பண்டாரவளை முஸ்லிம்களின் நெஞ்சில் வாழும் கவிமணி

பண்டாரவளை முஸ்லிம்களின் நெஞ்சில் வாழும் கவிமணி

மறைந்த கவிமணி எம்.சீ.எம்.சுபைர் அவர்கள் நீண்டகாலம் ஆசிரியத்தொழில் புரிந்த பெருந்தகை. மனிதநேயம் மிக்க உதார புருஷர் அதிபர் ஜனாப். எஸ். எச். எம். யாசீன் அவர்களையும் கவிமணியையும் பண்டாரவளை முஸ்லிம்கள் சமமாக ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்று மதிப்பர். அவர்கள் இருவரைப் பற்றியும் இவர்கள் கதைக்க ஆரம்பித்தால், கண்கள் கலங்க அப் பொற்கால நினைவுகளை முன்கொணர்வர்.


கவிமணியவர்களை அவரின் ஆக்கங்கள் மூலமும், ஆசிரிய தொழிற் சங்கக் கூட்டங்களின் மூலமும் அறிந்திருந்தாலும், சுமார் பன்னிரண்டு வருடங்கள் உதவி ஆசிரியராகவும், அதிபராகவும் பண்டாரவளை சேர் ராசீக் பரீத் மகாவித்தியாலயத்தில் (அன்றைய ஸாஹிரா வித்தியாலயம்) கடமையாற்றும் காலத்தில் மிக அதிக மாக அறிந்து கொண்டேன். இப்பகுதி முஸ்லிம்களிடையே சிறப்பாகப் பழைய மாணவர்களின் நெஞ்சங்களிலே என்றும் கவிமணி வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்கிறேன்,

1924.5ம் திகதி அல்மத்ரஸதுல் ஸஹிராவாக முதலில் தொடங்கப்பட்டு, உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகவே அது இயங்கியது. 1960ம் ஆண்டு இலங்கையின் சகல பாடசாலை களும் அரசுடைமையாக்கப்படும் வரை, பணிப்பாளர் சபை ஒன்றினால் அது நிருவகிக்கப்பட்டது. இக்காலத்தில் அழுத்கமை முஸ்லிம் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்ட ஜனாப். எஸ். எச். எம். யாஸீன் அவர்களும், ஜனாப் எம். எஸீ, எம். சுபைர் அவர்களும் பணிப்பாளர் சபையினால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய விதம் பற்றியும், தங்கள் உள்ளங்களில் இருந்த உள்ளக் கிடக்கைகளையும் மிகச் சுவைபட ஜனாப் யாஸின் அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள்.

இவ்விருவரும் ஒன்றாக இணைந்து ஸாஹிராக் கலைக் கூடத்தின் ஊடாக ஆற்றிய பணியானது, சிறந்த புத்திஜீவிகளை உருவாக்கியது மாத்திரமல்லாமல், மனித நேயங் கொண்ட ஒரு சமூகத்தையே உருவாக்கினார்கள். இதற்காகச் சொல்ல வொண்ணாச் சவால்களை எதிர்கொண்டு வீறு கொண்ட தளபதிகளாக இருந்து மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தார்கள். ஒருகால கட்டத்தில், சுமார் ஒருவருட காலம், எவ்வித வேதனமும் இன்றி இருவரும் துன்பப்பட நேர்ந்தது. ஹோட்டலிலிருந்து சாப்பாட்டை எடுத்தும், வீடுகளில் இருந்து சிறுதொகைப் பணத்தைப் பெற்று இருவரும் பசியோடு பணியாற்றினார்கள். ஸாஹிரா பாடசாலையை இவர்கள் தமது இதயமாகக் கருதினார்கள்.
பண்டாரவளை நகரத்தில், கம்பீரத் தோற்றத்துடன் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளி முழு நகரத்திற்கும் எழிலூட்டுவதாக இன்றும் அமைந்துள்ளது. இப் பள்ளிவாசலுக்குப் பக்கத்திலேயே,
ஸாஹிராப் பாடசாலையும் அமைந்திருந்தது. பள்ளிக்கூடத்தின் ஓர் அறையையே, தன் வாழ்விடமாகக் கொண்டிருந்தார் கவிமனி அவர்கள்.

பாடசாலை தொடங்கப்பட்ட ஆரம்பகாலமானதால் அடிப் படைத்தேவைகள் அத்தனையும் தங்களால் தொடங்கவேண்டிய பாரிய பணி அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. பாடசாலையின் இலச்சினையை வரையும் போது, இந்திய முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியின் முன்னோடியும், அலிகார் பல்கலைக்கழகத்தின் தாபகருமான சேர் சையித் அஹமத்கானின் "Enter to leam, Go forth to Serve" என்ற பல்கலைக்கழகத்தின் தாரக மந்திரத்தை ஸாஹிராவின் தாரகமந்திரமாகவும் மாற்றிக் கொண்டார்கள். இதன் தமிழ் வடிவத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு கவிமணி சுபைரைச் சேர்ந்தது. 'புகுமின் கல்விகற்க; புறப்படுமின் சேவை புரிய" என்று மிக அழகாக, அழகு தமிழில் எவ்வித கருத்துச் சிதைவுமில்லாமல் அவர் வடித்தெடுத்தார். பயிற்சிக் கலாசாலை யில் இருந்து சாதாரண ஆசிரியர்களாகப் புகுந்து கற்றுக் கொண்டே சேவையையும் தொடர்ந்து மேற்கொண்டு, இருவரும் அத் தாரக மந்திரத்தினையே தமது வாழ்வு இலட்சியமாகவும் கொண்டார்கள்.
பாடசாலைக் கீதத்தையும் கவிமணி அவர்களே படைத்துத் தந்தார்கள். அங்கேயும் இவ்வடி நாதத்தைச் சேர்த்துக் கொண் டார்கள். 
 புகழும் தூய கலைக்கூடம் புகுந்துவிட்டோம் 
பயின்றுயர்வோம் புறப்படுவோம் 
பணிபுரிந்திட நாளும் புது உணர்வே அருள்வாய் 
என்ற இந்த அடிகள் மிகவும் உணர்ச்சிபூர்வமானவை மாத்திரமல்ல மேற்சொன்ன இலட்சியங்களையும் உறுதியாக்குகின்றன. 
 ஒரு ஆசிரியனின் மகத்துவம் மிக்கபணி, சிறந்த கற்பித்தலின் மூலம் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதாகும். கவிமணி ஒரு சிறந்த கவி. அதனால் தமிழ்மொழியையும் தமிழ் இலக் கியத்தையும் மிக மிகச் சிறப்பாகக் கற்பிக்கும் ஒரு ஆசிரியராக இருந்தார், 

அவரிடம் தமிழ் மொழி, இலக்கியம் கற்று, இன்று தமிழ் கற்பிக்கும் ஒரு ஆசிரியரிடம் நான் வினவும் போது இவ்வாறு கூறினார் 

'சுபைர் சேர் மிகவும் கனிவானவர். எந்தவொரு மாணவரையும் கடிந்து பேசியதே இல்லை. இனிய வார்த்தைகளைக் கொண்டே எங்களைத் திருத்தினார். அறிவுறுத்தும் போதெல்லாம் சிலேடை நயம் பொருந்தக் கதைப்பதில் வல்லவர். எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பது அவருக்குக் கிடைத்த பெரும் அருட்கொடை. தமிழை அவர் உச்சரிக்கும் பாணியே அலாதி. கற்பிக்கும் போது அமைதியாகயே கேட்டிருப்போம். பரீட்சைகளில் எல்லோருமே சித்தியடைந்தோம். கல்வி, ஒழுக்கம், சமய அறிவு என்பவற்றை மாணவர்களின் ஊடாக சமூகத்திற்குப் பரிமாற்றம் செய்தார். நான் அதிபராக இருந்த காலத்தில் இவ்விருவரையும் ஒவ்வொருவராக அழைத்துப் பாராட்டு வைபவங்கள் நடத்தினேன். 

1985ம் ஆண்டு கவிமணி சுபைர் அவர்கள் வந்தார்கள். நோய்வாய்ப் பட்டிருந்தும் கூட, கண்டியில் இருந்து புகையிரதத்தில் வந்து மிக மகிழ்வாக விழாவில் கலந்து கொண்டார்கள். விழாவிற்கு பழைய மாணவர்களும், ஊரவர்களும் திரண்டு வந்து வாழ்த்தினர். 

'சுபைர் சேரை ஒருமுறை பார்த்து விட்டுப் போக வேண்டுமென்றே அநேகர் சூழ்ந்திருந்தனர். அவர்கள் உரையாற்றிய விடயங்களை இன்றும் நினைக்கும் போது வாழ்வில் மறக்க முடியாத தினங்களுள் ஒன்றாக இத்தினம் அமைந்தது. அன்று இரவு கவிமணியவர்கள் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார்.நடு இரவு கழியுமட்டும் பண்டாரவளை அனுபவங் களைப் பற்றி என்னுடன் பரிமாறிக் கொண்டார். 

தனது சேவைக் காலத்தில் எத்தனையோ வருடங்கள் லீவே எடுக்கவில்லை. லீவு காலங்களில் கல்ஹின்னை செல்வது மிகக்குறைவு. வீட்டார் இங்கேயே வந்து என்னைப் பார்த்து விட்டுச் செல்வார்கள். பாடசாலைக் காலங்களும், விடுமுறை காலங்களும் நமக்கு ஒன்று. தான். கற்பித்தலிலும் வெளிவேலைகளான விளையாட்டு, கலை நிகழ்சிகளில் பயிற்றுவித்தல் போன்ற வேலைகளுக்குப் பயன் படுத்திக் கொள்வோம். ஊவா மாகாணத்தில் எந்தவொரு அமைப்பில் எந்தப் போட்டிகள் நடந்தாலும் ஸாஹிரா மாணவர் களைப் பயிற்றுவித்து வெற்றிபெற வழிவகுத்தோம்.

சிறப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிறுவர் நிகழ்சிகளில் கூட பங்குகொள்ளச் செய்தோம். ஊவா மாகாணத்திலே எமது காற்பந்து விளையாட்டுக்குழுவைச் "சம்பியன்"களாக ஆக்கினோம். இலங்கை முழுவதிலும் ஸாஹிராப் பாடசாலையை அறிமுகப்படுத்தி மிளிரச் செய்தோம்" என்று பெருமிதத்துடன் கூறினார். 

கவிமணியவர்கள் நன்றாகப் பாடக் கூடியவர் என்பதை அன்றுதான் அறிந்தேன். கவிமணியவர்கள் பண்டாரவளை ஸாஹிரா, ஸாஹிராகவே இருக்க வேண்டுமென விரும்பினார். சேர். ராசிக் பரீத் மகாவித்தியாலயமாகப் பெயர் மாற்றப்பட்டதில் இலேசான மனக்கவலை அவருக்கு இருந்தது. ஸாஹிராவில் சேவைக்காலத்தில் "ஸாஹிரா மலர்" என்ற சஞ்சிகையை ஏற்பாடு செய்து வெளியிட்டார்கள். மாணவர்கள் ஆக்கங்களுக்கான ஒருகளமாக இச்சஞ்சிகை அமைந்திருந்தது. 

இதன் பிரதிகள் இன்றும் பாடசாலை வாசிகசாலையில் இருக் கின்றன. அவற்றையெல்லாம் வாசிக்கும்போது, இக்கால மாணவர்களின் சிந்தனையின் தரம் மேலோங்கி இருந்ததை அவதானித்தேன். கவிமணி சுபைர் அவர்களின் தொண்டுகளில் அவர் அச்சிட்டு வெளியிட்ட மணிக்குரல் பத்திரிகை முக்கிய இடத்தை வகிக்கிறது. 

பண்டாரவளையில் இருந்தே இதை வெளியிட்டார்கள். அக்காலத்தில் பதுளை, வெலிமடை, ஹப்புத்தளை போன்ற ஊர்களில் பத்திரிகை கூடுதலான பிரசித்தம் பெற்றிருந்ததை நான் அறிந்து கொண்டேன். கவிமணி சுபைர் அவர்கள் மாணவர்களுடன் மாத்திரமல்ல, பெற்றோர்களாகிய எங்களுடனும் எவ்வித ஏற்றத்தாழ்வும். இல்லாமல் பழகிக் கொள்வார்கள். எங்கள் வீடுகளில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்" என்று மக்கள் இங்கே ஒருமித்த கருத்தை வெளியிடுகின்றனர். 

கவிமணி எம்.ஸீ. எம். சுபைர் அவர்கள் கவிஞராக ஆசிரியராக மட்டுமல்ல ஒரு சேவகராக, தோழனாக, மனிதநேயம் மிக்க வராக பண்டாரவளை மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண் டிருக்கிறார். 

பாடசாலையின் ஒரு மண்டபம், சுபைர் மண்டபம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. யா அல்லாஹ் அவர்களின் அனைத்துச் செயற்பாடுகளையும் பொருந்திக் கொண்டு ஜன்னதுல் பிர்தௌஸிலே அவருக்கு உயர்ந்த இடமளிப்பாயாக ஆமீன்

 


Post a Comment

Previous Post Next Post