கல்ஹின்னையின் முதலாவது உப தபால் அதிபர் மர்ஹூம் எம்.சீ.எம். சஹாப்தீன்

கல்ஹின்னையின் முதலாவது உப தபால் அதிபர் மர்ஹூம் எம்.சீ.எம். சஹாப்தீன்


1952-ம் ஆண்டில் கல்ஹின்னையில்  தபால் நிலையம் திறந்து வைக்கப்பட்டபோது அதன் முதல் உப தபால் அதிபராக  மர்ஹூம் எம்.சீ.எம். சஹாப்தீன் அவர்கள் பதவியேற்றார்கள்.

01.06.1929ல் பிறந்த இவர், மாத்தளை  புனித தோமையர் கல்லூரியில் ஆங்கில மொழியில் கற்றவராவார். இவர் உப தபால் அதிபராகப் பணி புரிந்த காலப்பகுதியில் ஏனைய ஊர்களில் உப தபால் அதிபராகப் பணி புரிந்தவர்கள் சிங்கள மொழியில் தமது அரச அலுவல்களை மேற்கொண்டபோது கண்டி மாவட்டத்திலேயே ஆங்கில மொழியில் தமது கடமைகளைச் செய்தவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 45 வருடங்கள் உப தபால் அதிபராக பணியாற்றிய இவர்,  1994ம் ஆண்டு தனது  பணியிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

இலங்கையில் தொலை தொடர்பு வசதிகள் மிகவும் அரிதாகக் காணப்பட்ட ஒரு காலகட்டத்தில், கல்ஹின்னைக் கிராமத்திற்கான தொலைபேசிச் சேவை தபாலகத்துக்கு மட்டுமே இருந்த நிலையில், பிற இடங்களிலிருந்து தபாலகத்துக்கு வரும் அவசரமானதும், முக்கியமானதுமான  செய்திகளை எந்த சிரமமும் பாராமல், தனது அலுவலக நேரம் முடிந்ததும் குறிப்பிட்ட வீடுகளைத் தேடிப்பிடித்து ஒப்புவிக்கும் நல்லுள்ளம் அன்னாரிடம் இருந்ததை கிராமத்தில் அனைவரும் அறிவர். குறிப்பாக ஜனாஸா செய்திகள் நடுநிசி வேளையில் கிடைத்தாலும் கும்மிருட்டு வேளையிலும் உடனடியாக உறவினர்களுக்கு வீடு தேடிச்சென்று அறிவிக்கும் உயர் பண்பு இவரிடம் இருந்தது.

அக்காலப் பகுதியில் எமதூரிலிருந்தும், அயற்கிராமங்களில் இருந்தும், தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளுக்கு அதிகமான இளைஞர்-யுவதிகள் தமது உறவுகளைப் பிரிந்து சென்றனர். தற்போது இருப்பதுபோல் ஆளுக்கொரு கைத்தொலைபேசி அக்காலத்தில் இருந்ததில்லை. கல்ஹின்னைக் கிராமத்துக்கான தொலைபேசி இவரின் வீட்டிலேயே இருந்தது. இரவு நேரங்களில் சில நாட்களில் நள்ளிரவு தாண்டியும் சில நாடுகளில் இருந்து தமது உறவுகளின் அழைப்பு வரும் வரை இவரது வீட்டிலேயே பலரும் காத்துத் தவம் கிடப்பது வழமையான காட்சியாகும்!

மர்ஹூம் எம்.சீ.எம். சஹாப்தீன் கல்ஹின்னையில் ஹுஸைன் ஆரச்சியாரின் மகளான சௌதூன் பீவி என்பவரை மணந்து அழகிய இல்லறம் நடாத்தி வந்தார். முஹம்மத் இம்தியாஸ், முஹம்மத் றிலாஹ், பாத்திமா ஜுமானா ஆகியோர் இத்தம்பதிகளது பிள்ளைச் செல்வங்களாவர்.

இவரது மூத்த மகனான இம்தியாஸ் சில காலம் கண்டி மாவட்ட செயலாளர் அலுவலகத்திலும் மற்றும் அக்குரணை, மினிப்பே, லக்கல பள்ளேகம பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் பணிபுரிந்து, தற்போது அரச பணியிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.  ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக கல்ஹின்னைக்  கிராமத்தில் கல்விப்பணிபுரிந்து ஓய்வு பெற்ற  மாவனல்லை-உயன்வத்தையைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஷிம் அவர்களின் மகளான ஆசிரியை மர்ஹூமா ஸஹ்தியா  அவர்கள் இவரது துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது!

மர்ஹூம் சஹாப்தீன் அவர்களின் இளைய மகன் முஹம்மத் றிலாஹ் 1999ம் ஆண்டில்,  தொழில் நிமித்தம் சவூதி அரேபியா சென்றிருந்தபோது, விபத்தொன்றில் சிக்கி, தனது இளவயதிலேயே காலமானார். இவரது ஜனாஸா மக்காவில் ஜன்னத்துல் முஅல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்!

இவர் கல்ஹின்னையில் பிரசித்திபெற்று விளங்கிய ஒமர் லெப்பை ஹாஜியாரின் மூத்த புதல்வரான  'கடே முதலாளி'  என அறியப்பட்ட காசீம் லெப்பை அவர்களின் மூத்த புதல்வரும், மர்ஹூம் கவிஞர் எம். சீ. எம். ஸுபைர்,  ஆசிரியர் எம்.சீ.எம்.ஜெலீல் மற்றும் எம்.சீ.எம். சமீம் ஆகியோர்களின் மூத்த சகோதரருமாவார்.

1996ஆம் ஆண்டு புனித ஹஜ் கடமையைத் தனது துணைவியாருடன் நிறைவேற்றிய மர்ஹூம் சஹாப்தீன் அவர்கள்,  தனது 76ம் வயதில் 2005ம் ஆண்டு இறை அழைப்பை ஏற்று, இம்மை வாழ்வை நிறைவு செய்தார்!

ஆடம்பரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் அமைதியாகவே வாழ்ந்த இவர், சகல இன மக்களுடனும் நல்லுறவைப் பேணி வாழ்ந்தவராவார். குறிப்பாக அயல் கிராமங்களான அலவத்தை, உடகம, கல்கந்த, பல்லேகம, ராமாக்கொட்டுவை போன்ற இடங்களில்  வாழ்ந்த பெரும்பான்மை இன மக்களுக்கும் இன,மத பேதமின்றி சேவை செய்து, அப்பகுதி மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டார்.

அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக!


 


Post a Comment

Previous Post Next Post