கல்ஹின்னை அரசியல் தூய்மையானது?

கல்ஹின்னை அரசியல் தூய்மையானது?

சாக்கடை' இல்லாமல் அரசியல் இல்லை! உலகம் முழுவதிலும் உள்ள அரசியல்வாதிகள் அனைவருமே புரிந்து கொண்டது இதுதான்!

எவராவது அரசியல்  தூய்மையானது; அது 'சந்தன ஆறு'  என்று அடம்பிடிக்கின்றார் என்றால், அதன் அர்த்தம் அவர் பொதுஜனத்தின் காதுகளில் பூ வைக்கின்றார் என்பதுதான்!

முழு உலகுமே அரசியலைத் தூய்மையற்றது எங்கின்றபோது, கல்ஹின்னை  WhatsApp வீரர்கள் மட்டும் அது தூய்மையானது என்கின்றார்கள்; அது ஒருபோதும் தூய்மை பெறாது என்பதைப் பொது ஜனம்தான் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்!

வாக்குப்போடும் ஜனங்கள் எப்போதும் பாவப்பட்டவர்கள்தான்; பொருத்தமில்லாத நபருக்கு வாக்களித்துவிட்டு, ஒட்டாண்டியாக வாழ வரம் பெற்றவர்கள்!

அரசியலுக்கு வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்யத்தான் வருகின்றார்கள் என்று நினைக்கும் பொதுஜனம், இன்னொரு வகையிலும் கூட,  பரிதாபத்துக்குரியவர்கள் எனலாம்!

எப்படியாவது கால்களில் விழுந்தும், கைகளை முகர்ந்தும் அரசியலுக்குள் நுழைந்து விடுவதில் குறியாயிருக்கும் வேட்பாளர்கள், தமது வெற்றிக்குப் பிறகு ஒருபோதும் பொதுஜனத்தை மதிக்கப் போவதில்லை; சட்டத்தை வைத்து தம்மை நெருங்க விடாமல் சமாளித்து விடுவார்கள்!

தமது வயிற்றை நிரப்புவதிலேயே குறியாயிருக்கும் அவர்கள், தம்மால் முடிந்தவரை,  தேர்தல் காலத்தில் தமக்காக  வக்காளத்து வாங்கியவர்களுக்கு உதவிகள் செய்து அவர்களின் வயிற்றையும் நிரப்பி விடுவார்கள்!

அதற்காகத்தான் சிலதுகள்,  WhatsApp குழுமங்களை  உண்டாக்கி,  "தேர்தல் அறிவுத்தளம்" என்றவாறு  பெயரிட்டுக்கொண்டு, பொது ஜனத்தை ஏமாறவைக்கும் அருமையான கைங்கரியத்தைச் செய்வதன் மூலம், தமக்கு வேண்டியவர்களுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான  குழுமங்கள், இயங்கிக்கொண்டிருக்கும் பாடசாலைகளை மூடவைத்து, அதற்குப் பதிலாக மகப்பேற்று வைத்திய நிலையங்கள் உருவாக்கும் செயற்பாடுகளையும் பொதுஜனங்கள் மத்தியில் முன்வைக்கின்றன. நாம் குறிப்பிடும் ஜால்ராக்களில் இதுவும்  ஒருவகை!

இந்த இடத்தில்தான் பொதுஜனம் உசாராக வேண்டும்! ஜால்ராக்களை நம்பி தனது பெறுமதியான வாக்குகளை வீணாக்கிவிட்டு, வயிறு காயும் நிலைக்கு ஆளாகி விடவேண்டாம் என்று Gt பொது ஜனத்திற்கு அறிவுரை  கூறுகின்றது.

பொதுஜனம் ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்  பற்றியும், அவரது ஜால்ராக்கள் பற்றியும் அலசி ஆராய்ந்தே புள்ளடியிட வேண்டும்.

எனது உறவினர், எனது நண்பர், எனது நண்பனின் நண்பன், கண்டதும் கனிவாகப் பேசுபவர் என்றெல்லாம் நினைத்து வாக்களித்தால் சுருங்கப்போவது பொதுஜனத்தின் வயிறுதான். வேட்பாளர்கள் வாயால் வடை சுடுவதில் விட்பன்னர்கள் என்பதை பொதுஜனம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது!

கல்ஹின்னை என்பது, பள்ளிவாயில் சந்தி முதல், மிஹிரிஎலை எல்லை வரையும் விசாலித்த பெரும் பகுதியாகும். இதில் பட்டக்கொள்ளாதெனிய, பூதல்கஹ என்றெல்லாம் வேறுபடுத்தி, காரியங்களை முன்னெடுப்பது சிறப்பானதல்ல. கிராம மட்டத்தில் ஏதாவதொரு விடயம் முன்னெடுக்கப்படுமானால், நாங்கள் கல்ஹின்னைப் பகுதிக்கு செய்துவிட்டோம், பட்டகொள்ளாதெனியாவுக்கு செய்தார்களா, இல்லையா என்பது  தெரியவில்லை என்று குறிப்பிடுவது, ஒட்டுமொத்த கல்ஹின்னைப் பிரதேசத்துக்குமாக  பிரதேச சபையில்  அங்கம்  வகிக்கும்  ஒருவரின் பேச்சாக இருக்கக் கூடாது!

எந்தவொரு காரியம் முன்னெடுக்கப்படுவதாக இருந்தாலும் ஒட்டுமொத்த கல்ஹின்னைக்குமாக இருக்க வேண்டும்!

எதிர்காலத்தில் வெற்றி பெற்று பிரதேசிய சபைக்குள் நுழைபவர் இதனை உள்வாங்கிக் கொள்வார்கள் என்று Gt நம்புகின்றது!


 


Post a Comment

Previous Post Next Post