" எதிர்கால சவால்களும் அதற்கான வழிகளும் "

மலையகத்தின் தலைநகராம் கண்டியில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமங்களில் இரண்டு இலங்கை முழுவதும் பிரபல்யம் வாய்ந்தவையாகும்.
இலங்கையின் இலக்கியப் பரப்பிலும், இஸ்லாமிய வாழ்வியலிலும் நவீன சிந்தனைகளை விதைத்து வழிகாட்டிச் சென்ற முன்னோர்கள் வாழ்ந்த இடங்கள் என்று அடையாளப்படுத்தப்படும் அக்குறணையும் கல்ஹின்னையுமே அவையாகும்.
அதிலும் குறிப்பாக இஸ்லாமிய வாழ்வியல், இன்மொழியாம் தமிழுக்கு இலக்கியத்தின் வழியான பங்களிப்பு போன்ற விடயங்கள் காரணமாக கல்ஹின்னை நகரமானது இன்று கடல் கடந்த தேசங்களிலும் புகழ்பெற்று விளங்குகின்றது.
அலைகடலுக்கு அப்பாலும் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஓசை கேட்கின்றது.
அந்த வகையில் மலையகத்தின் தமிழகம் என்று கல்ஹின்னையைப் பாராட்டியோர் பலருண்டு.
கல்ஹின்னையின் தமிழ் மன்றம் இலக்கியப் பரப்பில் ஆற்றிய பங்களிப்புகள் இன்றளவும் சான்றோர் நினைவுகளிலே மங்காது தவழ்ந்து, நம் மண்ணுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றது.

கல்ஹின்னையின் இலக்கியம், இஸ்லாமிய வாழ்வியல், அரசியல் என்று எந்தவிடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதற்கான முன்னோடிகளின் வாழ்வில் ஏதோ ஒருவகையில் நமது அல் மனார் கல்விக்கூடம் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கும் என்பது ஆழ்ந்து நோக்கும் போது அந்த உண்மை புலப்படும்.
கல்ஹின்னையின் மூத்த குடிகளான கடைக் குடும்பம் என்ற அடைநாமத்துடன் பெரியவர் என்றழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஏ.ஓ.எம். காசிம் லெப்பை

கல்ஹின்னையின் முதலாவது சட்டத்தரணி ஏ.ஓ.எம். ஹுசைன், அவரது புதல்வியும் கல்ஹின்னையின் முதலாவது முஸ்லிம் மகளிர் பட்டதாரியும், கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி அதிபராகவும் விளங்கிய பௌசியா ஹுசைன் (றஹீம்), கல்ஹின்னையில் இருந்து முதன்முதல் பல்கலைக்கழகம் சென்ற பட்டதாரி எஸ்.எம்.ஹனீபா, இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கத்தின் தலைவராக இருந்த மூத்த கவிஞர் கவிமணி எம்.சி. எம் சுபைர், காதியார் வீடு' ஷரீப் லெப்பை
மற்றும் இன்றி கொழும்புக்கு அப்பால் கல்ஹின்னையிலும் இளம் முஸ்லிம் வாலிபர் இயக்கம் (வை.எம்.எம்,ஏ) பேரவையை ஆரம்பித்த ஏ.ஓ.எம் ஹுசைன் எம்.எச்.எம். ஜலால்தீன், எம்.எஸ்.எம். ஜுனைதீன், கல்ஹின்னையின் முதலாவது அதிபராகவும் (றம்புக்வெல பாடசாலை), கல்வி அதிகாரியாகவும் விளங்கிய என்.ஏ.எச்.எம். தாஹா

அத்தோடு பட்டகொல்லாதெனிய ஜமாலியா பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாதை அமைப்பதற்காக தங்கள் சொந்தக் காணியை அன்பளிப்புச்செய்த கல்லூட்டுக் கவிராயர் எம்.எம்.எம். ஹலீம்தீன், மூவன்னா ஹபீப் முஹம்மது லெப்பை, பீரிஹெல முஹம்மது காசிம் லெப்பை, தற்காலிக கொட்டகையில் இயங்கிய கல்ஹின்னைப் பள்ளிவாசலுக்கு நிரந்தர கட்டிடம் அமைத்துக் கொடுத்த தனவான் ஆதம்பிள்ளை உமர்லெப்பை ஹாஜியார், ஆன்மீகத்துறையின் முன்னோடி எச்.ஸலாஹுத்தீன் மௌலவி, என்.எம்.ஹனீபா,( மாமா) எம்.சி.எம். ஸாலிஹ் ஆகியோர் தமிழுக்கும் தாய் மண்ணுக்கும் பெருமை தேடித் தந்தவர்கள் ஆவார் கள்.
குறிப்பாக, இலங்கையில் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவர்களின் தமிழ் இலக்கிய விடைத்தாள்களை முஸ்லிம் ஆசிரியர்களே திருத்த வேண்டும் என்ற மனுவிலே முதலில் கையொப்பமிட்டவர் எஸ்.எம். ஹனீபா. அதன்வழியாக இன்று எத்தனையோ முஸ்லிம் மாணவர்கள் இலக்கியப் பாடத்தில் சிறந்த தேர்ச்சிகளைப் பெற்று அதன் வழியாக உயர்கல்விக்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
ஜனாப் ஹனீபா இலங்கையில் மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும், சட்டத்தரணியும், பன்னூலாசிரியருமாவார்.

கல்வித்துறையைப் பொறுத்த மட்டில் 1934ல் உருவாக்கப்பட்ட அல்மனார் பாடசாலை மற்றும் வெலிகமையைச் சேர்ந்த அல்ஹாஜ் ஹாபிஸ் மௌலானா, ஏ.ஆர்.எம். ஸகரியா ஆலிம் ஆகியோரால் 1946 நவம்பர் 21 உருவாக்கப்பட்ட மத்ரஸத்துல் பத்தாஹ் என்பன குறிப்பிடத்தக்க கலாசாலைகளாகும்.
ஆனாலும் ஆன்மீகத்துறையை விட கல்வித்துறையில் அல்மனாரின் பங்களிப்புத்தான் அதிகமாக இருந்தது. தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் உருவாகுவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளது.

1892ம் ஆண்டு கசாவத்தை ஆலிம் அப்பா அவர்களால் மத்ரஸா முறையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட கல்ஹின்னையின் கல்விப் பயணம் கண்டி மாவட்டத்தின் ஏனைய முஸ்லிம் கிராமங்களை விடவும் மாறுபட்டு, மகத்தான சாதனைகள் கொண்டதாக விளங்குகின்றது
இங்கிருந்து உருவான கல்விமான்கள், பல்துறை விற்பன்னர்கள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்றிருந்தார்கள். கடல் கடந்த தேசங்களிலும் கொண்டாடப்பட்டார்கள்.
கசாவத்தை ஆலிம் அப்பா அவர்களால் ஏற்றி வைக்கப்பட்ட கல்விக்கான ஒளிவிளக்கு 1934ம்ஆண்டு கல்ஹின்னையின் முதல் சட்டத்தரணி ஏ.ஓ.எம். ஹுசைன் அவர்களின் முயற்சியால் அல்மனார் பாடசாலை என்ற பெயரில் மாற்றம் பெற்று பேரொளி வீசத் தொடங்கியது.

அது 1946 ம் ஆண்டு மகா வித்தியாலயமாக மாற்றம் பெற்றது.
அன்று தொடக்கம் இன்றுவரை உலகக்கல்வியும் உயர்மார்க்கக் கல்வியும் ஒன்றிணைந்து வளர்வதால் கல்ஹின்னை உயர்ந்த கலாசாரத்தையும் அறிவு வளத்தையும் கொண்டு திகழ்கின்றது.
கல்வி இன்று மட்டுமல்ல, என்றுமே விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷமாகும். உலகில் உள்ள மற்றெல்லாச் செல்வங்களும் ஒரு காலத்தில் தோன்றி இன்னொரு காலத்தில் மங்கிவிடும். கல்வி மட்டுமே காலங்கள் தாண்டி நிலைத்திருக்கும்.
அதே போன்று கடந்த காலம் போன்றே எதிர்காலத்திலும் நம் ஊரின் பெயர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெருமையுடன் பேசப்படவேண்டுமாக இருந்தாலும் சரி
கல்ஹின்னை என்ற அடையாளத்துடன் நாமும் நம் சந்ததியினரும் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் சரி
நம் கலாசாலை பாதுகாக்கப்படு வளப்படுத்தி, வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
கலைஉலகின் தொட்டிலாக விளங்கும் கல்ஹின்னையின் கல்வித் தாய் அல்மனார் பாடசாலை. அதன் நூற்றாண்டை இன்னும் சில வருடங்களில் எட்டிப்பிடிக்கவுள்ள நிலையில் அல்மனார் பாடசாலையின் எதிர்காலம் மற்றும் அதன் ஊடாக நம் ஊரின் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்தல் தொடர்பான சில விடயங்களை உங்கள் முன் வைக்க இதனை ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொள்கின்றேன்.
அல்மனாரின் எதிர்கால வளர்ச்சியில் நம்முடைய பங்களிப்பு என்ன?
அதிபர்
கல்விக்கடலில் நீந்தும் மாணவர்கள் கரைசேர வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்ற பெருமைக்குரியவர் அதிபர் ஆவார். அந்த வகையில் இதுகால வரையான அல்மனார் மாணவர்கள் கலாசாலைக்கும் கல்ஹின்னைக்கும் தேடித் தந்த பெருமையை விட இனிவரும் காலங்களில் வரவுள்ள மாணவர்கள் பெருமை தேடித் தரக் கூடியவர்களாக அவர்களின் எதிர்காலத்தைச் செப்பனிடும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது.
எனவே சகல தரப்பையும் அனுசரித்து, ஆசிரியர்களை சரியான முறையில் அரவணைத்து, வழி நடாத்தி, மாணவர்களுக்கு வழிகாட்டும் தலையாய பொறுப்பு உங்களுடையதாகும்.
நவீன சவால்களை எதிர்கொள்ளத் தக்க வகையில் மாணவர்களின் கல்வித் திறனை வளர்த்தெடுக்கும் வகையில் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டும் பொறுப்பு உங்களுக்குரியது.
ஆசிரியர்கள்
எழுத்தறிவிக்கும் பணி இறைதிருப்திக்கு உரியது என்ற வகையில் ஆசிரியர்கள் தான் உலகின் சிற்பிகள் என்றும் கூறலாம்.
அந்த வகையில் மாணவச் செல்வங்களை எதிர்கால தலைவர்களாக, அறிஞர்களாக, பல்துறை விற்பன்னர்களாக செதுக்கும் கடினமான பொறுப்பை நீங்கள் சுமந்து கொண்டிருக்கின்றீர்கள். அந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றும்போது இறைதிருப்தியுடன் மனத்திருப்தியும் சேர்ந்து மகிழ்ச்சியான மனோநிலை தோன்றுகின்றது. மற்றவர் தரும் மரியாதையில் வாழ்வில் ஒரு திருப்தியும் ஏற்படுகின்றது. அத்துடன் தட்டுத் தடுமாறி எழுந்து நடை பயிலும் குழந்தையாய், உங்கள் வழிகாட்டலில் எதிர்காலத்தை நோக்கி நடைபயில வரும் மாணவச் செல்வங்களை சரியான வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பு உங்களுடையதே
கிராமத்தின் தனவந்தர்கள் சான்றோர்கள்
நாம் பெற்ற இன்பம் நம் கிராமும் பெற வேண்டும். எதிர்காலத்திலும் நம் கிராமம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த வகையில் நம் கல்விக் கலாசாலை அல்மனாரின் ஒளி என்றைக்கும் குறையாமல் நாற்திசையும் பரவ வேண்டும். அதற்கு நம் மீதும் சில பொறுப்புகள் உண்டு.
முன்னரே குறிப்பிட்டது போன்று இந்த ஊர் பல்வேறு பெருமை மிகு மூத்த குடிகளின் வாரிசுகளைக் கொண்டது.
உங்கள் முன்னோர்கள் தங்கள் சேவைகள் மற்றும் பங்களிப்புகளால் இந்த ஊருக்குப்பெருமை தேடித் தந்ததைப் போன்றே நீங்களும் நம் ஊருக்கு உங்களால் முடிந்த பங்களிப்புகளை வழங்க வேண்டும்.
உங்கள் முன்னோர்களுக்கு நீங்கள் செய்யும் மகத்தான நன்றிக் கடன் அதுவாகத் தான் இருக்க முடியும்.
இறைவன் நமக்கு அளித்துள்ள வளங்களில் இருந்து நம் கலாசாலையின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது நம் முக்கிய கடமையாகும். நம்மைப்போலவே நம் சந்ததியினரும் நம் ஊரின் பெருமையை நிலைநிறுத்துவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பாடசாலையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதில் நம் பங்களிப்பு கட்டாயம் நல்கப்பட வேண்டும்.
மாணவர்கள்
இலங்கையின் கீர்த்திமிகு வரலாற்றைக் கொண்ட ஒரு ஊரின் வாரிசுகள் என்ற வகையில் உங்கள் தோள்களில் மிகப்பெரும் பொறுப்பொன்று சுமத்தப்படுகின்றது. இன்றைக்கு நீங்கள் கல்ஹின்னை என்று உங்கள் ஊரின் பெருமையை தலைநிமிர்ந்து கூற முடிவதைப் போன்று இன்னும் பல நூற்றாண்டுகள் வரை நம் ஊரின் பெருமை தொடர்ந்திருக்க வேண்டும்.
அதற்கு கல்வியில் நீங்கள் கரைசிறந்து விளங்கும் ஆவல் கொண்டிருக்க வேண்டும். நவீன உலகின் புதிய கலைகள் கற்றுக் கொள்வதில் முனைப்புக் காட்ட வேண்டும். அறிவியலும், ஆன்மீகமும் இரு கண்களாகக் கொள்ள வேண்டும்.
கடைசியாக அல்மனார் என்பது கல்ஹின்னை ஊரின் ஒரு அணிகலன். பேரொளி துலங்கும் ஒளிவிளக்கு. அதன் ஒளியும், கீர்த்தியும் மங்காமல் காப்பது நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
இவ்வண்ணம்:
M.H.M நியாஸ் ( Justice of Peace all island ).
Al manar old boy.
Director:
National peace council of Sri Lanka.
Chairman Medialink.
Phone Number:+94-0777814108.
Tags:
கல்ஹின்னை பொக்கிஷங்கள்
