'பேராசை பெரு நஷ்டம்'

'பேராசை பெரு நஷ்டம்'


ஒரு நாள் பகல் நேரத்தில் ஒரு பிச்சைக்காரன் ரோட்டோரம் நடந்து கொண்டிருந்தான். 

நடந்து கொண்டிருக்கும்போது வழியில் ஒரு அழகிய பளபளக்கும் கல்லை அவன் பார்த்தான். 

அந்த கல் ஒரு விலை உயர்ந்த வைரம் என்பது அவனுக்கு தெரியவில்ல. வைரத்தின் மதிப்பை பற்றி ஒன்றும் தெரியாத அந்தப் பிச்சைக்காரன் அதனை அவனுடன் இருந்த ஒரு கழுதையின் காதில் மாட்டி விட்டான்.

பிச்சைக்காரன் செய்துகொண்டிருந்த இந்த விச்சித்திர செயலை அருகில் இருந்த ஒரு வைர வியாபாரி பார்த்து வியந்து கொண்டிருந்தார். 

சிறிது நேரத்தில் அந்த பிச்சைகாரனை நெருங்கிய அந்த வைர வியாபாரி அவனிடம், "இந்த கல்லை நீ எனக்கு கொடுத்தால் உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை நான் தருவேன்" என்று சொன்னார். ஆனால் பிச்சைக்காரனுக்கு அந்த வைரத்தின் மதிப்பு கொஞ்சம் கூட தெரியவில்லை.  தனது அறியாமையால் வைர வியாபாரியிடம், "நீங்கள் எனக்கு ஒரு ரூபாய் தந்தால் இந்த கல்லை உங்களிடம் தந்து விடுகிறேன்" என்று சொன்னான். 

பிச்சைக்காரனின் அறியாமையை புரிந்து கொண்ட வைர வியாபாரி அவனை ஏமாற்ற நினைத்தார். கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த வைரத்தை ஏமாற்றி வெறும் 50 பைசாவிற்கு பிச்சைக்காரர்களிடம் இருந்து வாங்க வைர வியாபாரி திட்டமிட்டார். அந்தப் பிச்சைக்காரனிடம், "நான் உனக்கு 50 பைசா தருகிறேன். இதற்கு நீ உடன்படவில்லை என்றால் இந்த வைரம் எனக்கு வேண்டாம்" என்று சொன்னார் அந்த வைர வியாபாரி.

அதற்கு அந்தப் பிச்சைக்காரன், "இந்த கல்லிற்கு உங்களால் 1 ரூபாய் தர முடியவில்லை என்றால், இந்த கல் கழுதையின் காதிலேயே இருக்கட்டும்.. எனக்கு நீங்கள் 50 பைசா தர வேண்டிய தேவையில்லை" என்று வைர வியாபாரியிடம் சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினான். இருந்தாலும் அந்தப் பிச்சைக்காரன் 50 பைசாவிற்கு வைரத்தை தனக்கு தந்து விடுவான் என்று வைர வியாபாரி நம்பிக் கொண்டிருந்தார். 

சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் இன்னொரு வைர வியாபாரி பிச்சைக்காரன் வைத்திருந்த கழுதையின் காதில் இருந்த அந்த விலை உயர்ந்த வைரத்தை கண்டார்.  உடனேயே அவர் பிச்சைக்காரனிடம் பேசி 1000 ரூபாயை அந்தப் பிச்சைக்காரனுக்கு கொடுத்து வைரத்தை வாங்கிக்கொண்டார்.  1000 ரூபாயைப் பெற்றுக் கொண்ட பி!ச்சைக்காரன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முதல் வைர வியாபாரி பிச்சைக்காரனிடம் சென்று, "அட அறிவுகெட்ட பிச்சைக்காரனே! இந்த வைரத்தின் மதிப்பு என்னவென்று உனக்கு தெரியுமா? கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டு இப்படி ஆடுகிறாய்? அந்த வியாபாரியிடம் இப்படி ஏமாந்து விட்டாயே... உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?"  என்று பிச்சைக்காரனை நோக்கி கேட்டார். 

முதல் வைர வியாபாரி சொன்னதையெல்லாம் கேட்டு பிச்சைக்காரன் அடக்க முடியாமல் சிரித்தான். அவரிடம், "நீ அறிவு கெட்டவனா? அல்லது நான் அறிவு கெட்டவனா? எனக்கு அந்த கல்லின் மதிப்பு சுத்தமா தெரியாது... 

அதனால்தான் 1000 ரூபாய்க்கு அந்தக் கல்லை விற்றேன். என் வாழ்நாளிலேயே பார்க்காத பெரிய தொகை என் கையில் இப்போ இருக்குது...  இதனால் பெரும் மகிழ்ச்சியில் இப்போது இருக்கிறேன்! ஆனால் நீயோ வெறும் 50 பைசா கூடுதலாக எனக்கு தர கஞ்ச பட்டு, அந்த கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை இழந்துவிட்டாய்! இப்போ யார் முட்டாள் என்பதை நீயே தெரிந்து கொள்! "   என்று சொல்லி கடந்தான் பிச்சைக்காரன்...  இதனைக் கேட்ட முதல் வைர வியாபாரியும் தன்னுடைய முட்டாள்தனத்தை உணர்ந்து வருந்தினார்.


Post a Comment

Previous Post Next Post