இலக்கியப்பணியில் நிறைவுகண்டவர்

இலக்கியப்பணியில் நிறைவுகண்டவர்

 
எனது இலக்கியச் சகோதரர் கவிமணி ஸுபைர் அவர்களை நினைவுகூரும் போதெல்லாம் அவர்தம் அயராத இலக்கியப்பணியை நான் வியந்ததுண்டு. 

சிறப்பாக அவர் உடல் நலம் நலிவுற்றிருந்த காலகட்டத்திலும் கூட, இப்பணி ஓய்ந்ததில்லை.

மலையகத்தின்"தமிழகம்"என வழங்கும்
 கல்ஹின்னை தந்த கவிமணியுடனான  தொடர்பு நெடுங்காலமாக இருந்து வந்தது. 

கவிஞர் ஸுபைர் பற்றிய நினைவில் பிரிக்க முடியாதவாறு இடம்பெறுகிறவர் கவிஞர் திலகம் அப்துல் காதிர் லெப்பை அவர்களாகும். 

இப்பேரறிஞருடைய "தஸ்தகீர் சதகம்' எனும் கவிதை நூலை மாளிகாவத்தை, இலங்கை இஸ்லாமிய நிலையத் தின் மூலம் நான் வெளியிட்ட போது, அந்நூலுக்கு அறிமுகவுரை வழங்கிய கவிமணி ஸுபைர். தமது இலக்கியப் பணியின் பரப்பை
ஓரளவு தொட்டுக் காட்டியுள்ளார். 

அதனைக் கீழே தருகின்றேன் 

"அல்லாஹ் அருளால் 1960ம் வருடம் கவிஞருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களது ஆற்றல் அறிந்த நான், மக்கள் சமூக நலன் கருதி (கவிஞர் திலகம்) மீண்டும். கவிதைத் துறையில் ஈடுபட வேண்டுமென உற்சாகம் ஊட்டினேன். 

நான் வெளியிட்ட மணிக்குரல் சஞ்சிகையில் அவரது கவிதைகளை வெளியிட்டேன். மணிக்குரல் பதிப்பகத்தின் மூலம் அவர்களது ஆச்சி கங்களை நூலுருவிலும் வெளியிட்டேன். அதன் காரணமாக கருத்துக் கருவூலங்களாக விளங்கும் ‘இக்பால் இதயம்" ரூபய்யாத (சாகித்திய மண்டலப்பரிசு பெற்ற நூல்ஸைனம்பு நாச்சியார் மானரி'யம், இறசூல் சதகம்', ஜாவித் நாமா (தமிழ் மொழிபெயர்ப்பும் போன்ற பல நூல்களும், தனிப்பாடல்களும் தமிழுலகிற்குக் கிடைத்தன. 

மேலே குறிப்பிட்டுள்ளவற்றிலிருந்து கவிமணி ஸுபைர் ஒரு சிறந்த நூல் வெளியீட்டாளரென்ற புகழுக்கும் உரியவராகிறார்.

சிறுவர் இலக்கியம்: 
ஒரு நூலகர் என்ற வகையில் கவிமணியின் இலக்கியப் பணியின் ஓர் சிறப்பம்சமாக நான் கருதுவது சிறுவர் இலக்கியத்திலான அவரது நாட்டமாகும். 

தமிழ் இலக்கியப் பரப்பிலே ஒரு பின்தங்கிய துறை சிறுவர் இலக்கியமேயாகும், இவ்வகையில் கவிமணியின் சிந்தனைப்போக்கு பாராட்டப்படக்கூடியதாகும்.

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள், கவிமணி.யின் "மலரும் மனம்" எனும் பாலர் பாமாலை பற்றிக் கூறுவதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்

'....குழந்தைகளுக்கேற்ற பாடல்களைக் குழந்தை உள்ளத்துடன் இயற்றித் தந்துள்ள கவிஞர் ஸுபைர் அவர்கள் தமிழறிந்தோர் அனைவரது பாராட்டுக்குரியவராகிறார்.

கவிமணியின் இலக்கியப் படைப்புக்கள், அவர் ஒரு சிறந்த ஆசிரியர் என்ற தளத்திலிருந்தே பரிணமிக்கின்றதென்பது எனது கருத்தாகும்.மற்றும் பேராசிரியர் எம்.எம்.உவைஸ், கவிஞர் திலகம் அப்துல்காதர் லெப்பை போன்றோருடனான நெருங்கிய தொடர்பும் கவிமணிக்குப் பயன்மிக்கதாய் அமைந்திருந்தது.

கவிமணி சிறந்த ஆசிரியராகவும், நாடறிந்த கவிஞராகவும், சஞ்சிகை ஆசிரியராகவும், வானொலிப் பேச்சாளராகவும் பல்வேறு துறைகளில் ஆற்றிய பணி, தமிழ் தெரிந்த மக்கள் நன்றியறிதலுடன் நினைவு கூரத்தக்கதாகும்.

நூல்வெளியீடு: 
கவிமணி ஸுபைர் அவர்களின் நூல்வெளியீட்டுப் பணியில் சிறப்பித்துக் கூறக்கூடியது "ஜாவித் நாமா"வின் தமிழாக்க நூலாகும். இந்நூலின் பதிப்பு வேலையை தனது உடல் நலம் குன்றிய கால கட்டத்திலேயே கடமையுணர்ச்சியோடு மேற் கொண்டவர். 

இந்நிலையை அவர் எனக்கெழுதிய சில கடிதங்கள் மூலம் அறியத்தந்திருந்தார். வசதிக்குறைவின் காரணமாகச் சிறியதொரு அச்சகத்திலேயே இப்பணியை ஒப்படைத்திருந்தார். எனக்கெழுதிய கடிதமொன்றில் மிகுந்த கவலையோடு பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். 

'ஜாவித் நாமா அச்சுவேலை தெனாலி. ராமன் குதிரை வேகத்தில் நடைபெறும் நிலைக்குள்ளாகிவிட்டது". 

இந்த நிலையிலும் அயராது உழைத்து 'ஜாவித் நாமாவை எமக்குத் தமிழில் பதிப்பித்துத் தந்துள்ளார் கவிமணி ஸுபைர்.

சென்னையில் நடைபெற்ற இரண்டாவது இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மாநாட்டில், கவிமணி ஸுபைருடன் நானும் பங்கு கொண்டேன். அம்மாநாட்டு நிகழ்வுகளும், கவிமணியின் உறவும் இன்றும் எனதுள்ளத்தே பசுமையாகவுள்ளன.

ஸுபைர் பழகுவதற்கு இனிமையானவர். எவ்வித ஆரவாரமுமின்றி மிகுந்த அடக்கத்தோடு பணிபுரிந்தவர்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், அவரது முன்னோடியான முயற்சிகள் நம்மனைவருக்கும் பயனுள்ள வழிகாட்டிகளாக அமையுமென்பது எனது நம்பிக்கையாகும்.

Post a Comment

Previous Post Next Post