டி20 உலக கோப்பை: தனி ஒருவனாக ஆஸி.,யை அச்சுறுத்திய டக்கர்..! அயர்லாந்தை வீழ்த்தி 2ம் இடத்திற்கு முன்னேறிய ஆஸி.,

டி20 உலக கோப்பை: தனி ஒருவனாக ஆஸி.,யை அச்சுறுத்திய டக்கர்..! அயர்லாந்தை வீழ்த்தி 2ம் இடத்திற்கு முன்னேறிய ஆஸி.,

 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று(31) நடந்தது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

பிரிஸ்பேனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பால்பிர்னி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் அஷ்டான் அகருக்கு பதிலாக ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ  வேட்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), லார்கன் டக்கர், ஹாரி டெக்டார், கர்டிஸ் காம்ஃபெர், ஜார்ஜ் டாக்ரெல், காரெத் டிலானி, மார்க் அடைர், பாரி மெக்கார்தி, ஃபியான் ஹேண்ட், ஜோஷுவா லிட்டில்.


முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஃபின்ச் பொறுப்புடன் நிலைத்து ஆட, மிட்செல் மார்ஷ் 22 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தனர்.

 அதன்பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ஆரோன் ஃபின்ச், 44 பந்தில் 63 ரன்கள் அடித்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்தில் 35 ரன்கள் அடித்தார். டிம் டேவிட் 10 பந்தில் 15 ரன்களும், மேத்யூ வேட் 3 பந்தில் 7 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 179 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 180 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்தது.

180 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியில் பால்பிர்னி (6), பால் ஸ்டர்லிங்(11), டெக்டார்(6), காம்ஃபெர்(0), டாக்ரெல் (0) ஆகிய 5 வீரர்களும் பவர்ப்ளேயிலேயே ஆட்டமிழந்தனர். டெலானி(14) மற்றும் அடைர் (11) ஆகிய இருவரும் டக்கருடன் இணைந்து சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் தனி ஒருவனாக நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார் டக்கர். மிட்செல் ஸ்டார்க் வீசிய 17வது ஓவரில் 18 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தினார் டக்கர். அயர்லாந்து அணியில் தனி ஒருவனாக போராடி 48 பந்தில் 71 ரன்களை குவித்த டக்கருக்கு மறுமுனையில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால் 18.1 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அயர்லாந்து.

42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கும் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான போட்டி அந்த அணிகளுக்கு மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவும் உற்றுநோக்கும் அந்த அணிக்கும் முக்கியமான போட்டி. 
க்ரூப் 1ஐ பொறுத்தமட்டில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்குமே அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இதில் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த 3 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
asianetnews

Post a Comment

Previous Post Next Post