இரண்டு உயிரினங்களுக்கு இடையேயான தொடர்பை, இணைப்பை, நட்பை ‘உறவு’ என்கிறோம். இதன் சொல்வளம் விசாலமானது. உறவு முறை பல பரிணாமங்களை உள்ளடக்கியுள்ளது.
எத்தகைய உறவுகளாக இருந்தாலும் அந்த உறவுகள் இணைந்து உயிர்ப்பாக இருக்க வேண்டும். பல உயிர்கள் இணைவதுதான் உறவு. உறவுகள் சேர்வதுதான் குடும்பம்.
பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதுதான் கூட்டுக்குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஒரு கோத்திரம். பல கோத்திரங்கள் இணைந்துதான் ஒரு சமூகம் உருவாகிறது.
பல சமூகங்களின் சங்கமம்தான் ஒரு தேசியம். பல தேசிய இனங்களின் உருவாக்கம்தான் சர்வதேசம், உலகம். உறவு என்ற ஒரு ஒற்றைப்புள்ளியில் இருந்துதான் உலகம் உருவாகிறது. அந்த உலகமே உறவுமுறையில் ஐக்கியமாகி விடுகிறது.
அந்த புனித உறவின் வீழ்ச்சியின் முதல்படியே கூட்டுக் குடும்பம் சிதைந்து, தனிக்குடும்பமாக பிரிந்து போவதில் துவங்குகிறது. தனிக்குடித்தனம், தனிக்குடும்பம் பெருகப் பெருக உறவுமுறை அருகிக் கொண்டே வருவது கவலையளிக்கிறது. உறவு என்பது உணர்வுப்பூர்வமானது.
அந்த உறவு கூட இறைவனிடம் உணர்வுப்பூர்வமான சில விஷயங்கள் குறித்து பேசியது சிந்திக்கத்தக்கது. அதன்விவரம் வருமாறு: “இறைவன் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது.இறைவன், “சற்று பொறு” என்றான்.“
உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்றது உறவு.உடனே இறைவன், “உறவே, உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பது உனக்கு திருப்தியளிக்கவில்லையோ” என்று கேட்டான்.
அதற்கு “ஆம், திருப்திதான் என் இறைவா” என்றது உறவு.“இது உனக்காக நடக்கும்” என்றான் இறைவன். இந்த நபிமொழியை அறிவித்த பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நயவஞ்சகர்களே, நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும். உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா? எனும் திருக்குர்ஆனின் (47:22) இறைவசனத்தைக் கூறினார்கள்”. (நூல்: புகாரி)
உறவாடுவது என்பது பதிலுக்குப் பதில் செய்யும் காரியம் அல்ல. உறவை முறித்தவனுடன் வலிய வந்து உறவாடுவதே உண்மையான உறவு. “பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் உண்மையில் உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
உறவை முறித்து வாழ்பவன் உலக வாழ்க்கையை மட்டும் இழக்கவில்லை. சொர்க்க வாழ்க்கையையும் இழக்கும் பரிதாப சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். “உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: சுபைர் பின் முத்யிம் (ரலி), நூல்: புகாரி)
உறவுமுறையை முறிப்பதற்கு பலவிதமான காரணங்கள் ஏற்படுகிறது. 1) அறிவற்ற செயல்பாடு, 2) இறையச்ச குறைபாடு, 3) தற்பெருமை, 4) நீடித்த தொடர்பின்மை, 5) அதிகமான தொந்தரவு தருவது, 6) உறவுகளை சந்திப்பதின் முக்கியத்துவம் குறைந்து போவது, 7) கருமித்தனம், 8) உறவை மறந்து உலக ஈடுபாடு, 9) மனமுறிவு, 10) பொறாமை. இன்னும் இதுபோன்ற காரணங்கள் ஒருவரிடம் வெளிப்படும் போது, அவரைச் சுற்றியுள்ள உறவுக்காரர்கள் அவரிடமிருந்து விலகிச் சென்று விடுகின்றனர்.
உறவை முறிக்கும் எந்த காரியங்களிலும் யாரும் ஈடுபடக்கூடாது. “ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு செலுத்துவதில்) சகோதரர்களாக இருங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம்).
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.
Tags:
இஸ்லாமிய சிந்தனை