“எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசித்து, தொழுகையையும் கடைபிடித்து, ஸக்காத்தும் கொடுத்து வருவதுடன் அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கின்றார்களோ அவர்கள்தான் மஸ்ஜிதுகளை பரிபாலனம் செய்யக் கூடியவர்கள். இத்தகையோர் தான் நேர் வழியில் இருக்க கூடியவர்கள்.“ 9-18
எதற்கெடுத்தாலும் பிரச்சினை.
நல்ல காரியம் நடப்பதற்கு முன் பிரச்சினைகளை சமாளித்து பின் ஒரு சிலரின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான் இன்று கல்ஹின்னையின் நிலவரம்.
அரசியல் தலையீடுகளும், இயக்க வெறிகளும் சமூகத்தை சின்னா பிண்ணப் படுத்தியது போல் அதன் தாக்கம் கல்ஹின்னை பள்ளியிலும் பிரதிபலிகின்றது.
உலகத்தில் எந்த ஒரு பள்ளிகளிலும் நிர்வாக சபையை தெரிவு செய்யும் போது அந்தந்த மகல்லாக்களில் வசிக்கின்ற பொது மக்களின் தீர்மானத்தின் படிதான் முடிவுகள் எடுப்பது வழமை.அதுதான் இஸ்லாமிய சட்டதிட்டங்களின்படி ஏற்றுக்கொள்ளப்படுகின்ற முடிவு.
ஆனால் கல்ஹின்னையில் அதற்கு மாறாக தனிப்பட்டவர்களின் தீர்மானத்தின்படிதான் கடந்த சில வருடங்களாக அனைத்து முடிவுகளும் எடுக்கப் படுகின்றது.மக்கள் விருப்பமோ இல்லையோ அதைபற்றிய எந்தவித அக்கரையும் இல்லாமல் ஊரில் கலவரங்களை தூண்டிவிடும் ஒரு மோசமான செயலை செய்கின்றவர்கள் சற்றே சிந்திக்க வேண்டும்.
ஊரில் வாழுகின்ற மக்கள்தான் அத்தனை கஷ்ட நஷ்டங்களையும் அனுபவிக்கப் போகின்றவர்கள்.
ஊரில் நடக்கின்ற நல்லது கெட்டது எதுவென்று ஊர் மக்கள்தான் அறிந்தவர்கள்.
ஆகவே ஊர் மக்கள் தீர்மானிப்பதுதான் சரியான முடிவாக இருக்கும்.அவர்களிடமே விட்டு விடுங்கள்.ஜனநாயக முறைப்படி அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.ஒவ்வொரு மகல்லாக்களிலிருந்தும்
தங்கள் விரும்புகின்றவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.இதில் பெரிதாக சிந்திக்கத் தேவையில்லை. அவசியமுமில்லை.
தற்போதைய நிலைமை தொடருமானால் ஊர் பிளவு படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.ஏற்கனவே மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவின்றார்கள்.கொவிட் தாக்கத்தின் கோரப் பிடியிலிருந்து இன்று வரையிலும் மக்கள் மீளவில்லை.தொழில்இல்லாமல் ,வருமானம் இல்லாமல் கடன் தொல்லை என்று பல்வேறு சுமைகளால் மக்கள் அவதிப்படுகின்றார்கள். அப்படியிருக்கும் போது இப்படிப்பட்ட பிரச்சினைகளை மக்கள் மீது திணிப்பது மிகவும் வேதனையான ஒரு செயல் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
கல்ஹின்னை மக்களை சுதந்திரமாக தீர்மானிக்கக் கூடியவர்களாக விட்டு விடுங்கள்.நிர்வாக சபை எவருக்கும் உரித்தான சொத்தள்ள.அது அல்லாஹ்வின் மாளிகையை மக்களின் தேவைகளை அறிந்து பரிபாலனம் செய்யக் கூடிய நிர்வாகம்.அதை முறைப்படி மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நியமனம் செய்ய விட்டு விடுங்கள்.
கல்ஹின்னையை பிளவு படுத்தும் சர்வாதிகார தீர்மானங்களால் எதிர்வரும் காலங்களில் குற்றங்கள் பெருக காரணமாகிவிடும் என்பதை புரிந்துகொண்டால் சரி.
“நிச்சயமாக மஸ்ஜிதுகள் எல்லாம் அல்லாஹ்வி(ன் வணக்கத்தி)ற்காகவே அமைக்கப்பட்டுள்ளன. எனவே அங்கு அல்லாஹ்வுடன் சேர்த்து மற்றெவரையும் அழைக்காதீர்கள்.” என அல் குர்ஆன் போதிக்கிறது. 72 – 18
பள்ளிவாசல்களின் தூய்மை பேணப்பட வேண்டும். இணை வைத்தலுக்குக் காரணமாகும் எச்செயலும் அங்கு நடைபெறலாகாது. இணைவைப்போர் பள்ளி வாசலின் பொறுப்பளிகளாக வரவும் கூடாது என ஷரீஆ கூறுகிறது. பள்ளி வாசல் நிர்மாணத்திற்கு கலப்பற்ற தூய எண்ணம் தேவை. சமூகத்தை ஒன்றிணைக்கவுள்ள இடமே மஸ்ஜித். இணை வைக்க உதவியாகவும், சமூகத்தை பிளவு படுத்தவும் செய்யும் இடமாகவும் பள்ளிகள் அமையலாகாது.
அல்லாஹ்வின் வீடான பள்ளியின் பணி சீராக நடை பெறுவதென்பது அதன் பொறுப்பாளர்களில் தங்கியுள்ளது. மஸ்ஜிதுகளின் பொறுப்புக்குத் தகுதியாளர்களை அல்லாஹ்வே குறிப்பிட்டுத் தந்துள்ளான்.அத்தகுதியுடையோரே இஸ்லாத்தின் ஆரம்பப் பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களாக இருந்தனர்.
செல்வந்தருக்கு மாத்திரம் தான் பள்ளி நிர்வாகத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பிருக்கின்றது என்று எண்ண இடமுண்டு. ஆனால் சாதாரண தரத்தில் உள்ள ஒரு மனிதன்கூட குறித்த வெகுமதிக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்ள முடியும் என்பதை நாம் அறிய வேண்டும்.
அரசியல் செல்வாக்கு, அதிகாரம், பரம்பரை ஆதிக்கம் என்பவைகள் அடிப்படைத் தகைமைகளாக கொள்ளப் படலாகாது. அப்படி அவைகளுக்கு முத்தியத்துவம் அளிக்கும் பட்சத்தில் தனிப்பட்டோரது விருப்பு, வெறுப்புக்கே பள்ளி வாசல் இயங்க நேரிடும். இதனால் சகல விதமான பாதிப்புகளையும் சமூகம் எதிர்கொன்ள வேண்டிவரும். அல்லாஹ் குறிப்பிட்ட இலட்சணங்களை உடையவர்களே அவனது வீடாகிய பள்ளி வாசலின் காவளர்களாவர் என்பதையே நம் சமூகம் உணரக் கடமை படுகிறது
மஸ்ஜித் எப்போதுமே அமைதியும், அடக்கமும் காணப்பட வேண்டிய ஓரிடமாகும். அங்கு எந்த ஒரு சப்தமும் உயர்த்தப் படலகாது. ஆனால் நிர்வாக சபை தெரிவு செய்யும்போது ஏற்படுகின்ற அமளிதுமளிகளை பார்க்கும்போது அமைதியும் அடக்கமும் காற்றில் பரந்துவிடுகின்றது.