"எமது கிராமத்தையடுத்துள்ள ஹல்கொல்லைக் கிராமம் மிகப்பழையதாகும்.
கல்ஹின்னை, றமுக்கல்லை, வளஹேன, அளவத்துகொட ஆகிய கிராமங்களில் குடியேறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு முஸ்லிம்கள் குடியேறியுள்ளார்கள்.
இங்கிருந்த பள்ளிவாயிலுக்கே மேற்கூறப்பட்ட கிராமத்தவர்கள் ஜும்ஆத் தொழுகைக்குச் சென்று வந்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்துக்கும், மத்திசம் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். எமது கிராமத்துக்கு உஸ்மான் பிள்ளை இஸ்மாஈல் லெப்பை நியமிக்கப் பட்டிருந்தார்.
எமது கிராமத்தில் சனத்தொகை அடர்த்தியடைந்ததும், வெளியூரிலிருந்து வந்த ஒரு பெரியாரின் ஆலோசனைப் பிரகாரம், அவர் குறிப்பிட்ட (தற்போதைய பள்ளிவாசல் இருக்கும்) இடத்தில் தற்காலிகமான பள்ளிவாசல் ஒன்றைக் கட்டலாயினர். ஹிஜ்ரி 1281ம் வருடம் (கி.பி.1864) பள்ளிவாயில் கட்டிமுடித்ததும், ஹல்கொல்லைப் பள்ளிவாசலுக்கு ஜும்ஆவுக்குச் செல்லும் நிலை நின்றுவிட்டது.
அதன் பின்னர், 1946ம் ஆண்டு பள்ளிவாயில் முழுவதையும் உடைத்துவிட்டு, சனத்தொகைக்குத் தக்கபடி பெரிதாக்கிக் கட்டினர்.
ஊரிலுள்ள எல்லாக் குடும்பங்களும், இதற்குப் பணவுதவி அளித்தனர்.
இப்பள்ளிவாயிலுக்கு உஸ்மான் பிள்ளை அஹ்மத் லெப்பை என்பவர் மத்திசமாகவும், ஆதம்பிள்ளை அலி உஸ்மான் லெப்பை கதீபாகவும் நியமிக்கப்பட்டனர்.
இதைக் கட்டி முடிப்பதற்கு வேண்டிய வேலை அத்தனையும் தொடக்கத்திலிருந்து, கடைசி வரைக்கும் செய்து கொடுத்து, இதற்குப் பொறுப்பாளியாக இருந்து அயராது உழைத்தவராக உமர் லெப்பை ஹாஜியார், அப்துல் ஹமீத் ஆலிம் சாஹிப் அவர்களே கருதப்படுகின்றார்கள்" என்ற கருத்துப்பட பள்ளிவாசல் வரலாறு பற்றி மெளலவிஎம். எச். எம். ஷரீஃப் அவர்கள், எழுதி வைத்திருந்த குறிப்புக்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
(நன்றி: எங்கள் ஊர் கல்ஹின்னை)
ஓலையால் வேயப்பட்ட கல்ஹின்னையின் ஆரம்பப் பள்ளிவாயில்,1864ம் ஆண்டில், தற்போதைய பள்ளிவாயில் அமைந்துள்ள, இதே இடத்திலேயே கட்டப்பட்டுள்ளது!
அதனைத் தொடர்ந்து, 82 வருடங்களின் பின்னர், அந்தப்பள்ளிவாயில் முற்றுமுழுதாக உடைக்கப்பட்டு, அதே இடத்தில், விஸ்தரிக்கப்பட்ட புதிய
பள்ளிவாயில், 1946ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது!
இந்த 82 வருட காலங்களிலும், பள்ளிவாயில் நிர்மாணிக்கப்பட்ட நிலம் எப்படி வந்ததென்பது எவருக்கும் தெரியாது. பள்ளிவாயில் வரலாறு பற்றி அக்குவேறு ஆனிவேறாக அலசி ஆராயபட்ட வரலாற்று நூலிலும் கிடையாது!
அதன் பின்னர், 1946ம் ஆண்டைய விஸ்தரிக்கப்பட்ட பள்ளிவாயில், 43 ஆண்டுகளுக்குப் பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. 1989ம் ஆண்டின் நடுப்பகுதியில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவர் மெளலானா அப்துஸ்ஸமத் அவர்கள் இதனைத் திறந்து வைக்கும்வரை கூட, மொத்தமாக 125 வருட காலமாகியும், பள்ளிவாயில் கட்டப்பட்ட நிலம் எப்படி வந்ததென்பது எவருக்குமே தெரியாது!
ஆரம்பத்தில் ஓலையால் வேயப்பட்ட பள்ளிவாயில் கட்டப்பட்டதிலிருந்து, இன்று வரைக்கும் 158 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், "நிலவுறுதி" பற்றி உறுதி செய்துகொள்ள முடியாதுள்ளதா அல்லது அதனை வெளிப்படுத்திக் கொள்வதில் சங்கடங்கள் உள்ளதா என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது!
ஆரம்ப காலங்களிலும், அதன் பின்னரும் பள்ளிவாயில் கட்டும்போது, கல்ஹின்னையின் அதிபுத்திசாலிகளே பணிகளில் ஈடுபட்டதாக வரலாற்று நூல் குறிப்பிடுகின்றது! அப்படியாயின் அவர்கள் எவ்வாறு "நிலவுறுதி" பெறாமல் பள்ளிவாசல் காட்டினார்கள்?
பள்ளிவாசல் கட்டுவதற்கு ஆசிகூறி அங்கீகாரம் வழங்கிய வெளியூரிலிருந்து வருகை தந்த 'பொகுடு பாவா" என்ற சமயப்பெரியார், பள்ளிவாயில் அமைவதற்கு உசிதமான இடத்தைக் காட்டினாறே தவிர, அதன் சொந்தக்காரர் யாரென்று கேள்வி கேட்காதது ஏன்?
பள்ளிவாசல் கட்டுவதில் முன்னின்றவர்கள், அந்த நிலத்தின் சொந்தக்காரர் யார் என்பதை வெளிப்படுத்துவதில் ஆரம்பத்திலிருந்தே, பின்வாங்கி வந்துள்ளனர். அதனால்தான் இது விடயம் 158 வருடகாலமாக எவ்வித கரிசணையும் காட்டாமல், புறம்போக்கு நிலத்தில் பள்ளிவாயில் கட்டியது போன்று படம் காட்டியுள்ளனர். இதுதான் யதார்த்தம்!
இந்நிலை, ஒன்றரை நூற்றாண்டுகள் தொடர்ந்துவிட்ட போதிலும் கூட, இன்றுவரை பள்ளிவாயிலின் நிலவுறுதி பற்றிய தெளிவை எவராலும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது!
2019 ஜூலை 28ம் திகதிய "வேட்டை" யில் வெளியான கட்டுரை ஒன்றின் மூலம் இது பற்றிய தெளிவொன்று வெளியிடப்பட்டது!
2008ம் ஆண்டு வெளியிடப்பட்துள்ள "மத்திய பிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்" என்ற நூலில் 139ம் பக்கத்தில், கல்ஹின்னையின் வரலாறு பற்றிய அத்தியாயத்தில், பள்ளிவாயில் நிலம் பற்றிய குறிப்பில், 'கல்ஹின்னைக்குச் சிறப்பை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கும் மஸ்ஜித், கி.பி.1864 அமைக்கப்பட்டதாகவும், மஸ்ஜித் அமைப்பதற்குத் தேவையான நிலம் எவ்வாறு பெறப்பட்டது என்ற தகவல் கிடைக்கப் பெறவில்லை'என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மிக அண்மையில், "சிலோன் பைத்துல்மால் நிதியம்" வெளியிட்டிருந்த, இலங்கையின் 31 பிரசித்தி பெற்ற தொன்மையான பள்ளிவாயில்கள் பற்றிய படங்களோடு கூடிய வரலாற்றுக் குறிப்புகள் அடங்கப்பெற்ற நூலிலும் கல்ஹின்னைப் பள்ளிவாயில் நிலம் பற்றி எதுவும் பிரஸ்தாபிக்கப்பட்டதாக இல்லை!
"எங்கள் ஊர் கல்ஹின்னை" வரலாற்று நூலில் முஹம்மது அலிபாவா பற்றியோ, சாவன்னா முதலாளி பற்றியோ, சுபைர் டாக்டர் பரம்பரை பற்றியோ, பள்ளிவாசல் நிலம் எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ போதுமான தகவல்கள் வழங்காமல் இறுட்டடிப்புச் செய்துவிட்ட நிலையில், 1892ம் ஆண்டு சம்மதத்துக்குட்பட்ட, மாதாந்த சந்தா விவரப்பட்டியலில் முஹம்மது அலிபாவாவின் மகனான ஹபீபு முஹம்மது லெப்பையின் பெயரை மாத்திரம் தெரிந்தோ, தெரியாமலோ பதிவிடப்பட்டுள்ளது. இப்போது அதுவே பள்ளிவாசல் நிலவுறுதியை அடையாளம் காட்டப்போதுமானதாகும்!
"1948-ம் ஆண்டு ஜூன் மாதம் 07ம் திகதி, கல்ஹின்னை அரசினர் முஸ்லிம் பாடசாலை கல்ஹின்னைப் பெரிய பள்ளிவாயிலுக்கருகிலிருந்து,
“ கோவில முந்துணை ” என்னும் இடத்தில், தற்போது அல்மனார் தேசியப் பாடசாலை அமைந்துள்ள காணிக்கு மாற்றப்பட்டது. அந்த இடம் S. M. S குடும்பத்தினராலும், மர்ஹூம் M. A. M. காஸீம் ஹாஜியார் அவர்களினாலும் நன்கொடையாக வழங்கப்பட்டதாகும்" என்று வரலாற்று நூல், குறிப்பிடும் அதேவேளை, "ஜமாலியா முஸ்லிம் பாடசாலையை நிரந்தரக் கட்டடமொன்றிற்கு மாற்ற, ஜனாப் ஜே. எல். ஜுனைதீன் அவர்கள் முன்வந்தார்கள்" என்றும், "அன்னாரின் தந்தையின் ஞாபகமாக தற்போது பாடசாலை அமைந்துள்ள நிலப்பரப்பை மனமுவந்தளித்து, அழியாத புகழைத் தனதாக்கிக் கொண்டார்கள்"என்று இன்னொரு வரலாற்றுக் குறிப்பிலும் பதிவிடப்பட்டுள்ளது.
இவ்வறெல்லாம் பாடசாலைகளுக்கு நிலம் வழங்கியவர்கள் பற்றித் தகவலிடும்போது, பள்ளிவாயில் பற்றிய சகல வரலாற்றுத் தடயங்களையும் குறிப்பிடும் வரலாற்று நூல்கள், பள்ளிவாயில் கட்டுவதற்கான நிலம் யாரிடமிருந்து, எப்படிப் பெறப்பட்டது என்ற தகவலை ஒன்றரை நூற்றாண்டுகளாக வெளியிடத் தயங்குவது ஏன்?
நிலவுறுதிப் பத்திரம் தேடும் படலம் அண்மைக் காலமாக தொடரப்பட்டு வந்துள்ள நிலையில், கிட்டடியில் சிலர் இந்தத் தேடு படலத்தில் மும்முரமாக ஈடுபட்ட செய்தியும், அவர்களுட்சிலர் ஆதாரம் தேடி வைத்தியர்லாகெதற செய்யத் முகம்மது அப்துர்ரஹீம் அவர்களையும், வைத்தியக் கலாநிதி சுபைர் குடும்பத்தாரையும் நாடிச்சென்று, மூக்குடைந்து வந்ததாகவும் அறிய முடிகின்றது!
பள்ளிவாயில் கட்டப்பட்டுள்ள நிலம் இந்த இரு பரம்பரையைச் சேர்ந்த ஒருவருக்கானதுதான் என்ற உறுதியான தகவலொன்று இல்லாவிட்டால், இவர்கள் நிலவுறுதிப்பத்திரத்தின் 'சுலமுல' தேடி, ஏன் அவர்களிடம் செல்ல வேண்டும்?
எவரையும் எல்லாக்காலத்திலும் ஏமாற்ற நினைப்பதென்பது, தானே தன் தலையைச் சுவற்றில் மோதிக்கொள்வதற்குச் சமனானது!
"இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடர்ந்த காடுகளின் மத்தியில் ஒரு குக் கிராமமாயிருந்த கல்ஹின்னை, இன்று பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னேற்றம் காணத்துடிக்கும் ஏனைய கிராமங்களுக்கு எங்கள் ஊர் ஒரு முன்மாதிரி... முதன் முதலில் கல்ஹின்னையின் வரலாறு, அச்சுருப்பெறுவதால் புத்தகத்தை வாசிப்பவர்களில் சிலர் தவறுதல் ஏதும் இடம் பெற்றிருப்பதைக் காணக்கூடும். அப்படி ஏதும் தவறு கண்டால், தயவு செய்து நேரில் எனக்குத் தெரிவிக்கும்படி மிக தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன்" என்றவாறாக "எங்கள் ஊர் கல்ஹின்னை"வரலாற்று நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுத் தவறை நேரில் தெரிவிக்க அன்னார் இப்போது உயிருடனில்லை!
Tags:
ஐ.ஏ.ஸத்தார்