கல்ஹின்னையை வழி நடாத்த சட்டயாப்பு ஒன்று காலத்தின் தேவையாகும்!

கல்ஹின்னையை வழி நடாத்த சட்டயாப்பு ஒன்று காலத்தின் தேவையாகும்!

"கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன்" என்ற நிலையில்தான் இப்போது கல்ஹின்னைக் கிராமம் நகர்ந்து கொண்டிருக்கின்றது! 

சுமார் 12,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ள இக்கிராமம், இவ்வாறானதொரு  இக்கட்டான நிலைக்கு வருவதற்குக் காரணமாக அமைந்தது, படித்தவர்களையும், நிர்வாகத்திறன் மிக்கவர்களையும் ஓரங்கட்டிவிட்டு, உதவாக்கரைகளை  ஊர் நிர்வாகத்துக்குள் திணித்துக்கொண்டதேயாகும்! 

வீடியோச்சமர்

காலாகாலமாக ஐக்கியப்பட்டு வாழ்ந்து வந்து கொண்டிருந்த கிராமம், சமீப காலமாக குழுமங்களாகப் பிரிந்தது மட்டுமல்லாது, மிக அண்மை நாட்களில் குழுக்களுக்குள் ஏற்பட்ட முறுகல் நிலை, "வீடியோச்சமர்" ஒன்றினை ஏற்படுத்தி, சர்வதேசம்வரை உலா வருகின்றன! 

மிகமிக அருவருப்பான வீடியோக்கள் கூட, உலக முழுவதிலும் வலம் வந்து கொண்டிருக்கும் அவல நிலைக்குக் கிராமம் தள்ளப்பட்டுள்ளதை நினைக்கும்போது, கிராமத்தை  நேசிக்கும் எவரும்  கவலைப்படாமல் இருக்க முடியாது! 

யாப்பு

கல்ஹின்னையில் சட்டதிட்டங்கள்அடங்கிய யாப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றதா, இல்லையா என்பது தெரியவில்லை! 

கல்ஹின்னையை சகஜ நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலனத்துக்குட்பட்ட ஜமாஅத் அமைப்புக்காக, எதிர்காலச் சந்ததியினரின் நன்மை கருதி, கட்டுக்கோப்பான சட்டதிட்டங்கள் அடங்கிய யாப்பு ஒன்றினை உருவாக்கி, கிராமத்தை வழிநடத்துவதுதான்  சாலப்பொறுத்தமானது! 

கிராமத்திலுள்ள கல்வித்துறையிலும், சட்டத் துறையிலும் தேர்ச்சிபெற்றவர்களைக் கொண்டு இந்த யாப்பு உருவாக்கப்படலாம். ஏற்கனவே, யாப்பு ஒன்றைக் கொண்டு ஊர்நிர்வாகம் நடைபெற்று வருவதாக இருந்தால், காலத்துக்கும், தேவைக்கும் ஏற்றவாறு அந்த யாப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, செயல் படுத்தப்படுவதே பொருத்தமானதாகும். 

யாப்பு உருவாக்கப்பட்டு, அதன் பிரதிகள் அங்கத்தவர் குடும்பங்களுக்குள்  விநியோகிக்கப்பட்டு, குடும்பத்தலைவர்கள் வாசித்துணர்ந்து, பள்ளிவாசலிலேயே கையொப்பமிடச் செய்வதுவும் உசிதமானது! 

இதன் மூலம் கிராமத்தின் ஒவ்வொரு  குடும்பமும் எதிர்காலச் சந்ததியினரைப் பிணைத்துக் கொண்டு செயல்படுவதனை உறுதிப்படுத்துவதே,  சமகாலச் சிக்கலைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரே வழியாகும்! 

அங்கத்தவர்   அங்கீகாரம்

கையொப்பமிட்டு யாப்பை அங்கீகரித்த அனைவரும் அங்கத்தவர்களாகக் கருதப்பட்டு, இவர்கள் தமது மத, கலாசார, பண்பாட்டு, சமூகநலக் கருமங்களை தம் சார்பில் கலந்து முடிவெடுக்க, தமது பிரதிநிதிகளைத் 30-50 வரையிலான  குடும்பங்களுக்கு ஒருவராகவோ, "பொங்கல்" முறையிலோ அல்லது "மஹல்லா" முறையிலோ தெரிவு செய்யப்பட்டலாம். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளே தலைவர் ஒருவரைத் தெரிவு செய்யவேண்டும். பிரதிநிதிகளால் தெரிவு செய்யப்படும் தலைவரே மஸ்ஜித் நிர்வாகக் குழுத்தலைவராக, வக்ப் சபைக்குப் பரிந்துரைக்கப்படவும் வேண்டும். தெரிவுகள் அனைத்தும் 2/3 வாக்கு அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். 

பிரதிநிதிகள் தெரிவின்போதும், தலைவர் தெரிவின்போதும் கூடுமானவரை பிளவுகளுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும், போட்டிகளுக்கும் இடமளிக்காதிருத்தல் நலம். 

போஷகர்கள்:

கௌரவப் போஷகர்களாக  கல்வி, அந்தஸ்து, சேவைகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு  ஊரிலுள்ள பிரமுகர்கள் நால்வர் நியமிக்கப்பட்டு, இவர்களே தலைவருக்கு ஆலோசனை வழங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் நிர்வாகப் பொறுப்புகளுக்கு அப்பால் செயல்படுவர். முக்கியமான கட்டங்களின்போது, இவர்கள் கமிட்டி பிரதிநிதிகள் சபைக்கு அழைக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டலாம். தலைவர் நாட்டில் இல்லாதபோது, தற்காலிகத் தலைவராக போஷகர்களுள் ஒருவர் நியமிக்கப் படலாம். 

காரியதரிசிகள்:

நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்குள் பொதுக்காரியதரிசி ஒருவரும், நிதிக்காரியரிசி ஒருவரும் நியமிக்கப்படுவர். 

இவர்களுக்கு உதவியாக மஸ்ஜித் காரியதரிசி, மத்ரஸாக் காரியதரிசி, பாடசாலைக் காரியதரிசி, போதைப் பொருள் தடுப்புக் காரியதரிசி, கிராம அபிவிருத்திக் காரியதரிசி இதுபோன்ற இன்னும்  பல காரியதரிசிகளும், தேவைக்கேற்ப நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பணிகள் வரையறை  செய்யப்பட்டு, ஊர் நிர்வாகத்தை சிறப்பாக நடாத்தலாம்! 

மஸ்ஜித் 

குடும்பங்களுக்குள்  விநியோகிக்கப்பட்ட சட்ட விதிகள் முறையாக பள்ளிவாசலில் வாசிக்கப்பட்டு, குடும்பத்தலைவர்கள் பள்ளிவாசலிலேயே  கையொப்பமிட வேண்டும். 

நியமனங்களும்,  அனைத்து  ஆலோசனைகளும்,   அனைத்து தீர்மானங்களும் பள்ளிவாசலுக்குஉள்ளேயே நிகழவேண்டும். இந்நிகழ்வுகள் தனியார் இடங்களில் நடைபெறாதிருப்பது சாலவும் பொறுத்தமானது. கூட்டங்கள், நிகழ்வுகள் என்பன புனிதமான பள்ளிவாயிலுக்குள்ளேயே நடைபெறுவதால், ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வைப் பற்றிய பயம் வரும். இதன்போது பள்ளிவாசலின் புனிதத் தன்மையைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொருவரும் ஒத்துழைக்க  வேண்டும்! 

தண்டனை:

"ஊருக்கு இழுக்கு ஏற்படக்கூடிய அல்லது ஊரின் ஒற்றுமையைக் குழைக்கக்கூடிய எதனையேனும் தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட வீடுகளில் நடத்தினால் நிர்வாகக் கமிட்டி உசிதமெனக் கருதும்  ஒரு நடவடிக்கையை எடுக்கலாம். 

யாப்பின் சட்ட திட்டங்களை  மதியாதோர், மீறுவோரின் கல்யானங்கள், கந்தூரிகள், சடங்குகள் போன்ற  கருமங்களை  நிர்வாகக் கமிட்டியும், சபையின் சார்பில்  பணிபுரியும் கதீப், முஅல்லிம் மற்றும் நடத்துனர் எவருமோ முன்னின்று நடாத்த அல்லது செயல் படுத்த மாட்டார்கள் என்பன போன்ற சரத்துக்களும் யாப்பில் உள்வாங்கப்படல் வேண்டும். 

அரச நிறுவனங்களின் பரிந்துரைகள்

எப்போதும் முஸ்லிம் விவகார அமைச்சு, வக்ப் சபை, நீதிமன்றங்களின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டு, அதற்கேற்ப நடைமுறைப் படுத்தப்படவும்  வேண்டும்! 

இப்பரிந்துரைகள் தற்போதைய கிராம சூழலை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுப்புக்காக வரையப்பட்ட ஒன்றாகும். இதனை முற்றாக ஏற்று செயல்படுத்துவதும், பகுதியாக ஏற்று செயல் படுத்துவதும் அல்லது ஏற்காமல் விடுவதும் ஊர்மக்களின் கைகளில்தான் தங்கியுள்ளது!

குறிப்பு: 

எமது சட்ட வல்லுனரைக் கொண்டு 'கல்ஹின்னைக் கிராமத்திற்கான சட்டவிதிகள் கொண்ட யாப்பு' ஒன்றை வரைந்து தருவதற்கு "வேட்டை" எப்போதும் தயாராக இருக்கிறது என்பதை கல்ஹின்னை மக்களுக்கு அறியத்தருகின்றோம்.)



 


 


Post a Comment

Previous Post Next Post