ரோஹித், கங்குலி, கெய்ல் சாதனைகள் காலி.. இரட்டை சதம் விளாசி ஏகப்பட்ட சாதனைகளை வாரிக்குவித்த இஷான் கிஷன்

ரோஹித், கங்குலி, கெய்ல் சாதனைகள் காலி.. இரட்டை சதம் விளாசி ஏகப்பட்ட சாதனைகளை வாரிக்குவித்த இஷான் கிஷன்

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரை 2-0 என ஏற்கனவே வங்கதேச அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். ரோஹித்துக்கு பதிலாக இஷான் கிஷன் ஷிகர்தவானுடன் தொடக்க வீரராக களமிறங்கினார்.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சதத்திற்கு பின்னர் சிக்ஸர் மழை பொழிந்த இஷான் கிஷன், தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்தார். 126 பந்தில் 200 ரன்கள் அடித்த இஷான் கிஷன், 131 பந்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 210 ரன்களை குவித்தார். 

அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய விராட் கோலியும் சதமடிக்க (113) 50 ஓவரில் இந்திய அணி 409 ரன்களை குவித்தது. 2வது விக்கெட்டுக்கு கோலியும் இஷான் கிஷனும் இணைந்து 290 ரன்களை குவித்தனர்.

இந்த போட்டியில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் படைத்த சாதனைகளின் பட்டியலை பார்ப்போம்.

இஷான் கிஷன் படைத்த சாதனைகள்:

1. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய முதல் வீரர்.

2. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், மார்டின் கப்டில், ஃபகர் ஜமான் ஆகிய வீரர்களுக்கு அடுத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த 7வது வீரர் இஷான் கிஷன்.

3. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார். இதற்கு முன் ஜிம்பாப்வேவுக்கு கிறிஸ் கெய்ல் 138 பந்தில் இரட்டை சதமடித்ததே சாதனையாக இருந்தது. வங்கதேசத்துக்கு எதிராக 126 பந்தில் இரட்டை சதமடித்து கிறிஸ் கெய்லின் சாதனையை தகர்த்துள்ளார் இஷான் கிஷன்.

4. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இளம் வயது வீரர் இஷான் கிஷன்.

5. வங்கதேசத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார். இதற்கு முன் ஷேன் வாட்சன் வங்கதேசத்தில் அடித்த 185 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 210 ரன்களை குவித்து ஷேன் வாட்சனின் சாதனையை இஷான் கிஷன் தகர்த்துள்ளார்.

6. இந்தியாவிற்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன் கங்குலி அடித்த 183 ரன்களே இந்தியாவிற்கு வெளியே இந்திய வீரரால் ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையை இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.
asianetnews


 


Post a Comment

Previous Post Next Post