கல்ஹின்னை மக்களின் கொழும்பு ராஜா! -1

கல்ஹின்னை மக்களின் கொழும்பு ராஜா! -1

(முக்கிய அறிவித்தல்! 

இந்தத் தொடர் எழுத முக்கிய காரணமாயிருந்தது இன்றைய கல்ஹின்னையின் அவலநிலைதான். இன்று கல்ஹின்னையின் இப்படியான ஒரு நிலை ஏற்படக் காரணம் ,கொழும்பு ஹாஜியார்களோ, ,செல்வந்தர்களோ,மட்டுமில்லை.இதற்கு முக்கிய காரணம் கல்ஹின்னை செல்வந்தர்களிடம் கைநீட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருசில பச்சோந்திகள் செய்யும் கபட நாடகம் என்பது நன்றாகப் புரிகின்றது.

வறுமையில் எதுவுமே செய்ய முடியாமல் அடுத்தவர்களிடம் கை நீட்டுவதில் தவறில்லை.ஆனால் கல்ஹின்னை மக்களிடையே பிளவை உண்டுபண்ணும் குறுக்குப் புத்தியுடன் செல்வந்தர்களிடமும்,அவர்களுக்கு எதிரானவர்களிடமும் வாழ்நாள் முழுவதும் கை நீட்டி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருசில துரோகிகளை அடையாளம் காட்ட இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இரு பக்கமும் "குத்திவிட்டு கூத்துப் பார்க்கும்" பச்சோந்திகளின் அடையாளங்களை ஆதாரத்துடன் வெளியிடுவோம். எதிர்வரும் அத்தியாயங்களில் பல முக்கிய ஆதாரங்கள் வெளிப்படும் என்பதையும்,கைநீட்டி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருசிலரின் ரகசிய திட்டங்களும் வெளிப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். GToday)


'முஸ்லிம்' என்ற பெயரில் ஊர்ப்பற்றும் சமூக சேவையில் நாட்டமும் கொண்ட ஒரு மைந்தனை,  கல்ஹின்னை மக்கள் இப்போது 'கொழும்புராஜா' வாக்கி விட்டனர்.

கொழும்பு, டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் கற்ற இவர், தான் கற்கின்றபோதே வர்த்தகத்துறையில் ஆர்வங்கொண்டு, மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார்; அவ்வப்போது'பத்தை'க்குச் சென்று வியாபார யுக்திகளை அறிந்து, தெரிந்து கொண்டவராக வர்த்தகத்தில் தடம்பதித்தார்.

"அல்ஹாஜ் முஸ்லிம் ஸலாஹுதீன்"  என அறியப்படும் இவர்,  இலங்கையில் முன்னணி மாணிக்கக் கல் வியாபார நிறுவனங்களான "முஷான் இன்டர்நேஷனல்" மற்றும்  "முஷான் ட்ரேட் கொம்பைன்" ஆகியவற்றின் பிரதான இயக்குனராவார்.

கல்ஹின்னையில், முதன் முதலில் தஸ்தாவேஜு எதுவுமில்லாத நிலமொன்றில்,  ஓலை வேய்ந்த பள்ளிவாயிலொன்று தற்காலிகமாக உருவாகியது! அதனைத் தொடர்ந்து, அது 1864ம் ஆண்டில்  ஓடு வேயப்பட்டு, நிரந்தரப் பள்ளிவாயிலாகக் கட்டப்பட்டது. பின்னர், 1946ம் ஆண்டில் அதுவும் முற்றாக உடைக்கப்பட்டு, மேல்மாடி கொண்ட பள்ளிவாயிலாக மாற்றப்பட்டது.

காலம் செல்ல அதிகரித்து வந்த சனத்தொகைக்குப் பள்ளிவாயில் போதுமானதாக இல்லாததால், 1946ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாயில் முற்றாகவே தரைமட்டமாக்கப்பட்டு, சகல வசதிகளுடனும், இரண்டு 

மாடிகள், நிலக்கீழ் ஹவுழ் கொண்டு பிரமாண்டமாகக் கட்டிமுடிக்கப்பட்டு, பிரபல மார்க்கப் பெரியார் ஒருவரால், 1989ம் ஆண்டு கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர், தற்போது  'கொழும்பு ராஜா' என்று அழைக்கப்பட்டு வருபவர், பள்ளிவாயிலை 2013ம் ஆண்டு மிகவும் கவர்ச்சிகரமாக புனர்நிர்மாணம் செய்தபோது, மக்கள் பூரிப்படைந்தது மட்டுமல்லாது, கொழும்பு ராஜாவை உள்ளங்கைகளில் வைத்துத் தாங்கினர்.  நிர்வாகம் அவர்  கைக்குள்ளானது.

2018ம் ஆண்டு அவர் கிராமத்துக்குள் "சொப்பர்" ஒன்றில் வந்திறங்கி,  கல்ஹின்னை மக்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டு, புதிய பள்ளிவாயில் நிர்வாகக் குழுவையும், தலைவரையும்  நியமித்துச் சென்றார்.

அந்த சாப்பாட்டின் ருசியை, கிராம மக்கள்  மறந்திடாதிருப்பதற்காக அவ்வப்போது தகப்பனாரது வருடாந்த கத்முல் குர்ஆன் வைபவம், மீலாது விழா  போன்ற இன்னோரன்ன நிகழ்வுகளைச் சாட்டாக்கி, அவர் கல்ஹின்னை மக்களுக்கு சாப்பாடு போடத் தவறுவதில்லை.  ஒருமுறை போட்ட சாப்பாட்டின் வாசனை கையிலிருந்து மறைய முன்னரே, இன்னொரு சாப்பாடு கல்ஹின்னை மக்களுக்குக் கிடைத்து விடும்! அதிர்ஷ்டசாலி மக்கள்.

இவ்வாறு  கல்ஹின்னைப் பள்ளிவாயிலில் அவர், நல்லெண்ணத்துடன் கோலாகலமாகச் சாப்பாடு கொடுத்து வருவதால், அந்த சாப்பாட்டு ருசியில் சொக்கிப்போய்விட்ட மக்கள், நன்றிகடன் கொண்டு அவரது சொல்மீறா நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

இப்போது  வருடங்கள் ஐந்து ஆகிவிட்டது! 'சொப்பர் நிர்வாகக்குழு' வீடு போக வேண்டிய காலம்.

புதிய நிர்வாகக் குழுவையும், தலைவரையும்  தெரிவு செய்ய வேண்டிய காலகட்டத்தில் நிற்கும் கிராம மக்கள், நிர்வாகக் குழுவை யார் நியமிப்பது, எப்படி நியமிப்பது, யார் யாரை நியமிப்பது, தலைவராக எவரை நியமிப்பது போன்ற 'நியமிப்பு'களில் இடியப்பச் சிக்கலொன்றுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

இணையத்தள ஊடகமொன்றின் பதிவொன்றுக்குப் பின்னர், கிராமம் சீறுகொண்டெழும் என்று  எதிர் பார்க்கப்பட்ட நிலையில், எதுவுமே இடம் பெறாமல், கிராமத்திற்குள் கருத்துப் பறிமாற்றல்கள் மட்டும், அதுவும் குறுந்தொனியில் இடம் பெற்று வருவதைப் பார்க்கின்றபோது, 'காலாகாலமாக யார்யாருக்காவது அடிமைப்பட்டே வாழ்ந்து பழகிப்போய் விட்ட கல்ஹின்னை மக்களால், இனிமேல் ஒருபோதும் ஜனநாயகப் பாதைக்கு வரவும் முடியாது; அப்படியே வந்தாலும் சுதந்திரமாக நிர்வாகக் குழுவையோ, தலைவரையோ  தெரிவு செய்யவும் முடியாது' என்று தூர நோக்கில் சிந்திக்கும் சிலர் கருதுகின்றார்கள். ஏனென்றால், 'கொழும்பு ராஜாவிடமிருந்து, கைநீட்டி ஒரு சதமேனும் வாங்காத அல்லது மகன்களின் கல்விக்கென்றும், மகள்களின் கலியாணத்துக்கு என்றும், நோயாளியின் சிகிச்சைக்கென்றும் உதவிபெறாத எந்த நபரையும் கல்ஹின்னைக்குள் காண்பது அரிதிலும் அரிது என்பது' அவர்களின் கருத்தாகும்.

(தொடரும்)


 


 


Post a Comment

Previous Post Next Post