எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, ஒரு ஈனப்பிறவி தரக்குறைவாக கேவலப்படுத்தி யூடியுபில் (Youtube) மீலாதுன்நபி தினத்தில் பதிவிட்டிருக்கிறான்.
ஆனால், நாம் அவற்றை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கின்றோம்.
இந்த ஈனச் செயலுக்கு எமது பிரதிபலிப்பு என்ன? ஆகக்குறைந்தது மனதில் கவலையாவது கொண்டோமா? இல்லை, இது பத்தோடு பதினொன்று, நமக்கு எதுக்கு வீண்வம்பு? என்று வாய் மூடி மௌனித்து இருக்கிறோமா? நம் தாய், தந்தை, உடன் பிறப்புகளுக்கு இவ்வாறு நடந்தால் நாம் சும்மாவா இருப்போம்?
இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றை விடவும் நேசமும், பாசமும் கொள்ள வேண்டிய எம் உயிரிலும் மேலான கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமரியாதை செய்யும் போது சினம் கொண்டு சீறிப் பாயும் சிறுத்தையாய் இருக்க வேண்டிய நாம் இன்று சிறு பிள்ளைத்தனமாய், கிறுக்குப் பிடித்து வீண் விவாதம் புரிந்து கொண்டிருக்கிறோம்.
கோளாறு எங்கே? நம் ஈமானிலா? இல்லை மூளையிலா?
"நபிகளார் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்று தொட்டு இன்று வரை இப்படி இன்னொறன்ன நிகழ்வுகள் வரலாறாய் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கிறது" என சிலர் நினைக்கலாம். ஆம், அதற்காக நாம் சும்மா இருந்து விட முடியுமா? எம் அன்றாட வாழ்க்கையில் சில்லறை விஷயங்களுக்குக் கூட மல்லுக் கட்டும், சாப்பாட்டில் சற்று உப்பு கம்மியானாலும் போர் வாள் தூக்கும் எமது குறைந்தபட்ச எதிர்ப்பையாவது எம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது சம்பந்தப்பட்ட இவ்விடயத்தில் காட்டக்கூடாதா? இதை வெறுமனே ஜம்மியத்துல் உலமாவின் பொறுப்பில் மட்டும் சாட்டி விட முடியாது.
நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முயற்சிகளில், அறிவார்ந்த முறையில் இதைப் புத்திசாதூரியமாய் அணுக வேண்டும். புத்திஜீவிகள், உலமாக்கள், சட்ட வல்லுநர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் தம்மால் ஆன வழிகளில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர் காலங்களிலும் முறியடிக்கும் விதத்தில் மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து நாம் மௌனம் காப்பது இவ்வாறான ஈனச் செயல்கள் செய்யும் ஈனப்பிறவிகள் இன்னும் உருவாக வழிவகுப்பதாக அமையும் என்பது திண்ணம்.
எமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழையும், கண்ணியத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இப்பிரபஞ்சதை படைக்க முன்பே உயர்த்தி விட்டான்.
எவன் ஒருவன் அவர்களை தரக்குறைவாக, "அவர்களும் எம்மைப் போல் சாதாரண மனிதர் தானே" என மலினப்படுத்துவானோ அவன் அழிந்து நாசமாய் போவான்.
உதய சூரியனை உள்ளங்கையால் ஒரு நாளும் மறைக்க முடியாது: இருட்டில் இருக்கும் குருட்டுக் குறைபுத்தி கொண்டோர் அதை உணரார். அது ஒளிகளுக்கெல்லாம் மேலான ஒளி! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!
கல்ஹின்னை ஹில்மி ஹலீம்தீன்