கவிமணி சுபைர் முப்பத்தைந்து ஆண்டுகளாக பல பாட சாலைகளில் கல்விப்பணி ஆற்றியவர்.
சீவனோபாயத்துக்கு மட்டும் உரிய ஒன்றாக ஆசிரியத் தொழிலை அவர் கருதினார் அல்லர். மாணவர்களுடைய முன்னேற்றத்தையும் நாட்டினதும் பண்பாட்டினதும் மேம்பாட்டையும் கருத்திற்கொண்டு, அப்பணியினை ஆற்றியதனால் அவர் போற்றப்பட்டார்.
மாணவர்களுக்குப் பாடங்களைச் சொல்லித் தருவதோடு நின்று விடாது, அவர்களுடைய அனுபவங்களையும் சிந்தனைகளையும் செழுமைப்படுத்தும் செயற்பாடுகளிலும் அவர் தீவிர கவனஞ் செலுத்தினார்.
அத்தகையதொரு கவனம், சமயத்திலும் மொழியிலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலுமாக வளர்ந்து பொதுவான மனித வாழ்வில் ஆழ்ந்தமைதான் சுபைர், கவிஞராகவும் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் உரையாசிரியராகவும் வெளியீட்டாளராகவும் பரிணமிக்கக் காரணமாயிருக்க வேண்டும்.
நல்லதொரு கவிஞராகப் பிரசித்தி பெற்ற சுபைர், சிறுவர்களுக்காக எழுதிய பாடல்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. பொருத்தமான ஒழுக்க விழுமியங்களை சிறுவர் உள்ளங்களில் விதைக்க அவர் கையாண்ட வழிமுறைகள் மெச்சத்தக்கவை.
அவர் எழுதிய பல கவிதைகளும், கட்டுரைகளும் இலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமன்றி இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.
அவருக்கு 1981ம் ஆண்டு, கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் "ஈழத்துக் கவிமணி' என்ற பட்டம் எமது மதிப்பிற்குரிய பேராசிரியர் சு. வித்தியானந்தனால் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கான மாதாந்த சஞ்சிகையொன்றினை "மணிக்குரல்" என்ற பெயரில் 1961 முதல் மூன்றாண்டுகள் நடத்தியவர். கவிமணி ஸுபைர்.
மிகுந்த ஆர்வத்தோடும் சிரத்தையோடும் அவர் வெளியிட்ட மணிமணியான மணிக்குரல் இதழ்கள், எம் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றன. மணிக்குரல் பதிப்பகத்தின் வாயிலாகச் சில நூல்களையும் கவிமணி ஸுபைர் வெளியிட்டார்.
தன் படைப்புகள் மட்டுமன்றி ஏனையோர் படைப்புக்களும் மக்களைச் சென்றடைய வேண்டுமென்ற வேட்கையின் விளைவாக அன்று அவர் எடுத்த பிரயத்தனங்கள் பலவாகும்.
உளஞ்சாம்பி ஒதுங்கி நின்ற கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களுக்கு உற்சாகமளித்து, மீண்டும் அவரை எழுதத் தூண்டியமை ஸுபைர் ஆற்றிய பயன்மிக்கதொரு பணியாகும்.
அதனை அவர் கருதாதிருந்திருப்பின், கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் அருமையான படைப்புக்களான இக்பால் இதயம், ஜாவீத் நாமா, ரூபய்யாத். செய்னம்பு நாச்சியார் மான்மியம் கார்வான் கீதம் முதலானவற்றை யாம் கண்டிருப்போமோ என்பது கேள்விக்குரியதாகும்.
வலிய முயற்சிகளை மேற்கொண்டும் ஏனையோர் முயற்சி களுக்கு உதவியும் தம் வாழ்வினைப் பண்புடைத்தாகவும் பயனுடைத்தாகவும் ஆக்கிக் கொண்ட கவிமணி ஸுபைர் அன்புள்ளமும் மனிதாபிமானமும் கொண்டவர்.
Tags:
“ஈழத்துக் கவிமணி" சுபைர்