அழகிய முன்மாதிரி’ என்ற நூலில் மனித இனம் வாழ்கையை அழகாக்க முன்மாதிரியாக பின்பற்றத்தக்க சரித்திர நாயகனின் பண்புகளும், ‘வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டும் நல்லுபதேசங்கள்’ என்ற நூலில் குர்ஆன், ஹதீஸ் போதனைகள் அனைத்தினதும்  சாராம்சத்தை எளிய நடையிலும், ‘தொழுகை’ என்ற நூலில் தொழுகையின் தத்துவங்களும் அதன் சட்டங்களும் ‘துஆக்களின் தொகுப்பு’ என்ற  நூலில் குர்ஆன் ஹதீஸ்களில் வந்த துஆக்கள் நபிமார்கள் கேட்ட துஆக்கள் மற்ற சந்தர்ப்ப துஆக்ககளும்,  ‘ஹஜ் உம்ரா வழிகாட்டல்’ என்ற  நூலில்  A to Z ஹஜ் உம்ரா வழிகாட்டலும் அதன் சிறப்புகளும் சட்டங்களும் பற்றி எழுதியிருக்கிறேன். இவற்றுக்கு மேலாக  காலத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற பல தலைப்புளில் நூற்றுக் கணக்கான சிறு நூல், கணணித் தொகுப்புகளையும் அவ்வப்போது "ஒன் லைன்" புத்தகங்களாக எழுதி வருகின்றேன்" என்று  கூறினார்.

தற்போது எவ்வாறன  நூலை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள், எனக்கேட்ட போது,

"எனக்கோ இப்போது வயது 64  ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் மஞ்சள்  வெய்யில் விழுந்து விட்டது. இனி வாழ்வதெல்லாம் ‘போனஸ்’ வாழ்க்கை. எனவே ‘மறுமை நோக்கிய பயணம்’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் இந்த உலக வாழ்வின் அற்ப தன்மையும், ஸகராத், கப்ர், மஹ்ஷர் மைதானம், மீஸான், பட்டோலை, ஸிராத்தல் முஸ்தகீம் பாலம், கேள்வி கணக்கு, சுவர்க்கத்தின் இன்பங்கள், நரகத்தின் வேதனைகள், அல்லாஹ்வின் தரிசனமும் திருப்தியும் பற்றி விடயங்களை  எழுதிக் கொண்டிருக்கின்கிறேன்" என்று கூறினார்.
 
இறுதியாக  உங்கள்  சமூகப் பணிகள் பற்றிக் கூறலாமா என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

"அல்ஹம்துலில்லாஹ்! உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சமூக சேவை நிருவனங்களுடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். குறிப்பாக ஐக்கிய இராச்சிய கல்ஹின்னை  GWA-UK நலன்புரி சங்கத்தின் துணைச் செயலாளராக  நீண்ட கலாமாக இருந்து ஐக்கிய இராச்சியத்திலும் இலங்கையிலும்  GWA யின் சமூகப் பணிகளில் பங்களிப்பு செய்து சேவை செய்து  வருகின்றேன்.

அத்துடன், தென் இந்தியாவில் சுமார்  ஆயிரத்துக்கு கிட்டிய பள்ளிவாசல்களை அமைத்தும் சுமார்  2000 க்கு கிட்டிய ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை செய்தும், நூற்றுக் கணக்கான ஏராளமான ‘மக்தப்’ பாடாசாலைகளுக்கு உதவி செய்தும், இன்னும் பல அறப்பணிகளை செய்து வரும்  ‘அல் ஹறமைன் டிரஸ்ட்' உடன் இணைந்து பல சமூக சேவைகள் செய்து வருகிறேன்." 


நான் சமூகத்தில் இலங்யைர்களுடனும்,  மற்ற நாட்டு மக்களுடனும் நற்குணத்துடனும், சேவை மனப்பாங்குடனும், நடு நிலைப் போக்குடன் சமூகத்தில் எல்லா தரத்திலும் இருப்பவர்களையும் மதிப்பளித்து பழகுவதாலும்; இவர்களில் பலபேர் சமூகத்தில்   ஏற்படும் கணவன் மனைவி பிரச்சினைகள், குடும்ப சச்சரவுகள், வியாபாரக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள், பெற்றோர், பிள்ளை பிரச்சினைகள், மற்றும் திருமண ஆலோசனைகள் பெறுவதற்காகவும், நோயாகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு ஆலோசனை பெறுவதற்கும் மற்றும் சொந்த விடயங்களுக்கான  ஆலோசனைகளைப்  பெறுவதற்காகவும், தன்னுடைய பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை-பெண் பொறுத்தமானவர்களை அறிமுகப்படுத்தித் தருமாறும் என்னிடம் தொடர்பு கொள்வார்கள். வருபவர்களது பிரச்சனைகளையும், இரகசியங்களையும் மற்றவரிடம் கூறாமல் அமானிதத்தை பாதுகாத்து உரிய ஆலோசனையைக் கொடுத்து சமாதானம் செய்து,  Counselling & Advice   செய்து வருகின்றேன்." என்று கூறினார்.

கல்ஹின்னை மண்ணில் பிறந்து இன்று கடல் கடந்து உலகளாவிய ரீதிதியில் அமானுல்லாஹ் கமாலுத்தீன் அவர்கள்  ஆற்றும் சேவை எமது ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை தரக்கூடியதாகும். அன்னாரது சேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்று ஈருலகிலும் நற்கூலி அளிப்பானாக! ஆமீன்

ஐ.ஏ.ஸத்தார்


 


Post a Comment

Previous Post Next Post