“கமாலியா பாடசாலை” என்ற பெயரில் 1934ல் கல்ஹின்னையில் பாடசாலைக் கல்வி தொடங்கியுள்ளது. அதுவே பின்னர் “அல்-மனார்” மகா வித்தியாலயமாக மாறி - இன்று தேசியப் பாடசாலையாக உருவாக்கம் பெற்றுள்ளது.
அல்மனாரில்1962ம் ஆண்டில் முதலாம் தரத்தில் 838வது சேர்விலக்கத்தில் சேர்க்கப்பட்ட மாணவன் தற்போது வேட்டையின் பிரதான ஆக்கங்களைப் படைத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
1967ம் ஆண்டில் - தான் ஐந்தாம் தரத்தில் கற்கின்றபோதே Ceylon Daily News பத்திரிகையின் Juniors Club அங்கத்தவர்களில் ஒருவராகச் சேர்ந்து தனது எழுத்துப்பணியை ஆரம்பித்துள்ள அந்த மாணவன் அவ்வேளையில் வகுப்பாசிரியராகப் பணிபுரிந்த உடுதெனியைச் சேர்ந்த ஜனாப் எஸ். எம். மஹ்தூம் மற்றும் மடவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப் எம். நஜிமுதீன் ஆகிய ஆசிரியர்களின் வழிகாட்டலில் தனது எழுத்துத்துறையை மேம்படுத்திக் கொள்வதில் அதிகரிசனை காட்டியுள்ளமையும் - “நிரைமலர்” என்ற கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றை மாதாந்தம் வெளியிட்டு வந்துள்ளமையும் வேட்டையின் தேடலிலிருந்து அறிய முடிகின்றது.
நிரைமலரின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்த எஸ். எம். இம்தியாஸ் அவர்களும் வேட்டைக்கு ஆக்கங்கள் எழுதி வருவதும்1967ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த “நிரைமலர்” கையெழுத்துப் பிரதியை இன்று வரை அவர் தன்னிடம் பாதுகாப்பாக வைத்திருப்பதும் ஈன்று குறிப்பிடத்தக்கது
.
“கல்ஹின்னை அல்மனார்” 1967களில் ”முஸ்லிம் மகா வித்தியாலயம்” என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளமை ”நிரைமலர்" கையெழுத்துப் பிரதியிலிருந்து அறிய முடிகின்றது.
உடுதெனியைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்பொழுது கட்டுகஸ்தொட்டை நகரில் வாழ்ந்துவரும் ஆசிரியர் எஸ். எம். மஹ்தூம் அவர்கள் ஆரம்ப நியமனம் பெற்ற பாடசாலை கல்ஹின்னை அல்மனார் என்பதும் - நீண்ட காலமாக அவர் அங்கு கற்பித்து அதிகமான மாணவர்களுக்குக் கற்றலில் வழிகாட்டி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“நிரை மலரு”க்கு ஆக்கங்கள் எழுதியவர்களுள் எஸ். எம். நஸீர் மற்றும் கே. அமானுள்ளா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பிற்காலத்தில் எஸ். எம். நஸீர் லண்டன் சென்று நுண்ணுயிரியல் துறைப்பட்டதாரியாக இலங்கை வந்தார்.
லண்டன் சென்ற கே. அமானுள்ளா தற்பொழுதும் அங்கேயே வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் பிரபல உலமாவும் - பல்கலைக்கழஞ்சிய எழுத்தாளருமான காலஞ்சென்ற அல்ஹாஜ் எச். ஸலாஹுதீன் அவர்களது மருமகனுமாவார்.
1965 - 67 வரை ஜனாப் கபூர் அவர்கள் கல்ஹின்னை அல்மனாரில் அதிபராகப் பணிபுரிந்த பின்னர் - புதிய அதிபர் ஒருவர் நியமனம் பெறும் வரைக்கும் பதில் அதிபரே 1969 வரையிலும் பாடசாலை நிருவாகத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
1969 இறுதிப்பகுதியில் ஜனாப் ஏ. ஸீ. எம். பளீல் அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார்கள். அக்குரணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் தனது சொந்தக் காரிலேயே பாடசாலைக்கு வருகை தந்து கொண்டிருந்தமை அக்காலத்து அல்மனார் மாணவர்களுக்குப் பெருமையையும் பெருமகிழ்ச்சியையும் கொடுத்ததெனலாம்.
காரணம் அக்காலப் பகுதியில் இரண்டே இரண்டு ஹில்மன் ரக வாடகைக் கார்களும் - தேயிலைக் கொழுந்து மூடைகளை ஏற்றி - இறக்கவென இரண்டு பழைமையான லொறிகள் மாத்திரமே கல்ஹின்னைக் கிராமத்தில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தன.
அதிபர் பளீல் அவர்களைத் தொடர்ந்து 1970ம் ஆண்டின் நடுப்பகுதியில் கல்ஹின்னை அல்-மனாருக்கு அதிபராக நியமனம் பெற்று வந்த ஜனாப் என். எம். ஹனிபா அவர்களின் காலத்திலேயே கற்றல் நடவடிக்கை - விளையாட்டுத்துறை மாத்திரமன்றி கலை-இலக்கியத்துறையிலும் பாடசாலை கனிசமான அளவில் முன்னேற்றம் கண்டது.
வர்த்தகப்பிரிவின் தோற்றம்
ஜனாப் என். எம். ஹனிபா அவர்களின் காலத்தில் கல்ஹின்னை அல்மனார் கற்றல் துறையிலும் வெளிக்கள நடவடிக்கைகளிலும் அதிக முன்னேற்றம் கண்டமைக்கு அதிபருக்கு ஒத்துழைப்பை நல்கிய ஆசிரிய குழாத்தைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும்.
முக்கியமாகப் பதில் அதிபராக நீண்ட காலம் கடமை புரிந்துகொண்டிருந்த - கிராம மக்கள் அனைவராலும் “ஆப்தீன் மாஸ்டர்” என்று அன்போடழைக்கப்பட்டு வந்த காலஞ்சென்ற எம். ஜே. ஆப்தீன் ஆசிரியர் அவர்களையும் வர்த்தகத்துறைக்குப் புதிதாக நியமனம் பெற்று வந்த வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் திருவாளர் டப்ளிவ். ஜே. சூசைரத்தினம் அவர்களையும் குறிப்பிட வேண்டும்.
திருவாளர் சூசைரத்தினம் அவர்களது வருகையுடனேயே கல்ஹின்னை அல்மனாரில் க.பொ.த. சாதாரணதர வர்த்தகப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்வித்திணைக்களத்தினால் பாடசாலைக்கு “ரெமிங்டன்ரேன்” தமிழ் தட்டச்சுப்பொறிகள் வழங்கப்பட ஆசிரியரினது அயரா முயற்சி காரணமாக அமைந்தது மட்டுமல்லாது அவரின் உந்துதலே கனிசமான மாணவ-மாணவியர் தமிழ் தட்டெழுத்து - தமிழ் சுருக்கெழுத்து ஆகியவற்றைக் கற்பதிலும் பயிற்சி பெறுவதிலும் ஈடுபாடு கொள்ளவைத்ததெனலாம்.
1971ம் ஆண்டில் க.பொ.த. சாதாரணதர வர்த்தகப்பிரிவில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரத்தில் கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டபோதிலும் - தொடர்ந்தும் உயர்தர வர்த்தகப்பிரிவில் கற்பதற்கான அனுமதி இப்பிரதேச பாடசாலைகள் எதிலும் இல்லாதிருந்தமை பெருங்குறையாவிருந்தது.
இவ்விடயத்தில் பாடசாலை ஆசிரியர்கள் உயர் வகுப்பு மாணவர்கள் உட்பட பெற்றோர்களும் அதிக அக்கறை காட்டி கல்ஹின்னை அல்மனாரில் உயர்தர தமிழ்மொழியிலான வர்த்தகப்பிரிவை ஆரம்பிப்பதற்காக அயரா முயற்சிகளைச் செய்து வந்தனர்.
அக்காலை - அச்சூடகத்தில் செய்திகள் வெளிவந்தால் அவற்றிற்கு அரசாங்கமும் அரச திணைக்களங்களும் அதிமுக்கிய இடங்கொடுத்து குறைபாடுகளைச் சரிசெய்யும் விடயத்தில் கவனம் செலுத்துகின்ற நடைமுறை வழக்கிலிருந்தது.
அந்த வகையில் - தமிழ் மொழியிலான வர்த்தகத்துறை உயர்தர வகுப்புக்கள் இப்பகுதிப் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படாத குறை கல்வியமைச்சிற்குச் சுட்டிக்காட்டப்பட்டு, 19.07.1973ம் ஆண்டு “தினபதி” நாளிதழ் “ஆசிரியருக்குக் கடிதம்” பகுதியில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டமையைக் குறிப்பிட வேண்டும்.
எப்படியோ பல்கோண முயற்சிகளின் காரணமாக தமிழ் உயர்தர வர்த்தகப்பிரிவுக்கான அனுமதி கல்ஹின்னை அல்-மனாருக்குக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
வணிக மன்றம்
ஆசிரியர் டப்ளிவ் ஜே. சூசைரத்தினம்
நல்லாசான் திருவாளர் டப்ளிவ். ஜே. சூசைரத்தினம் அவர்கள் கொழும்பு டீ.எஸ். சேனாநாயக வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் வரைக்கும் தொடர்ந்தும் அல்மனாரில் கடமையாற்றி உயர்தர தமிழ் வர்த்தகப்பிரிவு மாணவர்களது கல்வி மேம்பாட்டில் அதிக அக்கறை செலுத்தி - கடும் முயற்சி - கற்றல் நுணுக்கம் - மாணவர்களோடு நட்புடன் பழகி கல்வியூட்டும் திறன் - என்பவற்றால் அவர்களைக் கல்வி நடவடிக்கைகளில் ஆர்வத்தோடு ஈடுபட வைத்தமையை இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது.
கல்ஹின்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியை காலஞ்சென்ற கே. ஸஹ்தியா மற்றும் ஜனாபா எஸ். எச். ஹலீமா போன்றோர் உயர்தர தமிழ் வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கு பொருளாதாரப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தமையையும், திக்வல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் ஜனாப் இத்கான் அவர்கள் சாதாரணத்தர வகுப்புகளுக்கு வர்த்தகம் - பொருளாதாரப் பாடங்களை கற்றுக் கொடுத்தமையையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
பாடசாலையின் வணிக மன்றத்தால் அரையாண்டு மலராக வெளியிடப்பட்டு வந்த வணிக மலரின் 1972ம் ஆண்டைய நிருவாக முகாமையாளராகக் கடமையாற்றிய மாணவன் ஐ. ஏ. ஸத்தாரினதும் ஆசிரியர் டப்ளிவ் ஜே. சூசைரத்தினம் அவர்களினதும் அதீத முயற்சியினால் - தட்டச்சிடப்பட்டு - கல்லச்சில் பதிப்பிக்கப்பட்டு - பாடசாலை கேட்போர் கூடத்தில் வணிக மலரின் வெளியீட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.
“வணிக மலர்” வெளியீட்டு விழா
தட்டச்சிடப்பட்டு - கல்லச்சில் பதிப்பிக்கப்பட்டு - பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற “வணிக மலர்” சஞ்சிகை வெளியீட்டு விழாவின்போது, முதலாவது சிறப்புப் பிரதியை - நீண்டகாலம் லண்டனில் வைத்தியத்துறையில் உயர்கல்வி கற்று அங்கேயே தொழில் புரிந்து விடுமுறையில் தாயகம் வந்திருந்த காலஞ்சென்ற வைத்தியக் கலாநிதி எம். ஸீ. எம் ஸுபைர் அவர்கள் வாங்கி, சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவுக்கு - அவ்வேளையில் வட்டாரக் கல்வி ஆலோசகராகவிருந்த ஜனாப் எம். ஐ. எம். ஷெரீப் அவர்கள் தலைமை தாங்கினார்.
இம்மலர் வெளியீட்டிற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த ஆசிரியர்களுள் ஜனாப் எப். ஏ. ஸலாம், எஸ். எச். எம். தாஜுதீன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
இல்ல விளையாட்டு விழா
காலஞ்சென்ற அதிபர் என். எம். ஹனிபா அவர்களது காலத்தில் பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றமை இன்றும் கல்ஹின்னை மக்களால் நினைவு கூரப்படுவதுண்டு.
1973 பெப்ரவரி மாதம் 10ம் 11ம் திகதிகளில் பாடசாலை வளாகத்திலேயே நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டிக் கொண்டாட்ட நிகழ்வில் கண்டி மாவட்டப் பிரதம கல்வியதிகாரி திருவாளர் எல். பீ. சமரகோன் அவர்களும் - கல்வி ஆலோசகர் ஜனாப் எம். ஐ. எம். ஷெரீப் அவர்களும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்ததுமட்டுமன்றி - வெற்றி பெற்றவர்களுக்குக் கேடயங்களையும், பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விளையாட்டு விழாவின் வெற்றிக்காக உழைத்த அல்மனார் ஆசிரியர்களுள் திருவாளர் டப்ளிவ். ஜே. சூசைரத்தினம் - ஜனாப் ஏ. எம். புவாட் - மர்ஹும்களான எம். ஜே. ஆப்தீன் - எச். இஸட். எம். ஸுபைர் மற்றும் அயற்பாடசாலையொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியர் ஜனாப் எஸ். எச். எம். தாஜுதீன் ஆகியோர்களைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.
இவ்விளையாட்டு விழா பாடசாலையின் கமர், ஷம்ஸ், ஹிலால், நுஜும்ஆகிய நான்கு இல்லங்களுக்கிடையேயும் நடைபெற்றது.
கமர் இல்லப்பொறுப்பாசிரியராக காலஞ்சென்ற ஏ. எச். எம். ஹுஸைன்அவர்களும் கூட்டு இல்லத்தலைவர்களாக கே. எம். ஹம்ஸா, ஏ. ஏ. நதீமாவும் - ஷம்ஸ் இல்லப் பொறுப்பாசிரியராக காலஞ்சென்ற எச். இஸட். எம். சுபைர் அவர்களும் கூட்டு இல்லத்தலைவர்களாக எஸ். எம். ஸவாஹிர், எச். எம். சுபைதாவும், ஹிலால் இல்லப்பொறுப்பாசிரியராக ஜனாப் என். எம். எல். எம். உவைஸ் அவர்களும் கூட்டு இல்லத்தலைவர்களாக எம். ஸீ. எம். மன்ஸுர், எஸ். எச். அஸீஸாவும், நூஜும் இல்லப்பொறுப்பாசிரியராக ஜனாப் எஸ். ஏ. ஹமீத் அவர்களும் கூட்டு இல்லத்தலைவர்களாக எஸ். எம். ஹம்ஸா, எம். ஸீ. நதீமாவும் செயல்பட்ட இவ்விளையாட்டுப் போட்டியில் முதலாமிடத்தை நூஜும் இல்லமே பெற்றுக் கொண்டது.
நாவலாசிரியர் “மாமா”
மர்ஹூம் என். எம். ஹனிபா அவர்களின் கலா நிலையமே கல்ஹின்னையின் முதற்பதிப்பகமாகும். "மாமா" என்ற புனைப்பெயரில் மர்ம நாவல்கள் எழுதி வந்த இவர், தனது பதிப்பகத்தின் மூலம் - ஏமாற்றம், இலட்சியப்பெண், பகற்கொள்ளை, மர்மக்கடிதம், குடும்பவிளக்கு, பாவை பெற்ற பரிசு போன்ற பல நாவல்களை வெளியிட்டுள்ளார்.
"இவருடைய நாவல்களின் பெயர்கள் ஏதோ மர்ம நாவல்கள் போலத் தோன்றினாலும் சமூகப் பிரச்சினைகளைத் துல்லியமாக விளக்கிச் சிந்தனையைத் தூண்டுபனவாக அமைந்துள்ளதை வாசிப்போர் உணரலாம்" என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர்
கலாநிதி சு. வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இவரது "ஏமாற்றம்" என்ற நூல் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களால் 1963ம் ஆண்டு மார்ச்சு மாதம் 24ம் திகதி கண்டி, திருகோணமலை வீதியிலுள்ள ஜின்னா மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அன்றைய அதிபராயிருந்த மர்ஹூம் ஐ. எல். எம். மஷ்ஹூர் தலைமையில் நடந்த இவ்விழாவில் 'பள்ளிவாசல்களில் வழங்கும் புனித மொழிகளுள் ஒன்று தமிழ்’ என்ற தலைப்பில் கலாநிதி சு. வித்தியானந்தன் உரை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“மாமா” என்ற புனைப்பெயர் கொண்டு அன்போடழைக்கப்பட்டு வந்த - மேலைத்தேய உடையில் நாட்டம் கொள்ளாத அன்னார், கல்ஹின்னை அல்மனாரில் அதிபராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில், 1973ம் ஆண்டைய முத்திங்கள் கலாசாலை சஞ்சிகை “மதிமலரி”ன் பிரதம ஆசிரியராகவும், கமர் இல்லத்தின் செயலாளராகவும் ஐ. ஏ. ஸத்தார் இருந்து வந்துள்ளார்.
கல்ஹின்னை வரலாறு கண்ட கலைவிழா
கல்ஹின்னை அல்மனாரில் மர்ஹும் என். எம். ஹனிபா அவர்கள் பணிபுரிந்த காலப்பகுதியிலேயே மாபெரும் கலைவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றும் தொடர்ந்து மூன்று நாட்களாக பாடசாலை கலை அரங்கில் நடைபெற்றது.
இக்கலை விழா பாடசாலை வாசிகசாலைக்கு நூல்கள் வாங்கும் நோக்கத்திற்காக நிதி சேர்க்கும் எண்ணக்கருவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வெண்ணக்கருவை ஆசிரியர் - மாணவர்கள் மத்தியில் புகுத்திவைத்த பெருமை கவிஞர் M. C. M. சுபைர், மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் A. M. புவாட் ஆகியோர்களையே சாரும்.
கலை விழாக்கொண்டாட்ட நிகழ்வைக் கிராம மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் கல்ஹின்னைக் கிராமத்தின் பட்டிதொட்டி தோறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.
குறிப்பாக பெபிலகொல்லை என்ற இடத்தில் அமைந்திருந்த விசாலமான மதிலொன்றில் கிராம மக்களை ஈன்றிழுத்து விழாவுக்கு வருகைதர வைக்கும் வகையிலான சுவரொட்டியொன்று நிர்மாணிக்கப்பட்டது.
சுவரொட்டிகளைத் தம் கைகளாலேயே வரைந்து நிர்மாணித்த பெருமை பிரபல ஓவியர் ரைத்தராவளை அஸீஸ் அவர்களையும் ஆசிரியர் எஸ். எச். எம். தாஜுதீன் அவர்களையுமே சாரும்.
இந்த இடத்தில் பெபிலகொல்லை பற்றி சற்றுக் கூறவேண்டியுள்ளது. இது கல்ஹின்னையின் ஆரம்பகாலப் பாட்டினமாகும். கல்ஹின்னையில் ஏனைய சிறு சிறு பட்டினங்கள் உருவாவதற்கு முன்பே, ஊர் மக்கள் தமது அன்றாட தேவைகள் அனைத்துக்குமே தேடிவரும் சந்தைப்பட்டினமாக பெபிலகொல்லை இருந்து வந்துள்ளது.
இறைச்சிக்காடை, உணவகங்கள், பலசரக்கு மொத்த விற்பனைக் கடைகள், தையற்கடை, காய்க்கறிக்கடை, பத்திரிகைக்கடை, தபாலகம், சிகை அலங்கார நிலையம் போன்ற அனைத்துமே இச்சிறு பட்டினத்தில் அமைந்திருந்தன.
1967க்குப் பின்னர் பெபிலகொல்லையில் ஹலீம்தீன் அவர்களது கடையை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அவர் தனது கடையில் ஏனைய பொருட்கள் விற்பனையோடு, பத்திரிகைகள் வினியோகத்தையும் செய்து வந்தார். தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, Daily News மற்றும் சிங்களப் பத்திரிகைகளும் அங்கு விற்பனை செய்யப்பட்டன.
அத்துடன் அவர் தனது கடையின் ஒரு பகுதியை வாசிகசாலையாகப் பயன்படுத்தி வந்தார். குறிப்பாக அந்தக்காலத்தில் பத்திரிகை வாசிப்பில் ஆர்வமிருந்த பலருக்கு சொந்தப் பணத்தில் தினந்தோறும் பத்திரிகை வாங்கும் வசதி இருந்ததில்லை. அதனால், அவர் தனக்கு விநியோகத்திற்கு வரும் பத்திரிகைகளில் ஒன்றிரண்டை ஒதுக்கி வைத்து, ஆர்வவமுள்ளவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவித்தமை மறக்கமுடியாததாகும்! கல்ஹின்னையின் இன்றைய எழுத்தாளர்கள் பலர், அவரது வாசிகசாலையில் நாளேடுகளை வாசித்தவர்கள் என்பது மறக்கமுடியாத உண்மையாகும்.
இவ்வாறான கல்ஹின்னையின் பிரசித்திபெற்ற சந்தைப்பட்டின மதிலை அலங்கரித்த சுவரொட்டி கல்ஹின்னையின் வரலாறு கண்ட கலைவிழாவின்போது மூன்று நாடகங்கள் மேடையேற்றப்படும் என்பதை அங்குவந்துபோகும் மக்களுக்கு மிகத்தெளிவாகத் தெரியப்படுத்தியது.
கலைவிழாவில் சிறப்பு நாடகமாக “லண்டன் மாப்பிள்ளை” தேர்ந்தெடுக்கப்பட்டது!
அவ்வேளை சாதாரணதர வகுப்பில் கற்றுக் கொண்டிருந்த மூஸாமுனையைச் சேர்ந்த மாணவன் எஸ். எம். நியாஸ் லண்டன் மாப்பிள்ளையாக நடித்து ஊர் மக்களது அமோக பாராட்டைப் பெற்றார்.
இவர் மூஸாமுனையின் முதலாவது பல்கலைக் கழகப்பட்டம் பெற்றவரும், சில காலம் அல்மனாரில் ஆசிரிய சேவை புரிந்தவருமான, தற்போது சவுதி அரேபிய நாட்டில் கணக்காளராகப் பணி செய்துவரும் எஸ். எம். ஸஹீலின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து தனிநபர் ஹாஷ்ய நாடகமாக “சிரிக்கவும் நேரமில்லை” என்ற நாடகத்தை மூஸாமுனையைச் சேர்ந்த மாணவன் எஸ். எம். பஸீல் சிறப்பாக நடித்து ரசிகர்களை வயிறு குழுங்கச் சிரிக்க வைத்தமை இன்றும் கிராம மக்கள் மறந்துவிடவில்லை.
ஐ. ஏ. ஸத்தார், எஸ். எம். பஸீல், எஸ். எம்.ஸவாஹிர்.
மூன்றாவது “அம்றிப்னு ஆஸ்” என்ற வரலாற்று நாடகம் இடம் பெற்றது. இந்நாடகத்தில் அப்போது அல்மனாரில் உயர் வகுப்பு கலைப்பிரிவில் கற்றுக் கொண்டிருந்த - தற்போது உடுநுவரை ஹந்தஸ்ஸையில் வாழ்ந்து வரும் இளைப்பாறிய ஆசிரியர் ஜீ. என். எம். மன்ஸுர் அம்றிப்னு ஆஸாகவும், அவரது நண்பர் தாரீக்காக மூஸாமுனையைச் சேர்ந்த ஐ. ஏ. ஸத்தாரும் நடித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாப். ஜீ. என். எம். மன்ஸுர்
நீண்டகாலமாக ஆசிரியர் தொழில் புரிந்து 2010ம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஜீ. என். எம். மன்ஸுர் தற்போது உடுநுவரை- பூவெலிக்கடை பகுதியில் வாழ்ந்து வருகின்றார்.
பூவெலிக்கடை கலாசார அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவராகவும், வாலிப முன்னணியின் தலைவராகவும் பணிபுரிந்துள்ள அவர், பள்ளிவாசல் கட்டிட நிர்மாணப் பணிகளில் முன்னின்று உழைத்தவருமாவார். இவர் ஜனாப் N. அப்துல் அசீஸ் ஆசிரியர் அவர்களது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
முறையே “லண்டன் மாப்பிள்ளை” – “சிரிக்கவும் நேரமில்லை” நாடகங்களை “ரைத்தராவளை அஸீஸ்” அவர்கள் எழுதி நெறிப்படுத்தினார்.
வரலாற்று நாடகத்தை அப்போது கல்ஹின்னை அல்-மனாரில் பொருளாதாரத்துறை ஆசிரியராகக் கற்பித்துக் கொண்டிருந்த கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் ஏ. எல். ஜவாத் அவர்கள் எழுதி நெறிப்படுத்தியமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
ஏனைய கலை நிகழ்ச்சிகளைக் காலஞ்சென்ற கவிஞர் எம். ஸீ. எம். ஸுபைர் அவர்கள் நெறிப்படுத்தியமையும், அந்நாட்களில் பாடசாலையின் பாடகராகப் பிரபல்யம் பெற்றிருந்த மாணவன் தஸ்தகீர் பல மொழிகளிலும் பாடல்களைப் பாடி, ரசிகர்களைக் களிப்பில் ஆழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்திலேயே பாடசாலைக்கான புதிய பாடசாலைக் கீதமான “அல்லாஹ் உன்னைப் புகழ்கின்றேன்…” என்று தொடங்கும் பாடசாலைக் கீதத்தை கவிஞர் ஸுபைர் அவர்கள் இயற்றிப்பாட வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றுவரை இதுவே அல்-மனாரின் பாடசாலைக் கீதமாக இசைக்கப்பட்டு வருவது கவிஞர் அவர்களை கல்ஹின்னைக் கிராமம் எப்போதும் மறந்துவிடவில்லை என்பதற்குச் சான்றாகும்.
1954 ல் பண்டாரவளையில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்த கவிஞர், 1956 ல் “மலர்ந்த வாழ்வு” என்ற கவிதை நூலை வெளியிட்டார். 1960 ல் “மணிக்குரல்” மாதாந்த சஞ்சிகையை வெற்றிகரமாக நடாத்தி, கிராம இலக்கிய ஆர்வலர்களை உருவாக்கியமை “வேட்டை” மின்சஞ்சிகையின் வருகைக்கான முதற்படி என்று குறிப்பிடின் மிகையாகாது.
கவிஞர் சுபைர் அவர்கள் கவிதை, சிறுவர் பாக்கள், நாட்டுப் பாடல்கள் ஆகியவற்றுக்கு வழங்கியுள்ள பங்களிபானது கவித்துறையில் நீங்காத நிலையான ஓர் இடத்தை தமிழ்பேசும் நல்லுலகில் அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.
இரண்டொரு கவிதைகளை மட்டும் எழுதிவிட்டுப் போலித்தனமாக, தானும் ஒரு கவிஞர் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதர்கள் மத்தியில் ஒரு நிரந்தரக் கவிஞராக, உண்மைக் கவிஞராகப் போற்றப்படும் இவர், கல்ஹின்னை அல்மனரில் நீண்டகாலம் பணிபுரிந்து, கிராமத்தில் கலை - இலக்கிய ஆர்வலர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும்.
“ஆப்தீன் மாஸ்டர்”
கல்ஹின்னை அல்மனாரில் நீண்ட காலமாக பதில் அதிபராக கடமை புரிந்த கிராம மக்கள் அனைவராலும் “ஆப்தீன் மாஸ்டர்” என்று அன்போடழைக்கப்பட்டு வந்த கண்டி நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற எம். ஜே. ஆப்தீன் அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார்.
அதிபர் பளீல் அவர்களது காலத்திற்கும் முன்னரிலிருந்தே கல்ஹின்னை அல்மனாரில் பதில் அதிபராகக் கடமை புரிந்த பெருமை “ஆப்தீன் மாஸ்டர்” அவர்களுக்குண்டு.
“ஆப்தீன் மாஸ்டர்” என்றால் அன்னாரது முறுக்கிய கருநிற மீசையும், உயர்ந்த திடமான உடற்கட்டும்தான் நினைவுக்கு வரும். மேலோட்டமாக பார்க்கின்றபோது கண்டிப்பான ஆசிரியராக காணப்பட்டாலும், அவருக்குள் அடங்கியிருந்த அன்பையும் பாசத்தையும் அக்காலத்து மாணவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
மாணவர்களின் நல்லொழுக்கம், நன்னடத்தை என்பவற்றைக் கருத்தில் கொண்டே அன்னார் அன்பு கலந்த கண்டிப்புடன் செயற்பட்டு, நல்லொழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கிச் சென்றார்.
மாணவர்களுக்கு ஆங்கில மொழி அறிவை ஊட்ட வேண்டும் என்பதில் அவர் அக்கறை மிகக் கொண்டிருந்தார். அதனால் மாணவர்களோடு எப்போதும் ஆங்கிலத்திலேயே கதைப்பார்.
வகுப்பறையினுள் ஆங்கில மொழிப்பாடம் நடக்கின்றபோது எவராவது பிறமொழிகளில் கதைத்தால், ஒரு சிறு தொகை தண்டப்பணம் அறவிடும் வழக்கமிருந்ததோடு, சேரும் பணத்தை வகுப்பறைக்குத் தேவையான திரைச்சேலை, மேசைப் பிடவை, கரும்பலகை அளிப்பான், காகிதாதிகள் போன்றவற்றை வாங்கிக் கொள்ள உபயோகிப்பர்.
இதுவே ஆப்தீன் மாஸ்டர் காலத்தில் ஆங்கிலம் பேசும் மாணவர்கள் உருவாகக் கரணமாக அமைந்தது எனலாம்.
மட்டுமன்றி, பாடசாலையில் “ஸ்கௌட்” குழுவை ஏற்படுத்தி, பாடசாலை வளாகத்தில் பாசறைகள் பலவற்றை வெற்றிகரமாக நடாத்தியதன் மூலம் மாணவர்களை சமூக சேவையின் பக்கம் ஆர்வம் கொள்ளச் செய்த பெருமையும் “மாஸ்டர்” அவர்களையே சாரும்.
அவரோடு சேர்ந்து உழைத்தவர்களுள் ஆசிரியர்களான ஹுசைன், ஆறுமுகம், சுப்பையா, A. M. புவாஜி, S. M. மஹ்தூம் போன்றோர்களைக் குறிப்பிட்டுக் கூறலாம். மட்டுமல்லாது “ஹபீயூட்டாலீம்” என்று கல்ஹின்னை மக்களால் அன்போடழைக்கப்பட்ட “மௌலவி” அவர்களும் இந்த குழுவுடன் இணைந்து மாணவர்களை ஊக்குவித்தமை குறிப்பிடத்தக்கது.
அந்நாட்களில் மாணவன் M. H. M. கலீலின் தலைமைத்துவத்தில் முஹ்சீன், S.H. நிலாப்தீன், C. M. மன்சூர், F. M. மக்கீன் போன்ற பல மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் “ஸ்கௌட்” பயிற்சிக் குழுவில் செயற்பட்டதோடு, கண்டி போகம்பரையில் கோலாகலமாக நடைபெற்ற “ஜம்போரி”யிலும் மாணவர்களைப் பங்குகொள்ள வைத்த பெருமை “ஆப்தீன் மாஸ்டர்” அவர்களைச் சாரும்.
அதிபர் கபூர், அதிபர் A. C.M. பளீல், அதிபர் N. M. ஹனிபா ஆகிய மூன்று அதிபர்கள் காலத்திலும் உப அதிபராக, கல்ஹின்னை அல்மனாரில் நீண்டகாலம் பணிபுரிந்து, இடமாற்றம் பெற்று, கண்டிப் பிரதேசப் பாடசாலை ஒன்றிற்குச் சென்ற ஆப்தீன் மாஸ்டர் அவர்கள், சில காலம் அங்கு சேவை புரிந்து, ஓய்வு பெற்ற நிலையில் உடத்தலவின்னையில் சில காலம் வாழ்ந்து இறையடி சேர்ந்தார்கள்.
இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக! அன்னாரின் பிழை பொறுத்து, பிர்தௌஸ் என்கின்ற சுவர்க்கத்தைக் கொடுத்தருள்வானாக!
பிள்ளைகளின் பிரார்த்தனைகள் எந்தளவிற்கு மறைந்த பெற்றோருக்கு நன்மைகளைக் கொண்டு சேர்க்குமோ, அதுபோன்றே மாணவர்களின் பிரார்த்தனைகளும் மறைந்த ஆசிரியர்களுக்கு நன்மை சேர்க்கும் என்பதால் நாம் அவர்களுக்காகப் பிரார்த்திப்போமாக!
கணீரென்ற குரல்வளம் கொண்ட மாணவன் கலீல்!
மாணவர் தேர்ச்சிச் சங்க மேடையில் தனது கணீரென்ற குரல் வளத்தால் கீதமிசைப்பதில் M. H. M. கலீல் திறமை மிகக்கொண்டிருந்தார்.
கீதமிசைப்பதில் மாணவன் கலீலுக்கிருந்த ஆர்வமும், அதனை ஊக்குவிப்பதில் ஆசிரியருக்கிருந்த பற்றுதலுமே இறுதிவரை அவர்களது நெருங்கிய நட்பிற்குக் காரணமாக அமைந்ததெனலாம்.
அக்காலத்தில் தனக்கென சொந்தமாக “சார்பினா பெட்டி” வைத்திருந்த “ஆப்தீன் மாஸ்டர்” அவர்கள் மாணவன் கலீலின் கீதங்களுக்கு பக்கவாத்தியம் இசைப்பவராக இருந்தார். கீதங்களுக்கு மத்தளம் வாசிப்பதில் மாணவன் C. M. மன்சூர் திறமை மிகக் கொண்டிருந்தார்.
நல்லாசான்களின் பிராத்தனைகள் மாணவர்களை எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக வாழச் செய்யும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது என்பதற்கு அன்று மாணவனாக இருந்தபோது தன் ஆசிரியரின் நல்லாசி பெற்று, இன்று வர்த்தக ஜாம்பவானகத் திகழும் ஜனாப் M. H. M. கலீல் அவர்கள் ஒரு முன்னுதாரணமாகும்!
Tags:
ஐ.ஏ.ஸத்தார்