இறைவன் நாட்டம்!

இறைவன் நாட்டம்!

ஓர் உண்மைச் சம்பவம்
(கோவயம்புத்தூர் திருக்குறள் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தலைவருமான தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர் பாட்சாவின் "சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்" என்ற புத்தகத்திலிருந்து)
 

அவர் பெயர் முகமது இர்பாஃன் பஃஹீல். அவர் பாகிஸ்தானியர். உலகின் மிகச் சிறந்த நரம்பியல் நிபுணர். கைராசியான மருத்துவர். இவரைப் பார்ப்பதற்கு ஆறுமாதத்திற்கு முன்பே முன் பதிவு வாங்க வேண்டும். அவர் பார்த்தால் மரணத் தறுவாயில் இருப்பவர் கூட பிழைத்துக் கொள்வார் எனும் அளவிற்குப் பிரபலமானவர். உலகப் புகழ்பெற்ற இவர் ஒருமுறை நோயாளி ஒருவரைப் பார்க்க சௌதி அரேபியாவிற்கு விமானத்தில் பயணிக்கிறார்.

அவரது போறாத காலம் அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டு, அவசர அவசரமாக விமானி விமானத்தை ஒரு நடுக்காட்டில் தரையிறக்குகிறார். தெய்வாதீனமாகப் பயணியர் அனைவரும் உயிர்பிழைக்க... நடுக்காட்டில் டாக்டர் பரிதவிக்கிறார். நான் அவசரமாகச் சென்றே ஆக வேண்டும் என்று கூற, ஒருவழியாகப் பக்கத்து ஊருக்குச் சென்று, ஒரு வாடகைக் காரைப்பிடித்து, எப்படியாவது விமான நிலையம் சென்று மாற்று ஏற்பாடு செய்யத் திட்டமிட்டு, அவர் விரைகிறார். அதன்படி காரில் செல்லும்போது, மேகம் இருள் சூழ்கிறது. அடைமழை கொட்டுகிறது. காரை ஓட்ட முடியவில்லை. வழியில் தென்பட்ட ஒருவீட்டின் முன் வண்டி நிறுத்த, அவ்வீட்டில் ஒரு வயதான பெண்மணி அவர்களை அழைத்து உதவுகிறார். ஏன் இந்தத் தடை? ஏன் இந்தச் சோதனை? மனக்கலக்கம் கொண்ட டாக்டர், அப்பெண்ணிடம் தான் தொழுகை செய்ய இடம் தந்து உதவுமாறு கேட்க, வீட்டில் ஓர் அறையைக் காட்ட, அங்கு சென்று தொழுகிறார்.
அங்கு ஒரு குழந்தையின் முனகல் சத்தம் கேட்டு, காரணம் கேட்க, அப்பெண்ணோ , ஐயா ! நாங்கள் ஏழைகள், பெற்றோர் இல்லாத என் பேரப்பிள்ளை தான் அது. நரம்பியல் நோய் பாதிக்கப்பட்டு செயலிழந்து இருக்கிறான். இதைச் சரி செய்ய உலகிலேயே சிறந்த ஒரு மருத்துவரால் தான் முடியும். அவரைப் பார்ப்பதானால் ஆறு மாதத்திற்கு முன்பே அனுமதி பெற வேண்டும். பல லட்சம் செலவாகும். நாங்கள் என்ன செய்வோம் இறைவனிடம் அழுவதைத் தவிர என்று அழுதாள்.

அம்மா, யார் அந்த மருத்துவர் எனக் கேட்க? அவர்தான் டாக்டர். முகமது இர்பாஃன் பஃஹீல் என்றார். மருத்துவர் அதைக் கேட்டு அழத் தொடங்கிவிட்டார். 

அம்மா அந்த டாக்டர் நான்தான். என்னே! இறைவன் நாட்டம். நீங்கள் இறைவனிடம் கேட்டதாலோ என்னவோ என்னையே அவர் இங்கு அனுப்பிவிட்டார். என்று கூறி மருத்துவம் பார்த்துக் குழந்தையைக் காப்பாற்றினார். 

கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post