கல்ஹின்னை ஊரை ஊடறுத்துச் செல்லும் பள்ளிப் பாதை வரலாறு!

கல்ஹின்னை ஊரை ஊடறுத்துச் செல்லும் பள்ளிப் பாதை வரலாறு!


தமக்குத் தெரிந்த வரலாற்றுத் தடயங்களை நல்லுள்ளம் கொண்ட ஒருவர், குறித்து வைத்து விட்டுக் காலஞ்சென்று விடுகின்றார்.

வரலாறு எழுதும் நோக்கில் இன்னொருவர், அவற்றுக்கு அழகுத் தமிழ் வசனங்களால் மெருகூட்டி,  சில பல குடும்பப் பெயர்களை வைத்துப் பம்மாத்துக் காட்டிவிடுகின்றார்!

நல்ல மனிதர் சேர்த்துத் தந்திருந்த தகவல்களோடு, ஊரில்  நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும்  அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும், அவற்றின் குறை நிறைகள்  பற்றியும், அவற்றை முன்னெடுத்தவர்கள் பற்றிய தகவல்களோடு எழுதப்படுவதுதான் உண்மையான வரலாறு!

ஊரின் நடுவே செல்லும் பள்ளிப்பாதை, கல்ஹின்னையின் பள்ளிச்சந்தியிலிருந்து, படகொள்ளாதெனிய  ஊடாக 'மிஹிரிஎல' வரை நீடிக்கிறது. இந்தப் பாதையில், 1970ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி பஸ் சேவை ஆரம்பமாகியது என்று குறிப்பிடுவதனால்  மட்டுமோ, அல்லது பாதைக்கு ஒரு பிரமுகர் 'தார்' போட்டுத் தந்தார் என்பதனாலோ அதுவொன்றும் பூரணத்துவம் பெற்ற  வரலாற்றுப் பதிவாகிவிட முடியாது!

ஊர்  நடுவே சென்று கொண்டிருந்த கரடுமுரடான ஒற்றையடிப் பாதை எப்போது வெட்டப்பட்டது, யார் இதனை முன்னின்று செய்தார்கள், அந்தப்பாதையை அபிவிருத்தி செய்து முடிப்பதற்கு எவ்வளவு காலமெடுத்தது,  அதற்கான செலவினங்கள் எங்கிருந்து வந்தது  போன்ற விடயங்கள்தான் வரலாற்றுத் தடயங்கலில்  முக்கியமானதாகும்!

கல்ஹின்னையின் அபிவிருத்திப் பணியில் அதிமுக்கியமான ஒன்றுதான், ஊரை  ஊடறுத்துச் செல்லும் பாதை அபிவிருத்தி! இப்பணி  ஒட்டுமொத்த ஊரையும்  ஒன்றிணைத்த வரலாற்று நிகழ்வாகும்!

"வீசீ ஹாஜியார்" என்று அழைக்கப்பட்டு வந்த ஷரீப் ஹாஜியாரின் அரசியல் வருகைக்கு முன்னர்,  கல்ஹின்னைச் சமூகம் அரசியல், நிர்வாகத் துறைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாத நிலையில், வர்த்தகத்துக்குள் தலைபுதைந்து வாழ்ந்து கொண்டிருந்தது!

எவருமே அரசியலிற்குள்  நுழைவதற்குப் பின்வாங்கிய சூழ்நிலை அப்போதும், அதற்கு முன்னரும்  காணப்பட்டது. குறிப்பாக அக்காலகாட்டத்தில் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்தோர் ஊர் நடவடிக்கைகளை விலகி நின்று வேடிக்கை பார்த்தே வந்துள்ளனர். அதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதில் சமூகம், இன்று வரையிலும் கரிசணை  காட்டவில்லை என்பதுதான் யதார்த்தம்!

சகல சவால்களையும் தகர்த்தவராக,  அபாரத்துணிச்சலுடன்  ஷரீப் ஹாஜியார்  கிராமசபைத் தேர்தலில் குதித்தார். அவரது  வெற்றி கல்ஹின்னைச் சமூகத்தை அரசியல் நீரோடைக்குள் சங்கமமாக்கியது!

ஷரீப்  ஹாஜியாரின் தேர்தல் வெற்றிக்குப் பின்னரான காலப்பகுதியில், அவர் முன்னெடுத்த முக்கியமான பணிகளுள் ஒன்றாக, இந்தப் பாதை அபிவிருத்தியைக்  குறிப்பிட வேண்டும்.

இந்த அபிவிருத்திப் பணியில் அவரோடு இணைந்து பல்வேறு வகைகளிலும்  செயல்பட்டவர்களுள்   மர்ஹூம்களான; அலவத்தை எஸ். எச். ஜுனைதீன், "றாலஹாமி" என்று அழைக்கப்பட்டு வந்த ஜமால்தீன், எச். எம். எம். ஹுசைன் ஹாஜியார், குதுபுதீன் ஆலிம், ஷரீப்தீன் ஹாஜியார், ஹபீயூட்டாலிம், ஒளியூட்டு எச். எம். பாரூக், ஏ. எச். எம். உவைஸ்,  ஆசிரியர்களான 


மர்ஹூம் மாமா ஹனீபா, மர்ஹூம் ஏ. எச். ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் ஏ. எச். எம். ஹுசைன், மர்ஹூம் எச். இஸட். எம். ஸுபைர்,மர்ஹூம் எச்.எம்.சலாஹுதீன் மற்றும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும்  அல்ஹாஜ் எச். எம். பாரூக், அலவத்தை ஜனாப் எஸ். எச். தாஜுதீன், ஜனாப் எச். எம். ஹனீபா என்போர் முக்கியமானவர்களாவர். 
'மூஸாமுனை' முகம்மது அலிபாவாவின் வாரிசுகளில் ஒருவரான, "சாவன்னா முதலாளி" என்றழைக்கப்பட்டுவந்த, ஷாஹுல் ஹமீத்  என்ற நிலச்சுவாந்தர், தனது இல்லம் வரை  வாகனம் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு, பள்ளிச்சந்தியிலிருந்து, பள்ளிவாயில் வரை  பாதையை அபிவிருத்தி செய்திருந்தார். 

அவரது உறவுமுறை மச்சானான ஹபீபு முஹம்மத் (மூஸா) அவர்கள்- சாவன்னா முதலாளியின் மாத்தளை ரொஸ் எஸ்டேட்,  கூம்பியான்கொடை அண்ணாசிக்கந்தத் தோட்டம் ஆகியவற்றில் வேலை செய்து கொண்டிருந்த 70 தொழிலாளர்களை அழைத்து வந்து, ஊர் மக்களோடு சேர்ந்து, பள்ளிச்சந்தியிலிருந்து அன்னாறின் வீடுவரைக்கும் வாகனம் செல்லக் கூடியதாக, ஒரே வாரத்திற்குள் பாதையை வெட்டி முடித்தது மட்டுமல்லாமல், மேலும் ஒருபடி மேற்சென்று, கல்ஹின்னை ஜும்ஆப் பள்ளிவாயில் வரை பாதை நீடிக்கப்பட்டதாகவும், தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வைத்தியர்லாகெதர ஸெய்யது முஹம்மது அப்துர்ரஹீம் அவர்கள் உட்பட மேலும் பலரது செவி வழிச்செய்திகள் மூலம் அறிய முடிகின்றது!

'சாவன்னா முதலாளி' என்பவர், மாத்தளைப் பகுதியில்  பெருந்தோட்டச் சொந்தக்காரராக இருந்தவர். அத்துடன், அக்காலை மாத்தளை நகரில் ஆறு கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்து வந்துள்ள, இவரின் நான்கு கார்கள் சிவப்பு நிற இலக்கத் தகடுகள் கொண்ட வாடகைக் கார்களாகும்.  கல்ஹின்னைச் சந்தியிலிருந்து வெட்டப்பட்ட பாதையில், இவரது A40 ரக CN1219 இலக்கம் கொண்ட காரே வெள்ளோட்டம் விடப்பட்டது. காரைச் செலுத்தியவர், "பேலீஸ்" என்ற சாவன்னா  முதலாளியின் பிரத்தியேக வாகன ஓட்டுனராவார்!

அதனைத் தொடர்ந்து வந்த தசாப்தத்தில்,  பள்ளிவாயில் முதல் மிஹிரிஎலை வரையான சீரற்ற  அந்தப்பாதை, குறுகலான நடைபாதையாகவும், மக்கள் நடந்து செல்வதற்குக் கூடப் பயப்பட்ட ஒரு பாதையாகவுமே இருந்து வந்தது!

இதனை ஊர் மக்களோடு இணைந்து, "சிரமதானம்" மூலம், வாகனம் செல்லக்கூடிய அகன்ற பாதையாக செப்பணிடச்செய்தோர், "வீசீ ஹாஜியாரு'ம், அவரோடிணைந்து  அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்களையுமேயாவர்.

அக்காலை சிரமதானப் பணி  நள்ளிரவு வரை  நடந்து வந்துள்ளது. பணியில் கலந்து கொள்வோருக்கு டின்மீன், கோதுமை மாவு என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன.  பாதை அபிவிருத்திப் பணியில் ஆர்வத்தோடு ஈடுபட்டவர்கள், இவற்றைப் பெற்றுக்கொண்டதன்  மூலம், வறுமைக் கோட்டிலிருந்த பலர் பிரயோசனமடைந்தனர். 

இக்காலப்பகுதியில் கல்ஹின்னையில் மின்சார 
வசதி இருக்கவில்லை. "பெற்றோமெக்ஸ்", "லந்தர்" "பந்தம்" போன்றவைகளே  இரவு நேரங்களில் சிரமதானப் பணியின்போது உபயோகப் படுத்தப்பட்டு வந்தன. 

கிராமசபைத் தேர்தலின்போது, ஷரீப் ஹாஜியாரோடு போட்டியிட்டு, நூலிழையில் தோல்வி கண்டவர்,  பெபிலகொல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட "அப்பா முதலாளி" என்று கிராமத்து மக்கள் மட்டுமன்றி, சுற்றுவட்டாரத்துப் பெரும் பான்மையினரும்  அன்போடழைத்து வந்த, மர்ஹூம் எம். கே. எஸ். அஹமட் ஆவார்.  இவர் மூஸாமுனை ஹபீபு முகம்மது- ஸல்ஹா உம்மாவின் மூத்தமகளின் மூத்தமகள் சலீம் பீபி என்பவரை   மணந்தவராவார். 
மர்ஹூம்களான ஷரீப் ஹாஜியாரும், எம்.கே.எஸ். அஹமத் அவர்களும் தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்டார்களே தவிர, அவர்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகிவிடவில்லை.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், தோல்வி கண்டவர், வெற்றி பெற்றவரை ஆசீர்வதித்தது மட்டுமல்லாது, வீசீ ஹாஜியார் முன்னெடுத்த பாதை அபிவிருத்திப் பணிகளின்போது கூட இருவரும் ஒருவருக்கொருவர் தோளோடு தோள்நின்று பணியில் ஈடுபட்டமை சிறப்பானதாகும்! தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்,  இவர்கள் இருவரினது தோழமைத் தன்மையைக் கண்ட ஊரவர் வியப்பில் ஆழ்ந்து போயினர்!

'முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பதென்பது' வரலாற்றுத் தகவல்கள்  எழுதும் சிலருக்கும் பொருந்தும்.  கல்ஹின்னையை 
ஊடறுத்துச் செல்லும் பாதைக்கு 'தார்' போட்டுத் தந்தவரைப் பெருமையுடன்  குறிப்பிடும் வரலாற்றுத் தகவல், கரடுமுரடாகக் கிடந்த  ஒற்றையடிப்பாதை எப்படி, யாரால் சீர்படுத்தபட்டது என்பதை 'பூசணிக்காயை சோற்றுக்குள்'  மறைத்துவிட்ட நிலைக்காக்கிவிட்டது!
வீசி ஹாஜியார் முன்னெடுத்து, வெட்டப்பட்டு சீர் படுத்தப்பட்ட பாதை, அந்நாளில் அமைச்சராகவிருந்த  மர்ஹூம் கலாநிதி ஏ.சீ.எஸ். ஹமீத் அவர்களின் சிபாரிசில் "தார்" போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது!

ஊரை  ஊடறுத்துச் செல்லும் பாதை அபிவிருத்திப் பணி மட்டுமல்லாது, 1970களில் கல்ஹின்னைக்கு மின்சார வசதி, குழாய்நீர் வசதி, தொலைபேசி வசதி, நெசவுப் பயிற்சி நிலையம், குடும்ப வைத்திய நிலையம் என்பன எவ்வாறு வந்தன; இவற்றுட் சில எவ்வாறு மறைந்து போயின என்பன போன்ற விடயங்கள் இனிவரும் காலங்களிலாவது, பதிவுக்குட் படுத்தப்படவேண்டிய  கல்ஹின்னையின்  வரலாற்றுத் தடயங்களாகும்!



 


Post a Comment

Previous Post Next Post