பள்ளி நிர்வாகங்கள் நாரிநக்களிவது ஏன் ?

பள்ளி நிர்வாகங்கள் நாரிநக்களிவது ஏன் ?


இலங்கை முழுவதிலும் பள்ளிவாசல்கள் மட்டுமல்ல, விகாரைகள், கோயில்கள், ஆலயங்கள் என்பனவும் பெருவாரியாகக் காணப்படுகின்றன. 

அங்கும் நிர்வாகக் குழுக்கள் அவ்வப்போது நியமனமாகி, அமைதியாகவும், சிறப்பாகவும் காரியங்கள் நடைபெற்று வருகின்றன. 

அப்படியே அங்கு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கூட,  அவர்கள் அவற்றைத் தமக்குள்ளேயே சுமுகமாகத் தீர்த்துக் கொள்கின்ற நற்பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் தமது பிரச்சினைகளை ஒருபோதும் சர்வதேச மயப்படுத்துவதில்லை. 

அதுவுமல்லாமல் பள்ளிவாசல்களில் நடக்கும் பிரச்சினைகளைக் கூட நல்லெண்ணம் கொண்ட விகாராதிபதிகள் வந்து தீர்த்து வைத்த, தீர்த்து வைத்துக்கொண்டிருக்கும் பல சம்பவங்கள் நாட்டில் நடந்துவருவதைக் காணலாம்.

ஆனால் பள்ளிவாசல்களின் பிரச்சினைகள் மட்டும் பூகம்பமாகி, பள்ளிக்குள்ளேயும் ஊருக்குள்ளேயும் நாரிநக்களிந்து விடுவது மட்டுமல்லாது, ஊடகங்கள் என்ற பெயரில், ஊடகத்துறைக்கே அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய குழுமங்களூடாக சர்வதேசத்துக்குள் விசிரிவிடப்படுகின்றன. 

குறிப்பாக நிர்வாகக்குழுத் தேர்வின்போது, 'நீயா நானா?' என்ற போட்டி காரணமாக,  ஊரில் பிரமுகர்களாகக் கருதப்படும் பேர்வழிகளின் வண்டவாளங்களை வெளிப்படுத்துவது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. 

அந்த வகையில், கல்ஹின்ன இரண்டு தசாப்தங்களாக பள்ளிவாசல்  நிர்வாகக் குழுத் தெரிவின்போது பல்வேறு சவால்களுக்குட்பட்டு, ஊர் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பதும், சர்வதேச மயப்படுத்துவதும்  ஊரவரின்  அறிவிளித் தனத்தையும், வக்கிரபுத்தியையுமே கோடிட்டுக் காட்டுகின்றது. 

ஒரு காலத்தில் கல்ஹின்னை, வர்த்தகத்துறையிலும், கல்வித்துறையிலும், கலை, இலக்கியத்துறைகளிலும் உச்சஞ்தொட்ட கிராமமாக இருந்ததமை மறுப்பதற்கில்லை. 

மற்ற ஊரவர்கள் மூக்குமேல் விரல் வைக்கக் கூடிய அளவுக்கு கல்ஹின்னை சாந்தி, சமாதானத்துடன் ஐக்கியப்பட்டிருந்த ஒரு  கிராமமாகும். 

கல்ஹின்னை மண்ணைக் கொண்டுசென்று தமது ஊர்களில் தூவிக்கொள்ளவும் ஏனைய ஊர்க்காரர் சிலர் நினைத்ததென்பது ஏதோ ஒருவகையில்  உண்மைதான்.

அக்காலத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அடங்கி நடக்கும் நல்ல மனிதர்களும், பெரியவர்களுக்கு மரியாதை செய்து, அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்கும் இளைஞர்களும் கல்ஹின்னையில் இருந்தார்கள்.  இப்போது இருப்பதோ காடைகளும், கலுசடைகளும்தான்! அதுதான் கிராமம் தலைகீழாக மாறி வருவதற்கு முற்று முதற்காரணமாகும். 

அது ஒருபுறமிருக்க, முண்டியடித்து, நுழைந்து கொள்வதற்கு அப்படி என்னதான் இந்த நிர்வாகக் குழுவுக்குள் பொதிந்துள்ளன என்பதை அறிந்து கொள்வதற்காக நாம்  சிலரை அணுகி வினவியபோது, அவர்களிடமிருந்து கிடைத்த பதில்கள் மிகவும் அசிங்கமானதாகவே இருந்தன. 

பள்ளிவாசல்/தைக்கியா நிர்வாகக் குழுக்களுக்குள் நுழைந்துகொள்ள முயற்சிப்போர்கள் யார் என்று பார்த்தால், ஒரு தொழிலதிபராக, கடைச்சொந்தக்காரராக அல்லது ஏதாவது கைத்தொழில் செய்பவராக இருப்பதைக் காணலாம். சிலவேளை அவர்கள்  அப்படியானவர்களாக இல்லாவிட்டாலும் கூட, அவர்களது புதல்வர்கள், மருமகன்மார்கள் அல்லது உறவினராவது அப்படியான தொழில்துறையில் உள்வாங்கப் பட்டிருப்பர். 

ஊரவர்கள் ஏகமனதாக நியமித்தாலே தவிர, பள்ளிவாசல் நிர்வாக குழுவுக்குள் நுழைய அரசாங்கத்தொழில் புரிவோர் எவரும் ஒருபோதும் முண்டியடிப்பதில்லை. 

அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று இறுதிப்பயணம் செல்லத் தயார் நிலையில் இருக்கும் பலர், தமது மறுமை வாழ்க்கைக்காக தாம் சம்பாதித்தவற்றில் ஏதாவதொன்றைப் பள்ளிவாயிலுக்கு அல்லது தைக்கியாவுக்கு 'சதகத்துல் ஜாரியா'வாக, 'வக்ப்'செய்து விட்டுச் செல்வதுண்டு.

அப்படியான சொத்துக்களிலிருந்து, பள்ளிவாசலுக்கு வருமானங்கள் நிறையவே  வந்து சேர்கின்றன. இப்படி வந்துசேரும் வருமானங்கள் எப்படிப் பிரயோகிக்கப் படுகின்றன, எங்கு  வைக்கப்படுகின்றன என்பன போன்ற விபரங்கள் பற்றி ஊரவர் எவருமே கண்டு கொள்வதில்லை. இந்த வருமானங்களைத் 'தமது தொழில் துறைகளில் முதலீடு செய்துகொள்ளலாம் என்ற வக்கிரபுத்தி கொண்டு அதிகமானோர் பள்ளிவாசல் நிர்வாகத்துக்குள் புகுந்துகொள்ள முண்டியடிக்கின்றனர்' என்று பலரும்  கருத்து வெளியிடுகின்றனர்.

நிதிகளை வங்கிகளிலிருந்து பெற்றால்,  வட்டிக்குமேல் வட்டி வந்துவிடும் என்பதால், வட்டியில்லாத நிதித்தொகை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு இலகுவானதும், சிறப்பானதுமான வழியாக இந்தப் பள்ளிவாசல் நிர்வாகத்தை, நீண்ட காலமாக தொழிலதிபர்கள் எனப்படுவோர் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதில் எந்தளவுக்கு உண்மை பொதிந்துள்ளது என்பதனைப் மக்கள்தான்  ஆராய்ந்தறிந்து, தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்னும் வரும்...



 


 


Post a Comment

Previous Post Next Post