கல்ஹின்னை மக்களின் கொழும்பு ராஜா!-2

கல்ஹின்னை மக்களின் கொழும்பு ராஜா!-2


அவ்வப்போது கல்ஹின்னைக்குள் திருப்புமுனைகள் வருவது சகஜமாகிப் போய்விட்டது! பழைய பரம்பரைகள் வலுவிழந்துபோன நிலையில், புதிய பரம்பரை 'கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன்' என்ற நிலைக்கு வந்துவிட்டது.

குடியிருப்பு ஆரம்பமான காலத்தில் கல்ஹின்னை மக்கள்  விவசாயத்தை மட்டுமே தமது ஜீபனோபாயத் தொழிலாகக்  கொண்டிருந்தபோதிலும், அதிலே போதிய பலன் கிடைக்காமையால்  வியாபாரத்தை நாடலாயினர்.

இதனால் மக்கள் பிற ஊர்களுக்கும், நகர்களுக்கும் சென்று வியாபாரம் செய்யலாயினர். இவ்வாறு செல்கின்றவர்களிற் சிலர், அங்கேயே தங்கியிருந்து தொழில் பார்ப்பதையும், இன்னும் சிலர் அவ்வப் போது ஊருக்கு வந்துபோய்க் கொண்டிருப்பதையும் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தனர். 

காலாகாலமாக இந்த நடைமுறைதான் வழக்கிலிருந்து வருகின்றது.

ஊரில் பிறந்து அல்லது வேறெங்காவது பிறந்து,  ஊரில் வந்து வாழ்ந்தவர்கள், தொழில் நிமித்தம் ஊருக்கு வெளியில் சென்று விட்டால், 'ஊர்க்காரன்' என்ற உரிமை இல்லாமற் போய்விடுமா என்ற கேள்வி சமீபகாலமாக, ஊருக்கு வெளியில் வாழும் 'ஊரவர்' மத்தியில் இருந்து வரத்தான் செய்கின்றது.

இன்று ஊருக்கு வெளியில் வாழ்ந்துவரும் ஊர்ப்பற்று மிக்கவர்களே, ஊரில் இருப்பவர்களை விடவும், ஊருக்காக செலவு செய்பவர்களாகவும், சேவை செய்பவர்களாகவும் இருக்கின்றனர் என்பதை கல்ஹின்னை மக்கள்  இன்னுமா புரிந்து கொள்ளவில்லை?

கொவிட் 19ன் போது நடந்தவைகளை  ஒரு கணம் இந்த மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

ஊர்மக்களால் எந்தத் தொழிலுமே செய்து கொள்ளவோ, சம்பாதித்துக் கொள்ளவோ, வழிகளின்றியும், வருமானமின்றியும் கஷ்டத்தில் தவங்கிக் கொண்டிருந்தபோது, உதவியது யார்?ஊருக்கு வெளியே வாழ்ந்த ஊரவர்கள்தான் என்பதை இந்த மக்களால் ஏன் புரிந்து கொள்ள முடியாதுள்ளது?

ஊருக்கு வெளியில் வாழுகின்ற, ஊர்க்காரரை  ஒதுக்கிவிடுவதென்பது, தமது தலையில் தாமே மண்ணை வாரிப்போட்டுக்கொள்வது போன்ற ஒரு செயலாகும்.

சமீபத்திய ஊர் நாடப்புக்களைப் பார்க்கின்றபோது...
'கொவிட் 19 போன்ற கஷ்ட காலங்கள் வருகின்ற போதும், ரமழான் காலங்களின்போதும், எங்கள் பிள்ளைகளுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கின்ற போதும், நாம் நோய்வாய்ப்படுகின்ற போதும் ஊருக்கு வெளியில் வாழ்கின்றவர்கள், ஊருக்குள் வாழ்கின்ற எமக்கு உதவினால் மட்டும் போதும். அது தவிர, அதிகப் பிரசங்கித்தனமாக பள்ளிவாசல் மத்ரஸா, மற்றும் பாடசாலை விடயங்களில்  தலையிட்டு ஊருக்கு வெளியில் வாழும் எவரும் மகுடம் சூட்டிக்கொள்ளத் தேவையில்லை.

பள்ளிவாசல், மத்ரஸா மற்றும் பாடசாலை விடயங்களையெல்லாம் ஊருக்குள் வாழும் நாங்களே பார்த்துக் கொள்வோம்' என்றவாரான வறட்டுத்தைரியமொன்று
காலம் தாழ்த்தியாவது இப்போது வந்துவிட்டதை நினைக்கின்றபோது, பெருமைப்படாமலிருக்க  முடியுமா?

(தொடரும்) 


 


 


Post a Comment

Previous Post Next Post