
கல்ஹின்னையில் உள்வாங்கப்பட்டுள்ள பல சிற்றூர்களுள் 'செட்டித்தோட்டம்' மற்றும் 'பள்ளியக்கொட்டுவ' பிரதேசங்கள் மன்னராட்சி நிலவிய காலப்பகுதியில், 'செட்டியார்' ஒருவருக்குச் சொந்தமாக இருந்திருக்கின்றது. இந்திய வம்சாவளி சார்ந்த இவர், பட்டயத்தின் மூலம் இந்நிலப்பகுதிகளைப் பெற்றிருக்கலாம் என்று கூட செவிவழிச் செய்திகள் பேசப்படுகின்றன.இவ்வாறாக இருந்த 'பள்ளியகொட்டுவ' நிலப்பரப்பை, முஹம்மது அலிபாவா என்பவர் வாங்கியபோது, 'செட்டித்தோட்டம்' என்ற நிலப்பரப்பை இன்னொருவர் வாங்கியுள்ளார்.
முகம்மது அலிபாவா கல்ஹின்னைக்கு வந்து நிலபுலன்களை வாங்கித் தன்னைத் தரிப்படுத்திக் கொண்ட நிலையில், நாகூரில் வாழ்ந்து வந்த அவரது சகோதரர் ஒருவரான, அப்துல் ஜப்பார் என்பவர் இங்குவந்து, கல்ஹின்னை மக்களுக்குக் கல்விக்கற்றுக் கொடுத்துள்ளதாக, சட்டத்தரணி எஸ். எம். ஹனீபா எழுதிய 'எங்கள் ஊர் கல்ஹின்னை' என்ற வரலாற்று நூல் குறிப்பிடுகின்றது!
முஹம்மது அலிபாவா தனது அந்திம காலத்தில், தனது ஒரே மகனான ஹபீபு முஹம்மது லெப்பை என்பவருக்கு நிலபுலன்களை எழுதி வைத்ததன் மூலம், ஹபீபு முஹம்மது லெப்பை அக்காலத்தில் கல்ஹின்னையின் வாழ்ந்த பெரும் நிலச்சுவாந்தார்களுள் ஒருவராகின்றார்!
ஹபீபு முஹம்மது லெப்பை, தனது மகளான ஸல்ஹா பீபி என்பவரை 'மூஸா' என்று அழைக்கப்பட்டு வந்த ஹபீபு முஹம்மது என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கின்றார்.
இவர் நாகூரிலிருந்து வந்த அப்துல் ஜப்பாரின் மகனாக இருக்கலாம் என்று கூட ஓர் ஊகம் இருக்கின்றது!
ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் வழித்தோன்றல்களே இன்று 'மூஸாமுனை' என்று அழைக்கப்படுகின்ற 'பள்ளியக்கொட்டுவை'யிலும், 'மூஸாக்கொட்டுவை"யிலும் வாழ்வோராவர். பள்ளியக்கொட்டுவ என்பது கட்டாப்பு மற்றும் பள்ளிவாயில் சுற்றுவட்டத்தை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பாகும்.
ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் வாரிசுகளில் மூத்தவர்
'நூத்திமூணப்பச்சி' என்று அழைக்கப்பட்டுவந்த காஸிம் லெப்பை ஆவார். பல்கீஸ் உம்மா (கட்டாப்புப்பெத்தா), செய்யது முகம்மது லெப்பை, ஸல்ஹா பீபி, சாஹுல் ஹமீத் (சாவன்னா முதலாளி) ஆகியோர் ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் ஏனைய வாரிசுகளாவர்.
நூத்திமூணப்பச்சி
ஹபீப் முஹம்மது லெப்பையின் மூத்தவாரிசான 'நூத்திமூணப்பச்சி' என்று அழைக்கப்பட்டுவந்த, காஸிம் லெப்பையும், பல்கீஸ் உம்மாவும்,
கட்டாப்புப் பகுதியில் தமது தந்தை வழங்கிய நிலத்திலேயே வசித்து வந்துள்ளனர். தனது ஜீவனுபாயத் தொழிலாக இவர், திண்ணைப் பள்ளி வடிவில் அக்கால சிறார்களுக்கு குர்ஆன் கற்றுக்கொடுப்பதைத் தனது அந்திம காலம்வரை செய்து வந்துள்ளார்.
காஸிம் லெப்பை அவர்களுக்கு முஹம்மது தவ்பீக், ஸலீம் பீபி, ஹாஜரா என்ற மூன்று வாரிசுகள்.

அவர்களின் மகனான முஹம்மது அஸ்லம், ஜமாலிய்யா மகா வித்தியாலயத்தில் சாதாரண தரம்வரை கற்று, அல்மனார் தேசியக் கல்லூரியில் உயர்தரத்தில்தேறி, ஜமாலியாவில் கற்று, பட்டயக் கணக்காளர் (Charted Accountant) பட்டம் பெற்ற முதலாமவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
1979ல் பிறந்துள்ள இவர், 2004ல் பட்டயக் கணக்காளரானார். 2008ம் ஆண்டு Chartered Institute of Management Accountant of Sri Lanka வில் இணைந்துகொண்ட இவர், 2012ம் ஆண்டு Bahamas, Galileo Collageல் கணக்கியல் துறை BSc பட்டத்தைப் பெற்றார்.
தற்போது சவூதி நாட்டின் ரியாத் நகரில் Al-Rajhi United Investment Holding Group இல் Group Financial Controller ஆகப் பணி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்கிஸ் உம்மா
குருணாகலை டீ ஸ்டோர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் கமால்தீன் அவர்களின் தாயாரான ரஜீனா உம்மா, கட்டாப்பு அஸீஸா உம்மாவின் தாயார், மாத்தளையில் வசித்து வந்த செய்யது அஹ்மது அவர்களின் தாயாரான "மாத்தளை ஆச்சி", கட்டாப்பு அப்துல் மஜீத் அவர்களின் பாட்டன் மற்றும் கமரால மர்ஸூக், ஸெய்தூன் ஆகியோரின் பாட்டி ஆகியோர் 'கட்டாப்பு பெத்தா' என்று அழைக்கப்பட்டுவந்த பல்கிஸ் உம்மாவின் வாரிசுகளாவர்
ஸல்ஹா பீபி
ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் அடுத்த வாரிசான ஸல்ஹா பீபி, 'மூஸா' என்றழைக்கப்பட்டவரைக் கரம்பிடித்து ஏழு பிள்ளைகளை வாரிசாகப் பெற்றுக் கொண்டார்.

மஜீது லெப்பை
ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் மூத்த புதல்வர் அக்காலத்தில் கல்ஹின்னை மட்டுமன்றி, மாந்திராவை என்றழைக்கப்பட்ட பானகமுவ பகுதியில் வசித்து வந்த பலருக்குக் குர்ஆன் கற்றுக் கொடுத்தவரான, வைத்தியலாகெதற ஹபீபு முஹம்மது மஜீது லெப்பையாவார்.
இவர், கட்டாப்பு பகுதியில் வசித்துவந்த 'உப்பா அப்பா' என்றழைக்கப்பட்டவரின் மகளைத் திருமணம் செய்து சலீம் பீபி, சம்பத், மாஜிதா, பவ்ஸுன்னிஸா, ஹபீல் (கத்தார் கிரிகட் அணி ஒன்றில் உள்வாங்கப் பட்டுள்ள ரஸ்மியின் தந்தை), நஸீர், அஜ்வாத், நபீலா, பவ்ஸர், அமானுள்ளாஹ் ஆகிய வாரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஸுபைதா உம்மா
ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் இரண்டாவது வாரிசான ஸுபைதா உம்மா அவர்கள் 'மிஹிரிஎலை'யைச் சேர்ந்த உமர் லெப்பை என்பவரைத் திருமணம் முடித்து, ஸலீம் பீபி, அஸீஸ், நதீமா, கன்சுல் ஆகிய வாரிசுகளைப் பெற்றார்.
பெபிலகொல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட "அப்பா முதலாளி" என்று கிராமத்து மக்கள் மட்டுமன்றி, சுற்றுவட்டாரத்துப் பெரும் பான்மையினரும் அன்போடழைத்து வந்த, மர்ஹூம் எம். கே. எஸ். அஹமட் அவர்கள் இவரது மூத்தமகள் சலீம் பீபியின் கணவராவார்.
1970களில் நடைபெற்ற கிராமசபைத் தேர்தலின்போது, ஷரீப் ஹாஜியார் என்பவரோடு போட்டியிட்டு, நூலிழையில் தோல்வி கண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மர்ஹூம் எம். கே. எஸ். அஹமட்

மூத்த மகள் என்பதால் ஸுபைதா உம்மாவுக்கு நிறைய நிலங்களை ஸல்ஹா பீபி எழுதி வைத்தார். மூக்குலாந்தெனிய என்ற இடமும், தற்போது மும்தாஜ் மஹால் அமைந்துள்ள நிலமும் இவருக்குச் சொந்தமாக இருந்துள்ளது. இவற்றை இவர்கள் அவ்வப்போது, விலைக்கு விற்றுள்ளனர்.
ஸலாஹுதீன்
ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் மூன்றாவது வாரிசான
வாரிசான ஸலாஹுதீன் அவர்கள் 'கலத்துகலலெப்பை' என்றழைக்கப்பட்ட ஹபீப் முஹம்மது என்பவரின் மூத்த புதல்வியான பதீலா உம்மாவை மணந்ததால், இத்தம்பதியினர் பதினொரு வாரிசுகளை ஈன்றெடுத்தனர்.

கல்ஹின்னையில் புதுப்பொழிவுடன் திகழும் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் அரபிக் கல்லூரியின் ஒரு பகுதி போன்றவற்றின் நிர்மாணப் பணிக் கண்காணிப்பாளராக ஸலாஹுதீன் அவர்கள் செயல் பட்டதுடன்,
இவ்விரு நிர்மாணங்களுக்கும் தேவையான கற்களின் பெரும்பகுதி இவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்தே கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியாஸ், ஸவாஹிர் (கல்ஹின்னை மாதிரி ஆரம்பப் பாடசாலை BA பட்டதாரி ஆசிரியை ஸப்ரியாவின் தந்தை), ஜரீனா உம்மா (பிரதேச சபை உறுப்பினர் உவைஸ் ரஸானின் தாயார்), ஸீனதுல் முனவ்வரா, மர்ஹூமா நஸாஹிரா, ஹலிமத்துந்நிஸா (மூஸாமுனையின் முதல் பெண் ஆசிரியை), முன்னாள் அல்மனார் தேசிய பாடசாலை ஆசிரியர் எஸ்.எம்.ஸஹீல் (மூஸாமுனையின் முதல் B Com பட்டதாரியும், முதல் ஆசிரியர்
மற்றும் கணக்காளர்), ஜவ்பர்தீன், அஸ்ஹர், ரியாஸ், ரிஸ்வானா ஆகியோரே அந்தப்பதினொரு வாரிசுகளுமாவர்.

'களத்துக்கலலெப்பை'
'களத்துக்கலலெப்பை' என்றழைக்கப்பட்ட, அக்காலத்தின் கல்ஹின்னையில் அனேகமான வர்களுக்குக் குர்ஆனை கற்றுக் கொடுத்தவரும், ஜும்மா மஸ்ஜிதின் இமாமாகக் கடமையாற்றியவருமான ஹபீப் முஹம்மது என்பவராவர்.
அலவத்தை எஸ்.எச். தாஜுதீன் ஆசிரியர், முன்னாள்ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பூஜாபிடிய பிரதேச சபை உறுப்பினர் மர்ஹூம் எஸ். எச். ஜுனைதீன் மற்றும் "வேட்டை" இலத்திரனியல் சஞ்சிகை ஆசிரியர் நயீம் ஆகியோரின் தந்தையான, ஷாஹுல் ஹமீத்
என்பவரும், "டபுல் அப்பச்சி" என்றழைக்கப்பட்டவரின் மனைவியும் அமீர் மாமா அவர்களின் தாயாரும், மர்ஹூம் ஜுனைதீன் அவர்களின் மாமியாருமான
ஷரீபா உம்மா
"மம்மோஸன் பாஸ்" என்றழைக்கப்பட்ட முஹம்மது ஹுஸைன், ஹல்கொல்லயில் வசித்துவரும் தாஹா லெப்பை, பானகமுவ பகுதியில் வசித்து வந்த முஹம்மது ஹனிபா மற்றும்
கல்ஹின்னை பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தரும், நீண்டகாலமாக அல்மனார் தேசிய பாடசாலையில் தொண்டராசிரியராகக் கடமையாற்றிய ரிஸ்மின் என்பவரின் பாட்டியுமான பாத்திமுத்து
என்போர் களத்துக்கலலெப்பை அவர்களின் உடன் பிறப்புக்களாவர்.
பொதுவாக, ஆதிகாலம் தொட்டு கல்ஹின்னையில் ஒவ்வோர் குடும்பங்களும் காரணப் பெயர்கொண்டு அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.
அந்த வகையில், அக்காலத்தில் ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் வீட்டைச் சுற்றி அதிகமான வயல் நிலங்கள் இருந்துள்ளன. நெல் அறுவடை செய்யப்படுகின்றபோது, அவற்றைக் கொண்டுவந்து சேர்த்து, சூடுமிதிக்கப்படும் இடத்தைக் "களம்" என்று அழைப்பர். களத்துக்கு அருகில் இவரது வீடு இருந்ததால், இவர் 'களத்துக்கல லெப்பை' என்று அழைக்கப்பட்டு வந்தார்.

இவர் வாப்புக்கண்டுவின் வழிவந்த மீரா லெப்பை - ஆசியா ஆகியோரின் மூத்த புதல்வராவார்.
இவரது தந்தை ஒரு கடை வைத்திருந்ததாகவும், அக்காலத்தில் வீடுகளில் பரவலாக உபயோகிக்கப் பட்டுவந்த சாக்குக் கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டுருத்த வேளை, அருகில் சமையலுக்கோ அல்லது வேறு தேவைக்காகவோ எரிந்துகொண்டிருந்த தீ கட்டிலுக்குப் பரவி இவர் உயிரிழந்ததாக களத்துக்கல லெப்பையின் இரண்டாவது மகளும், அலவத்தைப் பகுதியில் வசித்துவருபவருமான பாத்திமா அவர்களின் வாய்மொழியூடாக அறியக்கிடைத்தது.
'பிட்டியூட்டு' ஹனிபா அவர்களின் தாயாரும் , ஜீபீஸ் ரஹீம் ஹாஜியாரின் மனைவியின் தாயாருமான "பிட்டியூட்டு ஆச்சி", பிரபல ஓவியரும் வானொலி நாடக்கக் கலைஞருமான 'ரைத்துலாவெல அஸீஸ்' அவர்களின் தாயாரான 'உக்குவெல ஆச்சி', GBC ரியாஸ் ஹலீம்தீனின் தாயாரின் தந்தை "பெபிலகொல்ல அப்பா", UMH ஹனிபா ஹாஜியாரின் மனைவியின் தந்தை ஆகியோரின் உடன் பிறப்பையே 'களத்துக்கல லெப்பை' என்று அழைக்கப்பட்டுவந்த ஹபீபு முஹம்மது அவர்கள் மணம் முடித்தார்கள்.
களத்துக்கல லெப்பையின் தாயாரின் ஒரு சகோதரர் அலவத்தையில் வசித்து வந்த மரியம் ஆச்சி (அலவத்தை நிஸாம் அவர்களின் தாயார்) அவர்களின் தந்தை என்பதை மேற்குறிப்பிட்ட பாத்திமா அவர்கள் மூலமே அறியக் கிடைத்தது.
களத்துக்கல லெப்பையின் வாரிசுகளாக பதீலா உம்மா, பாத்திமா (அலவத்த முனாஸ் அவர்களின் தாயார்), பாரூக் (ரஸீதா ஆசிரியையின் தந்தை), பளீல் (அப்துல் கரீமின் தந்தை), பரீத் (ஹஸ்ஸானின் தந்தை), பகுர்தீன், புஆத், பஸாஹிமா, பத்ஹுல்லாஹ், பைலூன், பாயிஸா என்போர் கொள்ளப்படுகின்றனர்.
பாத்திமுத்து
ஹபீப் முஹம்மது-ஸல்ஹா பீபி அவர்களின் நான்காவது வாரிசு பாத்திமுத்து அவர்கள் பரகஹதெனிய எனும் ஊரின் 'புலாம்மரத்தடி' குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் என்பவரைத் திருமணம் செய்து ரபாய்தீன், உவைஸ், காலித், மர்ஸூக், உம்முரபீக்கா, நஜார் ஆகிய ஏழு பிள்ளைகளை ஈன்றெடுத்தார்கள்.
இவர்களின் திருமணப் போக்குவரத்து பெரிய கல்லுக்குக் கீழாகச் செல்லும் 'இருணூரேக்கர்' பகுதியூடாக கால்நடையாகவே நடைபெற்றதாக முன்னோர்களின் வாய்மொழிகளினூடாக அறியக் கிடைத்தது.
பெற்றோர் இருவரும் பிள்ளைகளின் சிறுபிராயத்திலேயே காலம் சென்றதால் ரபாய்தீன், உவைஸ் ஆகியோர் பரகஹதெனியவில் தந்தையின் உடன் பிறப்புக்களிடமும், காலிதீன் தனது தாயின் கடைச் சகோதரியிடமும், மர்ஸூக், நஜார் ஆகியோர் தாயின் சகோதரியான ஹாஜரா உம்மா அவர்களிடமும்,உம்மு ரபீக்கா தாயின் மற்றுமொரு சகோதரியான ஸஹர்வான் பீபியிடமும் வளர்ந்தார்கள்.
இவர்களில் கடைசியாகப் பிறந்த பெண் குழந்தையை குருணாகல் தெலியாகொண்ணைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்குக் கொடுக்கப்பட்டு, குமரிப் பெண்ணாக வளர்ந்திருந்த நிலையில் குருணாகல் சந்தைத் தொகுதியில் வியாபாரம் செய்துவந்த பாத்துமுத்து அவர்களின் மாமன் மகனான வர்த்தகச் செல்வர் அப்துல் ரஹீம் அவர்களால் சந்தைக் கட்டடத் தொகுதிக்கு வந்த சந்தர்ப்பத்தில் இனங்காணப்பட்டுக் குடும்பத்துடன் இணைக்கப்பட்டார். அண்மையில் இவர் இறையடி சேர்ந்துள்ளார். இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
உவைஸ் என்பவர் தனது தாய் மாமனான ஸலாஹுதீன் என்பவரின் மகளையும், காலிதீன் மூஸாக்கொட்டுவை ஜுனைதீனின் மூத்த புதல்வி பரீஸாவையும், உம்மு ரபீகா மஜீத் லெப்பை அவர்களின் மகனான ஹபீலையும் மணம் முடித்தமையால் குடும்ப உறவுகள் விட்டுப் போகாமல் தொடர்ந்து வந்துள்ளது.
ஹாஜரா உம்மா
ஸல்ஹா பீபி-மூஸா தம்பதியினரின் ஐந்தாவது புதல்வியான ஹாஜரா உம்மா அவர்கள் கணவரை இழந்து வாழ்ந்து வந்த நிலையில், பட்டகொள்ளாதெனிய ஒமர் ஸாஹிபு என்ற தனவந்தரை மறுமணம் செய்துகொண்டார்.
ஸஹர்வான் பீபி
ஸல்ஹா பீபி-மூஸா தம்பதியினரின் ஆறாவது வாரிசான ஸஹர்வான் பீபி உக்குவல மாபேரியைச் சேர்ந்த முஹம்மது காசிம் இப்ராஹீம் என்பவரை மணந்து சிறுபிராயத்திலேயே தனது மூன்று ஆண் குழந்தையை இழந்த நிலையில் அப்துல் ஸத்தார், மவ்ஜூத், நஸீமா ஆகியோர் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
பாடசாலைக் கல்வி பெற்றிறாத இவரின் பேரப்பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் துணைவர்கள் அனைவரும் துறைசார் மற்றும் கல்வித்துறை பட்டதாரிகள் என்பது, வல்ல அல்லாஹ் பிள்ளைகளை வளர்ப்பதில் அவர்கள் பட்ட பெருந்துயருக்கு அருளிய நற்பாக்கியமாகும்!
அன்னாரின் மூத்த மகன் அப்துஸ் ஸத்தார் - ரியாஸா என்பவரை மணந்துள்ளார். இவர்களிகளின் ஒரே புதல்வியான, ஆங்கிலமொழி ஆசிரியப் பட்டதாரினி அமாணீ ஒரு மருத்துவரை மணந்துள்ளார்.
இரண்டாவது மகன் மவ்ஜூத் - ஸீனத் (ஆசிரியை), உக்குவெலயில் வாழ்ந்துவரும் இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். மூத்த மகன் ஸும்ரி ஒரு கட்டடக்கலை பட்டதாரி (Architect)யாவார்.
மூன்றாவது மகள் நஸீமா - நஸீர் தம்பதியினரின் பிள்ளைகளான ஸப்ராஸ் - B Sc பட்டதாரி, ACCA (மூஸாமுனை மற்றும் கட்டாப்பு பகுதி முதல் ACCA) இவர் மனைவி ஒரு கலைத்துறைப் பட்டதாரினி.
ஸப்ரான் - B Sc. பட்டதாரி, Chartered Accountant (மூஸாமுனையின் முதல் Chartered Accountant) இவர் மனைவி ஒரு கலைத்துறைப் பட்டதாரினி.

ஸஸ்னி - கல்ஹின்னையின் முதல் பெண் சட்டத்தரணி. இவரது கணவர்
ஒரு கட்டடக்கலைப் பட்டதாரியாவார்.
இரட்டையர்களான நாதியா, ராதியா இருவருமே பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து, கலைத்துறைப் பட்டத்தை எதிர்கொண்டு, பயின்று வருகின்றனர்.
ஜென்னத் பீபி
ஸல்ஹா பீபி-மூஸா தம்பதியினரின் இறுதி வாரிசாக ஜென்னத் பீபி கொள்ளப்படுகின்றார். இவர் உக்குவலையில் அப்துல் காதர் என்பவரை மணமுடித்து, சித்தி ஹபீலா, முஹம்மது பரீன், பசீஹா, பர்சானா, சியானா என்ற ஐவரை வாரிசாகப் பெற்றுள்ளார்.

சாவன்னா முதலாளி
ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் வாரிசுகளில் மற்றுமொருவர், “சாவன்னா முதலாளி” என்றழைக்கப்பட்ட
சாஹுல் ஹமீத் அவர்களாவர்.
கல்ஹின்னை பற்றிய வரலாற்றுக் குறிப்பில் “சாவன்னா முதலாளி” என்று ஒருவர் இருந்ததாக அவரது பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், கல்ஹின்னையில் பிரசித்திபெற்றிருந்த நிலச்சுவந்தரும், கல்ஹின்னை அபிவிருத்தியில் அதிக பங்கு கொண்டிருந்தவருமான அன்னார் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எதுவுமே இடம்பெறாதது வருந்துதற்குரியது.
அன்னார் கல்ஹின்னையில் மாத்திரமன்றி, பிற இடங்களிலும் - குறிப்பாக மாத்தளை, கூம்பியாங்கொடை, வத்துகாமம் போன்ற பகுதிகளில் பெருந்தோட்டங்களுக்குச் சொந்தக்காராக இருந்து வந்துள்ளார்.
அக்காலை ஆறு கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்துள்ள, இவரது நான்கு கார்கள் சிவப்புநிற இலக்கத் தகட்டில் மாத்தளை நகரில் வாடகைக் கார்களாகச் செயல்பட்டுவந்துள்ளன.
தவிர, கல்ஹின்னைக்குள் முதலாவது வாகனம் கொண்டு வந்த பெருமையும் இவரையே சாரும். A40 ரகத்திலான CN1219 இலக்கத் தகட்டைக் கொண்ட சாம்பல் நிறத்தைக் கொண்ட காரே கல்ஹின்னைக்குள் நுழைந்த முதலாவது வாகனமாகும்!

இதனை “பேலீஸ்” என்ற சாவன்னா முதலாளியிடம் ஓட்டுனராகப் பணிபுரிந்த சாரதியே, கல்ஹின்னை சந்தியிலிருந்து பள்ளிவாயில் வரை வெட்டப்பட்ட புதிய பாதையில் முதலில் வெள்ளோட்டம் விட்டவராவார்.
'சாவன்னா முதலாளி', தனது மனைவியின் தம்பியான (மச்சான்) வைத்தியர் ஜுனைதீன் அவர்களை மணமுடித்து வைப்பதற்காக வைபவ ரீதியாகத் திருமணப் பேச்சு நடந்து கொண்டிருந்த வேளை, “மணப்பெண் உண்டு, காரும் உண்டு. ஆனால் மணப்பெண்ணின் வீட்டிற்கு காரில் செல்ல முடியாதுள்ளதே!” என்றவாறாக “கடேயப்பச்சி” என்று கல்ஹின்னை மக்களால் அன்போடு அழைக்கப்பட்டுவந்த சாவன்னா முதலாளியின் பால்யநண்பரால் நையாண்டி செய்யப்பட்ட வேளை, அதனை ஒரு சவாலாக ஏற்ற “மூஸா” என்றழைக்கப்பட்டுவந்த சாவன்னா முதலாளியின் இரத்தவுறவு மச்சானான 'ஹபீபு முஹம்மத்' அவர்கள், சாவன்னா முதலாளியின் தோட்டங்களில் (மாத்தளை ரொஸ் எஸ்டேட் - கூம்பியான்கொட அன்னாசிக்கந்த தோட்டம்) வேலைசெய்து கொண்டிருந்த 70 தொழிலாளர்களை அழைத்து வந்து, ஊர் மக்களோடு ஒன்றிணைந்து, கல்ஹின்னை சந்தியிலிருந்து அன்னாரது வீடுவரைக்கும் வாகனம் செல்லக் கூடியதாக ஒரே வாரத்தில் பாதை வெட்டி முடிக்கப்பட்டது மல்லாமல், மணமக்கள் பள்ளிவாசல் வரை சென்று 'காணிக்கை'யிட்டு வரவேண்டுமென்ற நோக்கை இலக்காகக் கொண்டு, கல்ஹின்னை ஜும்ஆப்பள்ளிவாசல் வரை பாதையை நீடித்ததாகவும் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வைத்தியர்லாகெதர ஸெய்யது முஹம்மது அப்துர்ரஹீம் அவர்கள் உட்பட மேலும் பலரின் செவிவழிச்செய்திகள் மூலமும் அறிய முடிகின்றது!
அக்காலத்தில் பள்ளிவாசல்களுக்குக் 'காணிக்கை' போடுவதென்பது ஒரு வழக்காறாக இருந்து வந்துள்ளமை அனைவரும் அறிந்ததே!
நபீசா உம்மா, மாஜிதா, தாஜுதீன், ஸாஹிர், ரபீக், மஹ்றூப், நதீமா உம்மா என்போர் சவன்னா முதலாளியின் வாரிசுகளாவர்.
செய்யது முகம்மது லெப்பை
ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் இறுதி வாரிசான வைத்தியர்லாகெதற செய்யது முகம்மது லெப்பை என்றழைக்கப்பட்டாவர், அக்காலத்தில் அறபுத்தமிழ் நூல்களை வைத்துக்கொண்டு
'பாஆல்' பார்ப்பவராகவும், ஓர் ஆயுர்வேத வைத்தியராகவும் செயல் பட்டுவந்துள்ளார். 'மலைப்பணிய' என்று அழைக்கப்பட்டுவந்த பிரதேசத்தில் இவருக்குச் சொந்தமாக வயல் நிலங்கள் அண்மைக்காலம் வரை இருந்து வந்துள்ளன. மூஸாமுனையின் மத்திய பகுதியில் இருந்து வந்த, நிலா முற்றத்துடன் கூடிய இவரின் மிகப்புராதன வீடு அண்மைக் காலத்தில்தான் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.

செய்யது முஹம்மது லெப்பை அவர்கள் ஆமினா உம்மா என்பவரைத் தன் துணைவியாக்கிக் கொண்டார்கள். ஆமினா உம்மா என்பவர், கண்ணாடி ஷரீப் அப்பாவின் மனைவியான ஹாஜயானி ரஜீனா உம்மா, பட்டகொள்ளாதெனிய கலீபுல்லாவின் உம்மம்மாவான "பட்டகொள்ளாதெனிய ஆச்சி" என்றழைக்கப்பட்டுவந்த பாத்திமுத்து, 'முஸல்லியூட்டுப் பெத்தா' என்றழைக்கப்பட்ட பஷீர், ரஸ்ஸாக் ஹாஜியார், குத்தூஸ் ஆகியோரின் தாயாரான ஹாஜியானி ஹவ்வா உம்மா, வெதமஹத்தயா என்பாரின் மனைவியும், மஜீதிய்யா கல்யாண மண்டப உரிமையாளர் பாரூக் ஹாஜியாரின் தாயாருமான ஹாஜியானி அபுஸா உம்மா, ஸமீம் ஹாஜியாரின் மாமனாரான அல்ஹாஜ் ஹுஸைன், பாரிஸ் மற்றும் 'ஜனாஸா' நலன் புரிச்சங்கத் தலைவர் அமீன் ஆகியோரின் தந்தை அல்ஹாஜ் ஸாலிஹ், நவாப் என்பவரின் தந்தையான அல்ஹாஜ் குதுபுத்தீன், ஸமீம் ஹாஜியாரின் தாயாரான "அக்குரணை ஆச்சி" என்றழைக்கப்பட்ட ஹாஜியானி ஜமீலா உம்மா மற்றும் இஸ்ஸதீன் என்பவரின் தாயாரான ஹாஜியானி செய்னம்பு ஆகியோரின் உடன் பிறப்பாவார்.
வைத்தியர்லாகெதற செய்யத் முகம்மது லெப்பை அவர்களின் வாரிசுகள் மூவராவர். அப்துர் ரஹீம் என்ற வர்த்தகச் செல்வரான மூத்தவர் தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவரிடமிருந்தே அதிகமான வரலாற்றுத் தகவல்களைப்பெற முடிந்தது.
நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான அவரின், மகன்மார்களான இர்ஷாத், ரிஸ்வான் என்போர் வாரியப்பொலையில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் அடுத்த வாரிசான வர்த்தகச் செல்வர் நிஸாம்தீன், 06.05.1995ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். அன்னார் அக்காலத்தில் E.M.S. Mariccar (Bata) நிறுவனத்தில் பணிசெய்து கொண்டிருந்த வேளை திருமணம் செய்ததனால் அன்னாரின் வாரிசான ஒரே மகன், தற்போது கத்தார் நாட்டில் தங்கநகை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அனுராதபுரம், கொழும்பு, திஹாரிய ஆகிய இடங்களில் பல்துறை வர்த்தகங்களில் ஈடுபட்டுவந்த அன்னார், இரண்டாம் தாரமாக அக்குரணையில் ஸரீனா என்பவரை மணமுடித்து, ஒரு மகளையும் தன் வாரிசாகப் பெற்றுள்ளார்.

வைத்தியர்லாகெதற செய்யத் முகம்மது லெப்பை அவர்களின் இறுதி வாரிசான முகம்மது பஸீல், பறகஹதெனியாவில் வாழ்ந்து வருகின்றார். மூன்று மகன்களைத் வாரிசாகக் கொண்டுள்ள அவரது, இரண்டு மகன்மார்கள் கணக்களர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது!
"மூஸாக்கொட்டுவ"
'மூஸா' என்பவர் இரண்டாம் தாரமாக, மாந்திராவையைச் சேர்ந்த ஆசியா உம்மா என்பவரை மணந்து கொண்டார்.
அதனால் 'மூஸாக்கொட்டுவை' என்ற பாரிய நிலப்பரப்பு 'மூஸா'வின் இரண்டாவது திருமண பந்தத்தில் வந்த வாரிசுகளின் குடியிருப்புப் பகுதியாக மாறியது.
ஆசியா உம்மாவை இரண்டாம் தாரமாக வரிந்து கொண்டதன் மூலம், பதீலா உம்மா (Durham College அனஸின் உம்மும்மா), எச்.எம். ஜுனைதீன், எச்.எம். ஹனிபா (இவரது மூன்றாவது மகளான ஹிஸானா என்பவர், அல் மனாரினதும் எமதூரினதும் இரண்டாவது பெண் B Com பட்டதாரிணியும், ஐக்கிய ராஜ்யத்தின் போல்டன் பல்கலைக் கழகத்தில் கணக்கியல், நிதி முகாமைத்துவ முதுமாணிப் பட்டம் (Masters in Accounting & Financial Management- University of Bolton, U.K.) பெற்று தற்பொழுது ஐக்கிய ராஜ்யத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.)
கல்ஹின்னையின் முதல் B Com பட்டதாரிணி பெபிலகொல்லை Auditor ஹனிபா அவர்களின் சகோதரியின் மகளும், எமதூர் விவசாய அதிகாரியான அனீஸ் (ராஜா - ராலஹமி) அவர்களின் மனைவியுமான ஷகீலா என்பது குறிப்பிடத்தக்கது. எச்.எம். ஸுபைர், எச்.எம். மன்ஸூர், எச்.எம். அம்மத் பீபி, எச்.எம். தையூப் ஆகியோரை வாரிசுகளாகப் பெற்றார்.
எமதூரின் முதல் பெண் பட்டயக்கணக்காளர் (Chartered Accountant) ஸீனத் நஸீம் என்பவர், அம்மத் பீபியின் பேரப்பிள்ளையாவார்.
இவர், பலகாலமாக இயங்கிவரும் பன்னாட்டுக் கணக்காய்வு நிறுவனமான (Multi National Audit Firm) Ernst & Young நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணை முகாமையாளர் (Assistant Manager) பதவியை அலங்கரிக்கும் முதற்பெண்மணி என்பது கிராமத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு விடயமாகும்!
முஹம்மது ஸஹீல்
(கணக்காளர் - UAE)
Tags:
கல்ஹின்னை பொக்கிஷங்கள்
Masha Allah Great job
ReplyDelete