கண்டி மாவட்டத்தின் வடமேற்கே ஓர் உயர்ந்த மலை முகட்டிலே நாற்றிசையும் இயற்கையின் அழகை அள்ளித்தரும் காட்சிகளுடன் ஓங்கி நிற்கிறது ஒரு பாராங்கல். ஊர் எல்லையின் வேலியாகக் கல்வேலி அமைந்திருப்பதால் கல்ஹின்னை எனும் பெயர் இவ்வூருக்கு வந்தது.
அக்காலத்தில் கிராமங்களில் மண்வீடுகளே அதிகமாகக் காணப்படும். கல்ஹின்னைக் கிராமத்திலும் கருங்கல் கொண்டு முதன் முதலாக உருவாகிய வீட்டை அடிப்படையாகக் கொண்டே “கல்லூடு” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. கல்லூட்டைப் பிறப்பகமாகக் கொண்டதால் கவிஞர் எம். எச். எம். ஹலீம்தீன் அவர்கள் ‘கல்லூட்டுக் கவிராயர் என அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
இவர் கல்ஹின்னை பேருலமா கல்லூட்டு ஆலிம் அல்ஹாஜ் ஹமீத் லெப்பை அவர்களினதும் ‘கடே அப்பச்சி’ என்றழைக்கப்பட்ட அல் ஹாஜ் உமர் லெப்பை அவர்களது புதல்வி ஹாஜியானி பாத்துமுத்து அவர்களினதும் கடைசி மகனாவார் .
1937 ஒக்டோபர் 24ல் பிறந்த கவிஞர் ஹலீம்தீன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை கல்ஹின்னை அல்மனார் மகா வித்தியாலயத்தில் தமிழ்மொழி மூலம் கற்று, பின்னர் அளுத்கம அல்ஹம்ரா தேசியக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் கற்றுள்ளார். அங்கு அவர் கற்கின்றபோதே ஆங்கில மொழியில் அவருக்குக் கிடைத்த பரிச்சயம், அவரை ஆங்கிலக் கவிதைகள் எழுதத் தூண்டின . பின்னர் தனது ஆசிரியத் தொழிலை தெல்தொட்டை எனசல்கொள்ள முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பித்து, மாத்தளை ஸாஹிராக் கல்லூரி, க்ரைஸ்ட் சேர்ச் கல்லூரி போன்றவற்றில் கடமையாற்றிய பின்னர் ஓய்வு பெற்றார்.
தெல்தொட்டையில் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டிருந்தபோதே தனது வாழ்க்கைத் துணைவி தெல்தொட்டையின் முன்னால் கிராமத் தலைவர் அல் ஹாஜ் என். எம். ஆப்துல் காதர் தம்பதியினரின் மகள் ஆசிரியை ஜெமீலா அவர்களைக் கரம் பற்றினார். ஜெமீலா டீச்சர் என்று பலராலும் அன்போடழைக்கப்பட்ட இவர் பின்னர் கல்ஹின்னையில் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் கல்ஹின்னை மக்களது அன்பையும் ஆதரவையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது பெயருக்கேற்றவாறு அனைவரிடம் புன்னகை பூத்து அன்போடும் கனிவோடும் கதைக்கும் தன்மை கொண்ட பண்பாளர் ஜெமீலா டீச்சர் என்றால் அது மிகையாகாது.
கவிஞர் ஹலீம்தீன் அவர்களது கன்னி ஆக்கமான ‘மாலைக் காட்சி’ என்ற கவிதை முதன் முதலில் 1954ல் தினகரனில் வெளிவந்ததோடு, அவருக்குக் கவிதைகள் இயற்ற வேண்டுமென்ற அவாவையும், ஆர்வத்தையும் அதுவே தூண்டி விட்டது. வானொலிக் கவியரங்குகளில் அவர் கவிதைகள் பல இடம்பெற்றன. கதீஜா நாயகி பற்றிய வானொலிப் பேச்சொன்று 1958ல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாயிற்று.
தனது ஆக்கங்களில் சமூக அவலங்கள், அநீதிகள், ஆணவப் போக்குகளைச் சாடுவதிலேயே மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்திய கவிஞர், ஆபூ பஹ்மி,
அல்ஹஜர், கல்லூட்டுக் கவிராயர், மீலாஹ் போன்ற புனைப் பெயர்களில் கவிதைகள் எழுதியதாக அறிய முடிகின்றது. கவியரசு, கலைமணி, கவிச்சுடர்,அருட்கவி, தமிழ் ஒளி மற்றும் இருமொழி வித்தகர் போன்ற பட்டங்களைச் சுமந்து கொண்ட அவர், ரத்னதீபம், கலாபூஷணம், போன்ற விருதுகளுடன் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் "நஜைமுஸ் ஷுஹ்ரா" விருதையும் பெற்றுள்ளார். “வட் இஸ் வுமன்?” (WHAT IS WOMAN) என்ற கவிதையொன்று அன்னாளில் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “ஹில்டோனியன்” (HILTONIAN) என்ற சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது.
பிறந்த ஊரின் மீது அதிக பற்றுக் கொண்டுள்ள கவிஞர் அவர்கள் எப்போதும் தனது பெயருக்கு முன்னால் ‘கல்ஹின்னை’ என்பதைச் சேர்த்துக் கொள்ளத்
தவறுவதில்லை. எந்நேரத்திலும் நகைச்சுவை ததும்பப் பேசும் சுபாவம் கொண்ட அவர், “எங்கள் ஊர் கல்ஹின்னை” என்ற வரலாற்று நூலை எழுதும் போது ஊர் பற்றிய தகவல்களை அதன் ஆசிரியருக்கு வழங்கியவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். கவிஞர் அவர்களை இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்தியிருந்தால், கல்ஹின்னை பற்றி மறந்துபோன, மறைந்துபோன, அல்லது மறக்கடிக்கப்பட்ட மேலும் பல வரலாற்றுத் தகவல்களையும் பெற்று “எங்கள் ஊர் கல்ஹின்னை” என்ற நூலை நிறைவாக்கியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
கவிஞரின் முதலாவது நூல் "தியாகச் சுடர்" பெருமானாரின் பேரர் தியாகச் செம்மல் ஹுஸைன் (ரலி) அவர்கள் பற்றி விளக்கும் காவியமாக 1969ல் வெளிவந்தது. கர்பலா களத்தில் நாயகத்தோழர்களின் தியாகத்தை சித்தரித்துக் காட்டும் கவிதைகள் அந்நூலில் சிதறிக் கிடந்தன.
பின்னர், "BLOSSOMS" என்ற ஆங்கிலக் கவிதை நூலுடன், 103 கவிதைகள் அடங்கிய “காலத்தின் கோலங்கள்” என்ற அவரது அடுத்த இரண்டு நூல்கள் 1984ல் வெளிவந்தன. "காலத்தின் கோலங்கள்" என்ற நூலில் மூட நம்பிக்கையால் உழலும் சமூகத்துக்கு கோபக் கனல்களால் சாடிவிடுகின்ற, போலிப் பகட்டுகளில் போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் சமூகத்துக்கு துடிக்கின்ற சொற்றொடர்களோடு அள்ளித்தரும் கவிதைகளை கவிஞர் அரங்கேற்றியுள்ளார்.
மூன்று பகுதிகளைக் கொண்ட அவரது அடுத்த கவிதை நூல் ‘இதய மலர்’ என்ற பெயரில் வெளிவந்தது. இந்நூலின் முதலாம் பகுதி “இஸ்லாமிய மணம்” என்ற பெயரிடப்பட்டு 45 கவிதைகளைக் கொண்டது.
பாடசாலைமாணவர்களிடையே இஸ்லாமிய அறிவை நாசூக்காக உள்வாங்க வைக்கும் கவிதைகள் இம்மகுடத்தின் கீழ் அமைந்திருந்தது. இரண்டாம் பகுதியான “தமிழ் மணம்” 40 தமிழ் மணக்கும் கவிதைகளைக் கொண்டும், மூன்றாவது பகுதியாக ஆங்கிலக்
கவிதைகளைக் கொண்டும், மொத்தம் 136 கவிதைகள் இடம் பெற்றிருந்த ‘இதய மலர்’ அக்காலத்தில் இலக்கிய வல்லுனர்கள் அனைவரினதும் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் இருக்கும் "ஸ்ரீலங்கா" என்ற கவிதை தரம் ஆறாம் ஆண்டிற்கான தமிழ் புத்தகத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது . அத்துடன் இப்புத்தகத்தின் மூன்றாம் பகுதியான ஆங்கிலக் கவிதைகள் பின்னர் "ROSES" என்ற பெயரில் தனியாக அச்சிடப்பட்டு வெளியானது.
தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கவிதையாற்றும் திறமை கொண்டிருந்த கல்லுட்டுக் கவிராயர், தமக்கு தமிழ் வசன நடையிலும் கூட ஆக்கங்கள் உருவாக்க முடியும் என்பதை “மகாகவி இக்பால்” என்ற நூலின் மூலம் நிரூபித்துக் காட்ட முற்பட்டுள்ளார்.
தன்னினம் மட்டுமில்லை இந்தத்
தரணியும் செழிக்க வேண்டும் .
மகிழ்ந் தனைவரும் வாழ வேண்டும் .
மனிதாபிமானம் எங்கும் மலர வேண்டும்.
என்ற மகாகவி இக்பாலின் தாரக மந்திரம் கவிஞரின் கவிதைகளில் புரையோடின.
அதன் பின்னர் 1995 ல் "மலையகத்தின் தொழிலதிபர்" என்ற அல்ஹாஜ் என்.எம்.புஹார்தீன் அவர்களைப் பற்றிய நூல் வெளியானது, அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆங்கிலத்தில் கவிஞரின் பிரத்தியேக திறமையான முதல் எழுத்தையோ கடைசி எழுத்தையோ கூட்டுவதால் உண்டாகும் பாட்டு வகை அல்லது சொற் புதிர் வகையான கவிதைகளின் தொகுப்பு (ACROSTIC POEMS) ,"GARLAND" என்ற பெயரில் வெளியானது.
கவிஞரவர்கள் சொந்தமாக எழுதிய நூல்களோடு 2005 இல் முன்னால் அமைச்சர் கபீர் ஹாஷிம் அவர்களது தந்தை பரிஸ்டர்(BARRISTER) ஏ.எல் .எம். ஹாஷிம் அவர்கள் எழுதிய ஆங்கில நூலை " பாலஸ்தீனர்களைப் பாதாளத்தில் தள்ளிய பாதகர்கள்" என்ற பெயரில் தமாழாக்கம் செய்து வெளியிட்டதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
கவிஞர் எப்போதுமே தனக்குப் பிடித்த பிரபலங்களுக்கு அல்லது திருமணமாகும் புதுத் தம்பதியருக்கு எழுதும் வாழ்த்துக் கவிகள் இவ்வாரான கவிதைகளாகவே இருந்து வந்ததும் குறிப்பிடத் தக்கது.
இவைகள் மட்டுமின்றி கவிஞரின் புதிய படைப்புக்களான "நெஞ்சக் குமுறல்கள்" , "நீதியே நீ செத்தாயோ?" , " 'JUST ICE' NOT 'JUST A PEACE'' ஆகிய நூல்களும் எழுதப் பட்ட நிலையில் இருப்பதாக அறிய முடிந்தது.
அநேக காலமக ஆசிரியராகப் பணி புரிந்த கவிஞர் அவர்கள் தமது சகோதரர்களுடன் சேர்ந்து மாத்தளை "டீமாஸ் " என்ற வார்த்தக நிறுவனத்தினையும் நடத்தி வந்தது அவரது வர்த்தகத் துறையிலான ஈடுபாட்டையும் காட்டுவதாக இருந்தது.
கம்பன் வீட்டுக் கத்திரிக்கோலும் கவிபாடும் என்ற முதுமொழிக்கொப்ப கல்ஹின்னை மக்களால் “ஜெமீலா டீச்சர்” என்று அன்போடழைக்கப்பட்ட கவிஞரின் துணைவியார் அவர்கள் மகாகவி இக்பால் பற்றி இலக்கிய நயத்தோடு படைத்துள்ள கட்டுரையானது அவரது இலக்கிய ஆர்வத்தையும் ஆக்கங்கள் வடிக்கும் திரணையும் படம் பிடித்துக் காட்டியதுமல்லாமல் கவிஞரையும் மிஞ்சி விடுவதாக அமைந்திருந்ததோ எனத் தோன்றுகின்றது.
‘எவரும் எதையும் சொல்லட்டும், எப்படியும் என்னை எடைபோடட்டும், கவலை கொள்ளேன் என்றாலும், கருணையாளனிறையருளால், துவளாதென்றும் என் பேனா, தொடரும் எழுத்துப் பணியையே, நவில்வேன் இதனால் நித்தமுமே, நிறைவாய் அல்ஹம்துலில்லாஹ்!’ என்ற தாரக மந்திரத்தைத் தன்னகத்தே உறுதியாகக் கொண்டிருந்தவர் அவர்.
கவிதைத்துறையின் மூலம் கல்ஹின்னையின் பெயர் வளர அக்காலத்தில் ஆக்கங்களை ஆக்கித்தந்த அவரைத் தொடர்வதாகவே, அவரது மூத்த புதல்வன் பஹ்மி ஹலீம்தீன் அவர்களும் எழுத்துத்துறையிலும், கவிதையாக்கத்துறையிலும், நவீனகால தொழில்நுட்பத்தின் வாயிலாகவும் , தேசியப் பத்திரிகைகள் ,சஞ்சிகைகள், சர்வதேச வானொலிகள் என கல்லூட்டின் கலை வளர்ப்பிற்கு முற்றுப்புள்ளியிடாமல் தொடர்வதைக் கட்டியமிட்டுக் காட்டுகின்றது.
"பேசேல் இழிவாய் யாரையுமே
பிறப்பில் முஸ்லிம் காபிரெலாம்
ஈசன் படைப்பே யாமாகும்.
இன்னும் உண்டு கேட்பாயே
ஆசை உணவிற் கொள்ளாதே
அதிலே மிதமே இதமாகும்
பேசும் வார்த்தை நீட்டாதே
பெரிதும் தூக்கம் கொள்ளாதே!"
என்றவாறாக மக்களுக்கு அறிவுரை பகரும் கவிஞர் அவர்கள், எமது உயிரினும் மேலான ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதீத அன்பு கொண்டிருந்தார்கள். தான் எந்தவொரு ஆக்கத்தைப் படைக்கத் துவங்கும் போதும், பிஸ்மில்லாஹ்வைத் தொடர்ந்து, ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைப் பொழிந்தவாறே தொடங்குபவராக இருப்பார் என்று அவர் புதல்வரும் எனது ஆருயிர் நண்பருமான பஹ்மி சொல்லக் கேட்டும் பெருமிதாக இருந்தது.
கவிஞர் அவர்களின் இறுதி நாட்களில் அவர் நோய்வாய்ப்படிருக்கும் போது தொலை பேசியில் அவருடன் கதைக்கும் வாய்ப்புக்கள் எனக்கு கிடைத்தது. அந்த நாட்களில் அவர் எனக்காக ஆங்கிலத்தில் ஒரு கவிதை (ACROSTIC POEM) எழுதியிருந்தார் .அதுவே அவர் கடைசியாக எழுதிய கவிதை என அவர் மறைந்த பின்னரே அறியக் கிடைத்தது.
ஒரு மனிதனுடைய பேச்சு அதிகரிக்கும்போது, அவனது பிழை அதிகரிக்கும். பிழை அதிகரிக்கும்போது அவனது வெட்கம் குறையும், வெட்கம் குறையும்போது அவனது இறைபக்தி குறையும். இறைபக்தி குறையும்போது. அவனது உள்ளம் இறந்துவிடுகின்றது. எவனது உள்ளம் இறந்துவிட்டதோ அவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான் என்ற அலி ரழியல்லாஹு அல்ஹு அவர்களது தாரக மந்திரத்தைத் தனது நண்பர்களுக்கு மத்தியில் மிகவும் நாசூக்காக நினைவுபடுத்த அவர் ஒருபோதும் தவறுவதில்லை.
எழுதுகோள் என்பது சமுதாயத்தின் பழுதுகளைப் போக்கப் பயன்பட வேண்டுமே தவிர, வெறும் பொழுது போக்க மாத்திரமல்ல என்ற கருத்துக் கொண்டவர் அவர். எழுதுகோல் மூலம் சமுதாய விடியலைக் காணவிளைந்த ஒரு ஒப்பற்ற கவிஞர் அவர், அவரது விழிகளில் பட்டுவிடும் குறைபாடுகளைக் கிளறிக் காட்டும் ஒரு சத்யவானாக வாழ்ந்து மறைந்துள்ளார் என்பதுதான் உண்மை. நெஞ்சங்களோடு கொஞ்சு தமிழிலிலும், ஆங்கிலத்திலும் கவிதைகளால் விளையாடிய கல்லூட்டுக்குக் கவிராயர் கடந்த 2017 ஜுலை மாதம் 10ம் திகதி, ஹிஜ்ரி 1438 ஷாவ்வால் பிறை 15 அன்று தனது 80வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! அன்னாரின் மண்ணறையை இறை ஒளியால் நிரப்புவாயாக. அன்னாரது ஆத்மாவை நல்லடியார்களோடு சேர்த்து விடுவாயாக... ஆமீன் யாரப்பல் ஆலமீன் !
Masha Allah Great job
ReplyDelete