தொழில்நுட்பமும் இன்றைய உலகமும்.

தொழில்நுட்பமும் இன்றைய உலகமும்.


நவீன வளர்ச்சியின் காரணமாக இன்றைய உலகமே சுருங்கி காணப்படுகின்றது. இவ்வாறு இவ்வுலகம் சுருங்கி காணப்படுவதற்கான நவீன வளர்ச்சி தொழில்நுட்பம் என்று சுருக்கமாகக் கூறலாம்.நாம் எல்லோரும் தத்தமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வதற்காக இறைவனால் வழங்கப்பட்ட வரப்பிரசாதம் உலகம் எனலாம். பண்டைய காலத்தில் உலகம் காணப்பட்டதற்கும் இன்றைய காலத்தில் உலகம் காணப்படுவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இன்றைய உலகம் தொழில்நுட்பத்தால் சுருங்கி தொழில்நுட்ப உலகமாக காணப்படுகிறது. இன்றைய உலகம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு தொழில்நுட்பமே துணைபுரிகிறது. அதைப்பற்றி நோக்குவோமாக.

ஆரம்ப காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த மனிதர்கள் நாகரீகத்தின் காரணமாக நல்ல வாழ்க்கையை மேற்கொள்வதற்கும் தொழில்நுட்பமே காரணமாக அமைந்தது.பல துறைகளிலும் தொழில்நுட்பம் காரணமாக பல நன்மைகளை பெற்றுக் கொள்கிறோம். இன்றைய காலத்தில் தொழில்நுட்ப கருவிகள் ஏராளமாக காணப்படுகின்றன. அவையாவன தொலைபேசி,தொலைக்காட்சி, கணினி, இணையம் ,தொலைநகல் என்று இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

இத் தொழில்நுட்ப கருவிகளை முறையாக உபயோகிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றோம். தேவையின்றி பயன்படுத்துவதன் மூலம் பல தீமையான விடயங்களுக்கு முகம்கொடுக்கின்றோம். இவ்வாறு தீமையான விடயங்களை தவிர்த்துக்கொண்டு தொழில்நுட்பத்தில் இருந்து நன்மையான பயன்களை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.


அவ்வாறு தொழில்நுட்பத்தின் மூலம் சமைத்தல், கல்வி , போக்குவரத்து,விஞ்ஞானத்துறை ,வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் நன்மையான விடயங்கள் பெறப்படுகின்றன. சுருக்கமாகக் கூறுவதாயின் ஒரு மனிதன் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒவ்வொரு செயற்பாட்டிலும் தொழில்நுட்பமே காணப்படுகின்றது.

மேலும் வீட்டில் சமைக்கும் போது மின் அடுப்பு,அமுக்க அடுப்பு போன்ற பல தொழில்நுட்ப பாவனை முதல், ஆடைகளை துவைக்கும் சலவை இயந்திரம் வரை தொழில்நுட்பம் என்று தான் கூற முடியும். மேலும் போக்குவரத்து துறையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது பண்டைய காலத்தில் காணப்பட்ட முறைக்கும் தற்போது காணப்படும் முறைக்கும் இடையில் வித்தியாசம் உண்டு.

அதாவது பண்டைய காலத்தில் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டே போக்குவரத்து வசதிகள் காணப்பட்டன. உதாரணமாக மாட்டு வண்டி மற்றும் குதிரைவண்டி போன்றவற்றைக் கூறலாம். இன்று உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது முச்சக்கர வண்டி முதல் சொகுசு வாகனங்கள் வரை தொழில்நுட்பமாகவே காணப்படுகின்றது.

கல்வித் துறையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போதுஆரம்பத்தில் குரு மற்றும் சீடர்களை அடிப்படையாகக் கொண்ட குருகுல கல்வியே காணப்பட்டது. பின்பு மிஷனரி இயக்கங்கள் மற்றும் பாடசாலை என்ற அடிப்படையில் கல்வியானது வளர்ச்சி கண்டது. எனினும் தற்போது தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வியையே உலகளாவிய ரீதியில் பார்க்கின்றோம். உதாரணமாக தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இணையதளத்தின் மூலமே கல்வியை பெற்றுக் கொள்கின்றோம்.

தொடர்பாடல் துறையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அதிகமான தொழில்நுட்ப வளர்ச்சியை காணலாம்.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற காலம் போய் தொடர்பாடல் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நிலைக்கு உலகம் மாறியுள்ளது. இன்று உலகளாவிய ரீதியில் கையடக்கத்தொலைபேசி என்பது உச்ச தொழில்நுட்பம் கொண்ட ஒரு தொடர்பாடல் கருவியாக காணப்படுகின்றது. பண்டைய காலத்தில் தொடர்பாடலுக்காக கடிதம் மற்றும் தூது முறைகள் காணப்பட்டன இத் தொடர்பாடலுக்கு பல நாட்கள் எடுத்தன. எனினும் தற்போது நொடிக்கு நொடி கையடக்க தொலைபேசியின் ஊடாக கதைத்து தொடர்பாடலை மேற்கொள்கின்றோம்.

மேலும் வேலைத்தளங்கள் ,பாடசாலைகள் மற்றும் ஏனைய முக்கிய விடயங்களுக்கு கணினி என்ற தொழில்நுட்பகருவி மிக மிக முக்கியமான ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இதற்கப்பால் இன்று சினிமாதுறை , புதிய வகையான நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தல், அணுகுண்டு பரிசோதனை, யுத்த செயற்பாடுகள், பயிர்ச்செய்கை மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் போன்ற பல்வேறு செயற்பாடுகளிலும் தொழில்நுட்பம் காணப்படுகின்றது.

பயிர்ச்செய்கையில் தொழில்நுட்பம் எனும் போது பசுமைப்புரட்சி, மரபணு தொழில்நுட்பம்,சேனை பயிர்ச்செய்கை போன்றவற்றை கூற முடியும். அதாவது பசுமைப்புரட்சி என்பது குறுகிய காலத்தில், குறுகிய நிலத்தில் கூடிய விளைச்சலை பெறக்கூடிய தொழில்நுட்பம் ஆகும். 


இவற்றுக்கப்பால் இன்று மனிதன் புவியை விட்டு விண்வெளிக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற் கொள்ளும் அளவிற்கு உலகில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது "நாம் புவியை விட்டு செவ்வாய் கிரகத்தில் சென்று உயிர் வாழ முடியும்" என்று கூறக்கூடிய அளவிற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுளளன என்றால் தொழில்நுட்ப வளர்ச்சியே அதற்கு காரணம் எனலாம். 

எனவே தொழிநுட்பம் ஊடாக  உலகமக்கள் அன்றாடம் தனது வேலைகளை இலகுப்படுத்தி கொள்கிறார்கள் அத்தோடு சிறப்பான பொழுதுபோக்கு ஒன்றையும் உருவாக்கி கொள்கின்றார்கள். இவ்வாறான பல நன்மைகள் தொழில்நுட்பத்தின் ஊடாக கிடைத்தாலும் இன்றளவில் சிலர் தவறான வழிகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் பல தீமைகளும் ஏற்படுகின்றன.

அதாவது வலைத்தள முடக்கத்தின் மூலம் மற்றவர்களுடைய பதிவுகளை , தரவுகளைப் பெற்று அவர்களை பயமுறுத்துதல் மற்றும் யுத்த செயற்பாடுகளில் தவறான முறையில் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தல்.தொடர்பாடல் ஊடகங்களில் ஆபாச படங்கள் பார்த்தல் மற்றும் விஞ்ஞான ரீதியான கண்டுப்பிடுப்புகளில் சூழலுக்கும் , மனிதனுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தல். இது போன்று பல தீமையான விடயங்களும் பல உள்ளன. 

எனவே மேற்குறிப்பிட்ட அடிப்படையில் பார்க்கும்போது தொழில்நுட்பம் என்பது இன்று உலகளாவிய ரீதியில் பரந்து காணப்பட்டாலும் இத் தொழில்நுட்பத்தை நாம் எமக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவதன் மூலமே அதன் நன்மை,தீமை தீர்மானிக்கப்படுகிறது.ஆகவே தொழில்நுட்பம் என்பது அவரவர் பார்க்கும் கண்ணோட்டத்தில் அமையக்கூடியது என நாம் தெளிவாக கூற முடியும்.

SOURCE;i5tamil



Post a Comment

Previous Post Next Post